அன்று விரட்டப்பட்டோம்.. இன்று ஆள்கிறோம்! ஜிம்மி ஃபாலன் ஷோவில் 'கோமகட்ட மாரு' பற்றி தில்ஜித் தோசாஞ்ச் உருக்கம் - என்ன நடந்தது 1914-ல்?

கனடாவிற்குச் சென்று வேலை தேட தங்களுக்கு உரிமை உண்டு என்று நம்பி இந்தப் பயணத்தைத் தொடங்கினர்...
Diljit Dosanjh
Diljit Dosanjh
Published on
Updated on
2 min read

உலகப் புகழ்பெற்ற அமெரிக்காவின் 'த டுநைட் ஷோ வித் ஜிம்மி ஃபாலன்' (The Tonight Show Starring Jimmy Fallon) நிகழ்ச்சியில் இரண்டாவது முறையாகப் பங்கேற்றுள்ள பஞ்சாபி பாப் கலைஞர் தில்ஜித் தோசாஞ்ச், கடந்த 1914-ஆம் ஆண்டு நடந்த 'கோமகட்ட மாரு' (Komagata Maru) சம்பவத்தை நினைவுகூர்ந்து பேசியிருப்பது இணையத்தில் வைரலாகி வருகிறது. கனடாவின் வான்கூவர் நகரில் உள்ள பிசி பேலஸ் மைதானத்தில் (BC Place stadium) 55,000-க்கும் மேற்பட்ட மக்கள் முன்னிலையில் தான் நடத்திய பிரம்மாண்ட இசை நிகழ்ச்சியின் உணர்ச்சிகரமான பின்னணியை அவர் அப்போது விளக்கினார். "100 ஆண்டுகளுக்கு முன்பு இதே இடத்தில் எங்கள் மக்கள் நுழைய அனுமதி மறுக்கப்பட்டது, ஆனால் இன்று அதே இடத்தில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னிலையில் நாங்கள் நிற்கிறோம்" என்று அவர் பெருமிதத்துடன் தெரிவித்தார்.

தற்போது தில்ஜித் தோசாஞ்ச் குறிப்பிட்ட அந்த கோமகட்ட மாரு சம்பவம் என்பது இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் ஒரு மிக முக்கியமான மற்றும் துயரமான நிகழ்வாகும். 1914-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம், சிங்கப்பூரில் வசித்து வந்த சீக்கியத் தொழிலதிபர் பாபா குருதித் சிங் என்பவர் 'கோமகட்ட மாரு' என்ற ஜப்பானிய நீராவி கப்பலை வாடகைக்கு எடுத்து, ஹாங்காங்கில் இருந்து கனடாவிற்குப் பயணம் மேற்கொண்டார். இந்தக் கப்பலில் 340 சீக்கியர்கள், 24 முஸ்லிம்கள் மற்றும் 12 இந்துக்கள் என மொத்தம் 376 இந்தியர்கள் இருந்தனர். பிரிட்டிஷ் ஆட்சியின் கீழ் இருந்த இந்தியர்கள், அதே பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்தின் மற்றொரு பகுதியான கனடாவிற்குச் சென்று வேலை தேட தங்களுக்கு உரிமை உண்டு என்று நம்பி இந்தப் பயணத்தைத் தொடங்கினர்.

ஆனால், இந்தியர்களின் வருகையைத் தடுக்க அப்போதைய கனடிய அரசு 'தொடர்ச்சியான பயண ஒழுங்குமுறை' (Continuous Journey Regulation) என்ற ஒரு விசித்திரமான சட்டத்தைக் கொண்டு வந்தது. இதன்படி, இந்தியாவிலிருந்து நேரடியாக எந்தத் தங்குமிடமும் இல்லாமல் வரும் கப்பல்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அக்காலத்தில் இந்தியாவிலிருந்து கனடாவிற்கு அத்தகைய நேரடி கப்பல் வசதி இல்லை என்பதால், இது மறைமுகமாக இந்தியர்களைத் தடுக்கும் ஒரு இனவெறிச் சட்டமாகவே பார்க்கப்பட்டது. மே 23, 1914 அன்று வான்கூவர் துறைமுகத்தை அடைந்த கோமகட்ட மாரு கப்பலை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

