"காசு வாங்கிக்கொண்டு ஓட்டுபோட வேண்டாம்" மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை!

"காசு வாங்கிக்கொண்டு ஓட்டுபோட வேண்டாம்" மாணவர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை!

காசு வாங்கிக்கொண்டு ஓட்டுபோட வேண்டாம், நம் விரலை வைத்து நம் கண்களையே குத்துகிறார்கள் என அரசியல் சூழலை சுட்டிக்காட்டி மாணவர்கள் கொளரவிப்பு நிகழ்வில் நடிகர் விஜய் தெரிவித்துள்ளது பேசுபொருளாகியுள்ளது.

சென்னை, நீலாங்கரையில் மாநில அளவில் 10 மற்றும் 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் முதலிடம் பிடித்த மாணவர்களை கொளரவிக்கும் நிகழ்வில் நடிகர் விஜய் பங்கேற்றார். விஜய் மக்கள் இயக்கம் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்வில் கலந்துகொண்ட அவர், அருகில் அமர்ந்த மாற்றுத்திறனாளி மாணவர் பரிசளித்த நினைவுப் பரிசைப் பெற்று கட்டியணைத்து நெகிழ்ச்சியுடன் பாராட்டினார்.

தொடர்ந்து மேடைக்கு சென்றபோதும், கீழே அமர்ந்திருந்த மாற்றுத்திறனாளி மாணவிக்கு இறங்கி வந்து பரிசளித்துச் சென்றார். இதையடுத்து உற்சாக வரவேற்புடன் மேடை வந்தடைந்த விஜய், ஆயிரக்கணக்கான மாணவ -மாணவியர் மத்தியில் அமர்ந்து புகைப்படம் எடுத்துக் கொண்டார். அசுரன் படத்தில் வரும் தனுஷின் வசனத்தை மேற்கோள் காட்டிப் பேசிய நடிகர் விஜய், தன்னுடைய கனவு சினிமாதான், அதை நோக்கியே பயணித்தேன் எனவும் குறிப்பிட்டார்.

கல்லூரி சென்று டிகிரி வாங்குவது மட்டும் முழுமையான கல்வி அல்ல எனவும் மதிப்பெண்கள் முக்கியம் என்றாலும் சிந்தனைக்கும் குணாதிசயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார். பெரியார், அம்பேத்கர், காமராஜர் பற்றி மாணவர்கள் தெரிந்துகொள்ள வேண்டும் எனவும் அவர் மாணவர்களிடையே வலியுறுத்தினார்.

சமூகவலைதளங்களில் 75 சதவீத செய்திகள் போலிச் செய்திகளாகவே வலம் வருவதாக தெரிவித்த அவர், பாடப் புத்தகங்களைத் தாண்டி வாசிப்புப் பழக்கத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும் எனவும் கூறினார். ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் என்ற விகிதத்தில் தொகுதிக்கு 15 கோடி ரூபாய் செலவு செய்கிறார்கள் எனில்,  ஒரு அரசியல்வாதி எவ்வளவு ஊழல் செய்திருப்பார் என புரிந்துகொள்ள வேண்டும் எனவும், நம் விரல்களை வைத்து நம் கண்ணையே குத்துகிறார்கள் எனவும் அரசியல் சூழலை சுட்டிக்காட்டி அவர் பேசினார்.

அடுத்த தலைமுறை வாக்களார்களே நீங்கள்தான் என்ற பொறுப்புணர்வுடன் செயல்பட வேண்டும் எனவும், காசு வாங்கிக் கொண்டு ஓட்டுபோட வேண்டாம் என பெற்றோரிடம் வலியுறுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார். மேலும், கல்வி முறையில் அரசியலும் இடம்பெற வேண்டும் எனவும் நடிகர் விஜய் கூறியது குறிப்பிடத்தக்கது.

தோல்வியடைந்த மாணவர்கள் மனம்தளரக் கூடாது என தெரிவித்து, வளர்ப்போம் கல்வி, வளர்க நண்பா நன்றி எனக்கூறி தனது உரையை நடிகர் விஜய் முடித்தார். இதைத்தொடர்ந்து 12ம் வகுப்புப் பொதுத்தேர்வில் 600க்கு 600 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்த மாணவி நந்தினிக்கு வைர நெக்லசை பரிசளித்தார். 

தொடர்ந்து, அடுத்தடுத்ததாக குடும்பத்துடன் மேடையேறிய மாணவர்களை அவர் கவுரவித்தது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com