நடிகர் சூர்யா, சமூக நீதியை நிலைநாட்டும் தனது முயற்சிகளின் மூலம் ஒரு திரை நட்சத்திரத்திற்கான அர்த்தத்தை மறுவரையறை செய்துள்ளார் என்று இயக்குநர் வெற்றிமாறன் தெரிவித்துள்ளார்.
உண்மைச் சம்பவத்தை அடிப்படையாக் கொண்டு த.செ.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, மணிகண்டன், லிஜோமோல் ஜோஸ், ரஜிஷா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான ஜெய் பீம் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்தப் படத்தைப் பார்த்துவிட்டு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்கள், பல்வேறு திரையுலக பிரபலங்கள் பாராட்டும், ஆதரவும் தெரிவித்து வரும் நிலையில், பா.ம.க. தரப்பில் எதிர்ப்பு கிளம்பியது. பா.ம.க. இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், சூர்யாவுக்கு 9 கேள்விகளை முன்வைத்து அனுப்பிய கடிதத்திற்கு வெறும் 9 வார்த்தையில் பதில் தெரிவித்திருந்தார் சூர்யா. அதுமட்டுமல்லாமல் சூர்யாவிற்கும், அவரது குடும்பத்தினருக்கும் மிரட்டல்களும் விடுக்கப்பட்ட நிலையில் அவரது வீட்டிற்கு துப்பாக்கி ஏந்திய போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருக்கின்றனர்.
திரைத்துறை பிரபலங்கள் பலரும் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவாக தங்கள் கருத்துகளைப் பதிவு செய்து வருகின்றனர். அந்த வரிசையில் இயக்குநர் வெற்றிமாறனும் இணைந்துள்ளார்.
இது தொடர்பாக வெற்றிமாறன் தனது ட்விட்டர் பக்கத்தில், "இந்தப் படத்தின் மூலம் பாதிக்கப்பட்டவர்களின் அவல நிலையை உலகறியச் செய்ய வேண்டும் என்ற இயக்குநர் த.செ.ஞானவேலின் பொறுப்புணர்வும், சமூக நீதியை நிலைநிறுத்துவதில் திரையிலும், நிஜத்திலும் நடிகர் சூர்யா மேற்கொள்ளும் தொடர் முயற்சிகளும் உண்மையிலேயே ஊக்கமளிக்கின்றன.
இத்தகைய படங்கள் சமூக நீதி ஏற்படக் கூடாது என விரும்புவோருக்கு பதற்றத்தை ஏற்படுத்துவது இயல்பே. #WeStandWithSuriya சமூகத்தில் நிலவும் பேதங்களையும், அநீதிகளையும் கேள்வி கேட்கும் திரைப்படங்களும் கூட சமூக நீதி ஆயுதங்களே. ஆகையால் நாங்கள் 'ஜெய் பீம்' படக்குழுவுடன் எப்போதும் நிற்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.
சரியான விஷயத்தைச் செய்வதற்காக யாரும் தாழ்வாக உணரும் நிலைக்குத் தள்ளப்படக் கூடாது. நடிகர் சூர்யா, ஒரு திரை நட்சத்திரத்திற்கான அர்த்தத்தை மறுவரையறை செய்துள்ளார்” என்று பதிவிட்டுள்ளார்.