“அட்ஜெஸ்ட்மென்ட் பண்ணா சினிமால நடிக்கலாம்” - வைரலாகும் கவிதை கோபால் ஆடியோ.. பின்னணியில் இருந்து வரும் ‘ஹஸ்கி வாய்ஸ்’ யார்?

திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால் சில அட்ஜஸ்ட்மென்ட்கள் செய்ய வேண்டும் என்றும்...
kavithai  Gopal Sexual Harassment Allegation
kavithai Gopal Sexual Harassment Allegation
Published on: 
Updated on: 
1 min read

சமூக வலைதளங்களில் நேர்காணல் பேட்டி ஒன்றில் “கண்ணீரும் உப்புதான் கடல் நீரும் உப்புதான்” என்ற கவிதை சொல்லி 'கவிதை கோபால்' என்ற பெயரில் வைரலானவர் கோபால். இவர் சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாகக் கூறி இளம்பெண்ணிடம் பாலியல் ரீதியாக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வற்புறுத்தியதாகப் புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக நெல்லையைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர், நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். நெல்லை தச்சநல்லூர் பகுதியைச் சேர்ந்தவர் 22 வயதுடைய அஸ்வினி மேரி (22). பி.ஏ. பட்டதாரியான இவர், இன்ஸ்டாகிராமில் பிரபலமாக இருந்து வருகிறார்.

இந்நிலையில், இரண்டு நாட்களுக்கு முன்பு கவிதை கோபால் என்பவர் அஸ்வினி மேரியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டுள்ளார். அப்போது, தனது நண்பர் ஒருவர் மூலம் அஸ்வினி மேரியின் தொலைபேசி எண்ணைப் பெற்றதாகக் கூறிய அவர், திரைப்படங்களில் நடிக்க விருப்பம் உள்ளதா எனக் கேட்டுள்ளார். தொடர்ந்து, திரைப்படங்களில் நடிக்க வாய்ப்பு கிடைக்க வேண்டுமானால் சில அட்ஜஸ்ட்மென்ட்கள் செய்ய வேண்டும் என்றும், அதற்காகப் பணம் கொடுக்க வேண்டும் என்றும் கவிதை கோபால் கூறியதாகப் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இயக்குனர், தயாரிப்பாளர் மற்றும் தன்னுடன் என மூன்று பேருடன் உடல் ரீதியாகவும் அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வேண்டும் என ஆபாசமாகப் பேசியதுடன், உடனடியாகச் சென்னைக்கு வருமாறு வற்புறுத்தியதாகவும் அஸ்வினி மேரி குற்றம்சாட்டியுள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த அவர், தனது உறவினர் மூலம் நெல்லை மாநகர காவல் ஆணையாளர் அலுவலகத்தில் புகார் மனு அளித்துள்ளார். அதில், தன்னிடம் ஆபாசமாகப் பேசி, பாலியல் ரீதியாக அட்ஜஸ்ட்மென்ட் செய்ய வற்புறுத்திய கவிதை கோபால் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை விடுத்துள்ளார்.

கவிதை கோபால் தனது வாட்ஸ்அப் முகப்புப் படத்தில் தமிழக முதலமைச்சர் விஜய்யின் புகைப்படத்தை வைத்திருப்பதாகவும் அஸ்வினி மேரி புகாரில் குறிப்பிட்டுள்ளார். இதுபோன்ற செயல்களில் அவர் ஈடுபடுவதால் தமிழக வெற்றிக் கழகத்திற்கும் அவப்பெயர் ஏற்படும் நிலை உள்ளதாகக் கூறியுள்ள அவர், இந்த விவகாரத்தை முதலமைச்சரின் கவனத்திற்குக் கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.

அதுமட்டுமல்லாமல் தற்போது கோபால் இளம் பெண்ணுடன் பேசும் ஆடியோ தற்போது வெளியாகி வைரலாகி வரும் நிலையில் அதில் கோபால் இளம்பெண்ணுடன் பேசும்போது அவரை இவ்வாறு பேச சொல்லி மற்றொருவர் பேசும் குரலும் தெளிவாக கேட்கிறது. எனவே தற்போது கோபாலை இவ்வாறு பேச சொல்லி அருகில் இருந்து தூண்டிவிடுவது யார் அவரது பின்னணி என்ன? என்பது குறித்தும் விசாரணை நடத்த வேண்டும் என சமூக வலைத்தளத்தில் கோரிக்கை எழுந்துள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்