சென்னை - 28 படத்தின் மூலம் தமிழ் திரையுலகில் இளைஞர்கள் மத்தியில் பிரபலமானவர் வெங்கட்பிரபு. சரோஜா, கோவா, மங்காத்தா, பிரியாணி, மாசு என்கிற மாசிலாமணி, மாநாடு, கஸ்டடி என பத்து திரைப்படங்களை மட்டுமே இயக்கியிருந்தாலும், வெங்கட் பிரபுவுக்கென ரசிகர் பட்டாளம் உண்டு.
வெங்கட்பிரபு படங்கள் என்றால் இளமை ததும்ப ததும்ப துள்ளலான காட்சிகள், யதார்த்தமான அதே நேரம் காலம் கடந்தும் பேசக்கூடிய வகையில் நகைச்சுவை, கூடவே ஏகத்துக்கும் அதிகமான நட்சத்திரப் பட்டாளங்கள் நிறைந்திருப்பதுண்டு.
தமிழ் சினிமாவில் உள்ள இயக்குநர்களில் வெங்கட்பிரபு மிகவும் தனித்துவமானவர். எல்லாவற்றையுமே நகைச்சுவையாக எடுத்துக் கொள்பவர். இவர் மட்டுமல்லாமல் வெங்கட்பிரபுவின் சகாக்கள் அனைவரையும் ஒரே வார்த்தையால் கூறினால், ஹாலிவுட்டின் ஹேங்ஓவர் பாணி போல இவர்கள் கோலிவுட்டின் நரிக்கூட்டம்.
2011-ம் ஆண்டு அஜித், அர்ஜுன், திரிஷா, ஆண்ட்ரியா ஆகியோர் நடிப்பில் உருவான மங்காத்தா திரைப்படம் வெங்கட்பிரபு திரைவரலாற்றில் அசைக்க முடியாத சாதனையை பெற்றது.
அஜித்தின் 50-வது திரைப்படமாக வெளியான மங்காத்தா, முழுக்க முழுக்க அஜித் ரசிகர்களை திருப்திப்படுத்தும் விதமாக அமைந்தது. இதையடுத்து ரசிகர்கள் மத்தியில் பார்ட் - 2 மோகம் பிறந்ததைத் தொடர்ந்து, பலரும், மங்காத்தா-2 எப்போது வரும்? என கேட்டு வந்தனர்.
இந்நிலையில் மாநாடு என்ற வெற்றிப்படத்தைக் கொடுத்த வெங்கட்பிரபு, விஜய்யை வைத்து தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம் என்ற படத்தை இயக்கியிருக்கிறார். இதில் விஜய்யுடன் பிரசாந்த், பிரபுதேவா, ஜெயராம், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடித்துள்ளனர்.
குறிப்பாக 80-களில் காதல் படங்களில் நடித்து வந்த மோகன், கோட் படத்தில் வில்லனாக களமிறங்குகிறார். கோட் பட வெளியீட்டுக்கு இன்னும் இரண்டே நாட்கள் உள்ள நிலையில், தமிழ்நாட்டில் பெரும்பாலான திரையரங்குகள் ஹவுஸ்ஃபுல்லாகி வருகிறது.
இதனிடையே கோட் படக்குழுவினர் யூ-டியூப் சேனல்களுக்கு பேட்டியளித்த நிலையில், இதைக் கவனித்த ரசிகர்கள் மனம் வெதும்பி வருகின்றனர். காரணம், பேட்டி என்கிற பேரில் படத்தின் முக்கிய காட்சிகளையும், முக்கிய திருப்புமுனைகளையும் முன்பே கூறி விடுவதாக புலம்புகின்றனர்.
மறைந்த கேப்டன் விஜயகாந்தை ஏ.ஐ. தொழில்நுட்பம் மூலம் உருவாக்கியிருப்பது உறுதியான தகவல்தான் என்றாலும், அந்த கேரக்டர் வரும்போது திரையரங்கு தீப்பிடிக்கும் என்றெல்லாம் பேட்டிகளில் கூறி வருகின்றனர்.
மேலும் படத்தின் இறுதியில் அஜித் வருவதாக வைபவ் கூறியிருப்பது ஆர்வத்தையும், அதே நேரம் ஏமாற்றத்தையும் அளித்துள்ளது. அஜித்தும், விஜய்யும் இணைந்து நடிப்பதை மக்கள் பார்ப்பதற்கு ஆர்வமாக உள்ள நிலையில், இதை சர்ப்ரைஸாகக் கொடுத்தால்தான் அது வெற்றியடையும் என பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
கோட் படத்தின் படப்பிடிப்பின்போது, அஜித், சிவகார்த்திகேயன் ஆகியோரை நேரில் சந்தித்தார் வெங்கட்பிரபு. இவர்களில் சிவகார்த்திகேயன் படத்தின் இறுதியில் தோன்றுவதாகவும் தகவல்கள் வெளியானது.
இதுபோதாதென, விஜய் வரும் வாகனத்தின் எண் சி.எம். 2026 என பிரேம்ஜி சொல்ல, அப்படியென்றால் 2026-ம் ஆண்டு முதலமைச்சராகும் ஆசையை மறைமுகமாக சொல்கிறாரா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்புகின்றனர்.
படத்தின் இயக்குநர் வெங்கட்பிரபு, அவரது தம்பி பிரேம்ஜி, நடிகர் வைபவ் உள்ளிட்டோர் ஏராளமான சஸ்பென்ஸ்-களை உடைத்தெறிந்ததால் மக்களிடையே இதற்கு மேல் திரையில் காண்பதற்கு என்ன உள்ளது? என்ற ஆதங்கம் ஏற்பட்டுள்ளது.