மக்களின் நாயகன் ஆகும் லெஜெண்ட் சரவண அருள்!!!

சமீபத்தில் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வரும் நிலையில், படத்தின் நாயகன் தி லெஜெண்ட் சரவணன், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புப் பெற்று வருகிறார்.
மக்களின் நாயகன் ஆகும் லெஜெண்ட் சரவண அருள்!!!

தி லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ் என்ற ஜவுளி சாம்ராஜியத்தை நடத்தி வரும் தி லெஜெண்ட் சரவண அருள், தற்போது தனது சொந்த தயாரிப்பில், எந்த ஒரு சினிமா பின்னணியும் இல்லாமல், தனது சொந்த முயற்சியில், ஒரு படத்தில் கதாநாயகனாக களமிறங்கியுள்ளார். தி லெஜெண்ட் என்ற தலைப்பில் உலக திரையரங்குகளில் வெளியான நிலையில், மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பைப் பெற்று வருகிறார் சரவணன்.

பான் இந்தியா படம்:

ஜெடி ஜெர்ரி இயக்கத்தில், கோபுரம் பிக்சர்ஸ் வெளியிட்ட இந்த படமானது, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி என ஐந்து மொழிகளில், சுமார் 2500 தியேட்டர்களில் உலகம் முழுவதும் வெளியாகியது குறிப்பிடத்தக்கது. மாபெரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் என்று கூறும் அளவிற்கு, தனது முதல் படத்திலேயே, இந்த அளவிற்கான வரவேற்பு வேறு எந்த நடிகருக்கும் தமிழ் சினிமாவில் இது வரைக் கிடைத்தது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

பிரம்மாண்ட படக்குழு:

மேலும்,மறைந்த நடிகர் விவேக் அவர்களின் இறுதி படமாக இந்த தி லெஜெண்ட் படம் இருக்க, அவருடன், பல பெரும் நட்சத்திரங்களான, பிரபு, மயில்சாமி, நாசர், தம்பி ராமைய்யா, சுமன், ராய் லட்சுமி, ரோபோ சங்கர் போன்ற பலரும் நடித்துள்ளனர்.

ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைப்பில் உருவான இந்த படத்தின் பாடல்களுக்கு, பாடல் வரிகளை வைரமுத்து, மதன் கார்க்கி, பா.விஜய், கபிலன், சினேகன் ஆகியோர் எழுதியுள்ளனர். இந்த படத்தில் இருந்து வெளியான பாடல்களான வாடிவாசல், மொசுலோ மொசுலு போன்ற பாடல்கள் வெளியான சிறிது நேரத்திலேயே பல லைக்குகளையும் பார்வையாளர்களையும் அள்ளியது.

ஆக்டிவாக இருக்கும் அண்ணாச்சி:

இந்நிலையில், படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, தற்போது, தனது சோசியல் மீடியாக்களில் தொடர்ந்து ஆக்டிவாக இருக்கும் தி லெஜெண்ட் சரவண அருள், பல பதிவுகளைப் போட்டு வருகிறார். அதில், சமீபத்தில் நடந்த படத்தின் மெகா இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில், பத்திரிக்கையாளர்களை சந்தித்தத் தருணங்களைப் போட்டோக்களாக தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார்.

விரைவில் சந்திக்கிறேன்... சந்திக்கிறோம்…

கருப்பு கோட் சூட் அணிந்து, பிரம்மாண்டமாக இருக்கும் லெஜெண்ட் சரவண அருள், தனது பதிவில், சென்னையில் நடந்த கிராண்ட் இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவின் தருணங்கள் என எழுதி, “ஊடக நண்பர்களுக்கு வணக்கம்… உங்கள் அன்பிற்க்கும் ஆதரவிற்க்கும் மனமார்ந்த நன்றி!!! விரைவில் சந்திக்கிறேன்... சந்திக்கிறோம்…” என்று பதிவிட்டிருந்தார். 

“இரண்டாம் பாகம் வேண்டும் தலைவா!

பத்து பெரும் முன்னணி நாயகிகள் வைத்து நடத்திய இந்த பிரம்மாண்ட இசை மற்றும் ட்ரெயிலர் வெளியீட்டு விழாவில், பத்திரிக்கையாளர்களின் ஆதரவைக் கேட்கும் தி லெஜெண்ட் சரவண அருளின் வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

மேலும், ஒரு சிலர், “படத்தின் இரண்டாம் பாகம் குறித்து தகவல் வெளியிடுங்கள் தலைவா!” என்றும் கமெண்ட் செய்து வருவது குறிப்பிடத்தக்கது.

logo
Malaimurasu Seithigal TV
www.malaimurasu.com