
நடிகர் கார்த்தி நடிப்பில் வெளியான ”மெட்ராஸ்” படம் மூலம் அறிமுகமானவர் தான் நடிகர் லிங்கேஷ். அதனைத்தொடர்ந்து பரியேறும்பெருமாள், குண்டு, கபாலி போன்ற படங்களின் வில்லனாக நடித்து கவனம் பெற்றார். இதனையடுத்து காயல், காலேஜ் ரோடு ஆகிய படங்களில் கதாநாயகனாக நடித்திருக்கிறார். இந்த படங்கள் அனைத்தும் அடுத்தடுத்து வெளியீட்டுக்கு தயாராக இருக்கிறது.
இந்நிலையில் தற்பொழுது ஹெச் வினோத்திடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீவெற்றியுடன் இணைந்திருக்கிறார். ஸ்ரீவெற்றி இயக்கும் ”நாற்கரப்போர்” என்ற படத்தில் கதையின் நாயகனாக லிங்கேஷ் நடிக்கிறார். இவருக்கு ஜோடியாக கதாநாயகி அபர்நதி நடித்து வருகிறார்.
இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஶ்ரீ வெற்றி இயக்கத்தில் ஒளிப்பதிவாளர் திருவின் உதவியாளர் அர்ஜுன் ரவி ஒளிப்பதிவில் நிறைவுபெற்றிருக்கிறது. தொடர்ந்து அடுத்தக்கட்ட படப்பிடிப்பு தற்போது திண்டுக்கல் சுற்றுவட்டார பகுதிகளில் நடைப்பெற்று வருகிறது.
இதனிடையே “நாற்கரப்போர்” திரைப்படம் தமிழ் சினிமாவில் பெரும் அதிர்வை ஏற்படுத்தும் என்றும், தமிழ் சினிமா எப்போதும் நல்ல கதைகளை கைவிட்டதில்லை என்றும், தரமான இயக்குனர்களை தமிழ் சினிமா எப்போதும் உருவாக்கிக்கொண்டே தான் இருக்கும் அந்த வரிசையில் ஶ்ரீ வெற்றி இணைவார் என எதிர் பார்க்கலாம் என்றும், இந்தப்படம் தனக்கு மிக முக்கியமான படமாக இருக்கும் என்று நடிகர் லிங்கேஷ் தெரிவித்திருக்கிறார்.