கிட்டத்தட்ட இரண்டு மாதங்கள் அந்தக் கப்பல் கடலிலேயே நிறுத்தி வைக்கப்பட்டது. கப்பலில் இருந்த பயணிகளுக்கு உணவு, குடிநீர் மற்றும் மருத்துவ வசதிகள் வழங்கப்படாமல் அவர்கள் மிகவும் துன்புறுத்தப்பட்டனர். 376 பயணிகளில் வெறும் 24 பேருக்கு மட்டுமே தரையிறங்க அனுமதி வழங்கப்பட்டது. மற்றவர்கள் இரண்டு மாதப் போராட்டத்திற்குப் பிறகு, ஜூலை 23 அன்று கனடிய கடற்படை கப்பலான 'எச்எம்சிஎஸ் ரெயின்போ' (HMCS Rainbow) மூலம் கட்டாயமாகத் திருப்பி அனுப்பப்பட்டனர். தங்கள் சொந்த நாட்டு மக்களிடமே தர்மசங்கடமான நிலையில் திரும்பிய அந்தப் பயணிகளின் துயரம் அத்துடன் முடிந்துவிடவில்லை. கப்பல் செப்டம்பர் 27, 1914 அன்று இந்தியாவின் கொல்கத்தா அருகே உள்ள 'பட்ஜ் பட்ஜ்' (Budge Budge) துறைமுகத்தை அடைந்தது. அங்கிருந்த பிரிட்டிஷ் போலீசார், கப்பலில் இருந்தவர்களைச் சுதந்திரப் போராட்டக் குழுவான 'கதர் கட்சி'யின் (Ghadar Party) புரட்சியாளர்கள் என்று சந்தேகித்தனர். பயணிகளை உடனடியாக ஒரு சிறப்பு ரயிலில் ஏற்றி பஞ்சாப்பிற்கு அனுப்ப போலீசார் முயன்றனர். ஆனால், தங்களை அவமானப்படுத்திய பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகப் போராடத் துணிந்த பயணிகள் ரயிலில் ஏற மறுத்தனர்.

இதனால் ஏற்பட்ட மோதலில் பிரிட்டிஷ் போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 20 பயணிகள் சம்பவ இடத்திலேயே கொல்லப்பட்டனர். குருதித் சிங் உள்ளிட்ட பலர் சிறையில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் இந்திய சுதந்திரப் போராட்ட நெருப்பை உலகம் முழுவதும் இருந்த இந்தியர்களிடையே இன்னும் அதிகமாகத் தூண்டியது. குறிப்பாக வட அமெரிக்காவில் இருந்த இந்தியர்கள் ஒன்றிணைந்து பிரிட்டிஷ் ஆட்சிக்கு எதிராகக் குரல் கொடுக்க இது ஒரு முக்கியக் காரணமாக அமைந்தது. பல தசாப்தங்களுக்குப் பிறகு, 2016-ஆம் ஆண்டு கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இந்தச் சம்பவத்திற்காகப் பாராளுமன்றத்தில் அதிகாரப்பூர்வமாக மன்னிப்புக் கேட்டார்.

2021-ஆம் ஆண்டு வான்கூவர் நகர சபையும் தனது வரலாற்றுத் தவறுக்காக மன்னிப்பு கோரியது. தில்ஜித் தோசாஞ்ச் தனது பேட்டியில் குறிப்பிட்டது போல, அந்த கோமகட்ட மாரு கப்பல் தடுத்து நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து வெறும் 2 கிலோமீட்டர் தொலைவில்தான் அவர் இசை நிகழ்ச்சி நடத்திய ஸ்டேடியம் அமைந்துள்ளது. "அன்று நீங்கள் எங்களை உள்ளே விடவில்லை, ஆனால் இன்று 55,000 இந்தியர்கள் அதே இடத்தில் நிரம்பி வழிகிறார்கள்" என்று தில்ஜித் கூறியது, கடந்த காலத்தின் வலியையும் தற்காலத்தின் வெற்றியையும் இணைக்கும் ஒரு வரலாற்றுத் தருணமாகப் பார்க்கப்படுகிறது. இந்த உணர்ச்சிகரமான பேச்சு தற்போது சமூக வலைதளங்களில் இந்தியர்களால் பெருமையுடன் பகிரப்பட்டு வருகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com