‘ராயன்' திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, அந்த விருதைச் சுற்றி சமூக வலைதளங்களில் கடும் விவாதங்களும் சர்ச்சைகளும் நீடித்து வரும் நிலையில், அந்த சர்ச்சைகளுக்கு முதல்முறையாக நடிகர் தனுஷ் நேரடியாக பதிலளித்துள்ளார். "இந்தப் படத்தை விட தேசிய விருதுக்குத் தகுதியான என் பல படங்களுக்கு விருது கிடைக்கவில்லை; இப்போது கிடைத்த விருதுக்காக என்னை விமர்சிக்காமல் வாழ்த்துங்கள்" என்று அவர் உருக்கமாக பேசியுள்ளார்.
திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அருகே மஞ்சங்கரணையில் உள்ள வேல்ஸ் மருத்துவக் கல்லூரியில், தனது பிறந்த நாளை முன்னிட்டு நடைபெற்ற ரத்ததான முகாம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் நடிகர் தனுஷ் கலந்து கொண்டார். அப்போது, 'ராயன்' திரைப்படத்திற்கு தேசிய விருது கிடைத்தது தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சைகள் குறித்து முதன்முறையாக தனது கருத்தை வெளிப்படுத்தினார். அப்போது பேசிய அவர், "ராயன் படத்திற்கு தேசிய விருது கிடைத்ததைத் தொடர்ந்து, இந்தப் படத்தை விட பல படங்கள் விருதுக்குத் தகுதியானவை என்று ரசிகர்கள் கூறியதற்கு நான் தலைவணங்குகிறேன்.
அந்த கருத்தை நான் மதிக்கிறேன். 'புதுப்பேட்டை', 'மயக்கம் என்ன', 'மரியான்', 'வடசென்னை', 'கர்ணன்' போன்ற பல படங்களுக்கு தேசிய விருது கிடைக்கும் என்று பலரும் எதிர்பார்த்தார்கள். நானும் எதிர்பார்த்தேன். ஆனால், சில விஷயங்கள் எவ்வளவு முயன்றாலும் நம் விருப்பப்படி நடக்காது; சரியான நேரம் வந்தால் தானாகவே அமையும். இந்த முறை அது அமைந்தது. அதனால்தான் இந்த விருது கிடைத்திருக்கிறது" என்று கூறினார்.
மேலும் அவர், "ஒரு தமிழனாக எனக்கு இரண்டு தேசிய விருதுகள் கிடைத்திருப்பது மிகப்பெரிய பெருமை. தயவுசெய்து என்னை தட்டிவிடாமல், தட்டிக்கொடுங்கள். 'இந்தப் படத்திற்கு ஏன் தேசிய விருது கொடுத்தார்கள்?' என்று கேட்பவர்கள், 'இவ்வளவு நல்ல படங்களுக்கு ஏன் தேசிய விருது கொடுக்கவில்லை?' என்று யாரும் கேட்கவில்லை. அதுதான் எனக்கு வருத்தமாக இருக்கிறது" என்று உணர்ச்சிப்பூர்வமாக பேசினார். தேசிய விருதைச் சுற்றியுள்ள சர்ச்சைகளுக்கு தனுஷ் அளித்த இந்த விளக்கம் தற்போது சமூக வலைதளங்களில் பரவலாக பேசப்பட்டு வருகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.