
"நாம ஜெயிக்கிறோம், சம்பாதிக்கிறோம், தோக்குறோம், ஒண்ணுமே இல்லாது போறோம். இது எல்லாத்தையும் தாண்டி நாம இஷ்டப்பட்ட வேலையை இஷ்டப்பட்ட நேரத்துல செய்கிறோம் என்பது எவ்வளோ பெரிய பாக்கியம்..!"
இந்த வரிகளை பாலு மகேந்திரா ஒரு நேர்காணலில் சொல்லியிருப்பார். உலகியல் நாடங்களை தாண்டி கலையை முழுக்க முழுக்க நேசித்த ஒருவரால் மட்டுமே இத்தகு வார்த்தைகளை உதிர்க்க முடியும்..
1970-களின் இறுதி காலம் தமிழ்சினிமாவின் “கிளாசிக் காலத்தின் துவக்கம்” என்றே சொல்லலாம். K.பாலச்சந்தர் துவங்கி பாரதிராஜா, பாலுமகேந்திரா, பாக்கியராஜ் என பலரும் அவர்களின் சமகால வாழ்வியலை படமாக்கிக்கொண்டிருந்தனர்.
இலங்கையில் மட்டக்களப்பு அருகில் உள்ள கிராமத்தில் 1939-ல் பிறந்தவர் பாலு. சிறுவயதில் அவர் சென்ற பள்ளி சுற்றுலா பயணத்தின்போது அவர் பார்த்த முதல் ஆங்கில பட ஷூட்டிங் தான் அவரை சினிமாவுக்குள் தள்ளியது. அன்று யாரோ பெயர் தெரியாத இயக்குனர் படப்பிடிப்பு தலத்தில் rain என்று சொன்ன உடனே மழை பெய்ய துவங்கியுள்ளது, அந்த தருணத்தில் அவருக்கு அது ஏதோ மேஜிக் போல தோன்றிய அந்த தருணம் தான் பிற்காலத்தில் தலைமுறைகளை கடந்த சிறப்பான படைப்புகளை உருவாக்க ஆதாரமானது.
1977-ல் வெளியான 'கோகிலா' என்ற கன்னட படம் தான்பாலு மகேந்திராவின் முதல் படம். அப்படம் பாலுமகேந்திராவுக்கு முதல் தேசிய விருதினை பெற்றுத் தந்தது.
தமிழில் வெளியான ‘அழியாத கோலங்கள்” அதுவரை தமிழ்சினிமாவின் திறக்காத கதவுகளை திறந்ததது.
1980 -ல் வெளியான “மூடுபனி” திரைப்படத்தில்தான் முதன்முதலில் இளையராஜாவும் பாலுவும் கைக்கோர்த்தனர்.
பிரதாப் போத்தன், ஷோபா இணைந்து நடித்த அப்படத்தில் வரும் ‘என் இனிய பொன் நிலவே’ பாடல்தான் இன்று வரை நம் அனைவரின் பிளே லிஸ்டில் முதலில் இருக்கும்.
ரெட்டை வால் குருவி, சதிலீலாவதி உள்ளிட்ட படங்கள் முற்றிலும் மாற்று சினிமா பாதையை தமிழ் சினிமாவிற்கு வகுத்தளித்தது.
நீங்கள் கேட்டவை..!
பாலு மகேந்திராவால் வெறும் ஆர்ட் படங்களை மட்டுமே இயக்க முடியும் அவரால் கமர்ஷியல் வெற்றியை பெறவே முடியாது என எழுதித்தள்ளினர். சக இயக்குனர்களும் கூட ‘உங்களால் கமர்ஷியல் வெற்றியை தர முடியுமா? எனக்கேட்டனர்.
1984, ஜுன் 28 அன்று ‘நீங்கள் கேட்டவை’ என்ற படத்தின் மூலம் பதில் தந்தார். ‘ஒரு விதவை தாய்க்கு நாடக்கும் கொடூரத்தை கண் முன்னே கண்ட இரு ஆண் குழந்தைகள் வெவேறு காலச்சூழலில் வளர்ந்து தன் தாயின் சாவுக்கு பழிவாங்கும் நிகழ்வே’ இப்படத்தின் கதை மிக சாதரணமான ஒரு ஒன்லைனரை வைத்துக்கொண்டு நேர்த்தியான காட்சிமைப்பு மூலம் அப்படத்தை வெற்றியடைய செய்திருப்பார்.
ஒளி ஓவியன்
பாலு மகேந்திரா “available lighting” என்று சொல்லப்படுகிற குறைவான இருக்க கூடிய வெளிச்சத்தை வைத்தால் படங்களை உருவாக்குவது அவரின் தனிச்சிறப்பு.
தலைமுறைகளை தாண்டி நிற்கும் ‘மூன்றாம் பிறை”திரைப்படம் பெருமளவில் பேசப்பட்டது. அப்படி ஆகச்சிறந்த காதல் படத்தை அந்த காலகட்டத்தில் யாரும் உருவாகவில்லை. அப்படத்தின் காட்சியமைப்புகளும் லைட்டிங்கும் நம்மை படத்தோடு சேர்ந்து பயணிக்கவைக்கும். பாடல்களை பற்றி சொல்லவே தேவை இல்லை.’கண்ணே கலைமானே’ ‘பூங்காற்று புதிரானது’ பாடல்களே அதற்கு சாட்சி.
இவரின் வீடு திரைப்படத்தில் ‘சிறந்த ஒளிப்பதிவை’ நிகழ்த்திக்காட்டியிருப்பார். வெடித்து மூலம் ஒளியை பவுன்ஸ் செய்து காட்சிகளை உருவாகியிருப்பார்
கட்டுப்பாடுகளை உடைத்தவர்…
தமிழ் சினிமாவில் ‘கருப்பு அழகியலை” வெளிப்படுத்தியதில் பாலுவுக்கு நிகர் பாலுவே .. சில்க் ஸ்மிதா, அர்ச்சனா, ஷோபா, ராதிகா என அவரின் படத்தில் வரும் அணைத்து கதாநாயகிகளும் ‘டஸ்கி’ பெண்கள்தான்.
அதீத முகப்பூச்சு எதுவும் இல்லாமல் ‘எண்ணெய் வடிய வேர்வை பூத்த முகங்களே அவரின் ஆஸ்தான கதை சொல்லிகள்.பெரும் பணம் புழங்கக்கூடிய திரைத்துறையில் ‘படைப்பை’ மட்டுமே நம்பி அதற்காக வாழ்நாளெள்ளாம் நேர்மையாக உழைத்த பிதாமகன் பாலுமகேந்திராவின் பிறந்த நாள் இன்று..
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்