
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் உலக அளவில் மிகப் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டுள்ளார். குறிப்பாக, மலேசியா, ஜப்பான் போன்ற நாடுகளில் அவருக்கு ரசிகர்கள் அதிகம். இந்த பிரபலத்தைப் பயன்படுத்தி சில ஏமாற்று வேலைகளும் நடப்பதுண்டு. அப்படி ஒரு சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.
மலேசியாவைச் சேர்ந்த 'மாலிக் ஸ்ட்ரீம்ஸ்' (Malik Streams) என்ற விநியோக நிறுவனம், தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு போஸ்டரை வெளியிட்டுள்ளது. அதில், "'கூலி' படத்தைப் பார்ப்பவர்கள் மற்றும் போட்டியில் வெற்றி பெறுபவர்களுக்கு, ரஜினிகாந்துடன் நேரில் சந்திக்கும் அரிய வாய்ப்பு காத்திருக்கிறது" என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்தப் போட்டிக்கு "கூலி வாட்ச் & வின் கான்டெஸ்ட்" (COOLIE WATCH & WIN CONTEST) என்று பெயரிடப்பட்டிருந்தது.
இந்தப் போட்டியில் கலந்துகொள்வதற்கு சில வினோதமான நிபந்தனைகளும் விதிக்கப்பட்டிருந்தன:
போட்டியாளர்கள் 'கூலி' படத்தின் டிக்கெட்டுகளை வாங்க வேண்டும்.
வாங்கிய டிக்கெட்டுகளைத் தங்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் (பொதுக் கணக்காக இருக்க வேண்டும்) #COOLIEWW2025 என்ற ஹேஷ்டேக் உடன் பதிவிட வேண்டும்.
ஒரு கணக்கிற்கு ஒருமுறை மட்டுமே பதிவு செய்ய முடியும்.
குறைந்தபட்சம் 50 டிக்கெட்டுகளை வாங்கியிருக்க வேண்டும்.
அதிக டிக்கெட்டுகளை வாங்கிய முதல் மூன்று பேருக்கு ரஜினிகாந்தைச் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று அந்த விளம்பரம் கூறியிருந்தது.
இந்த விளம்பரம் இணையத்தில் வேகமாகப் பரவி, ரஜினிகாந்தின் கவனத்திற்கு வந்ததும், அவரது குழு உடனடியாக ஒரு அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டது. ரஜினிகாந்தின் மக்கள் தொடர்பாளர் ரியாஸ் அஹ்மது, தனது சமூக வலைத்தள பக்கத்தில் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில், "அனைவருக்கும் வணக்கம். மலேசியாவில் மாலிக் ஸ்ட்ரீம்ஸ் நிறுவனம் விளம்பரப்படுத்தும் 'மீட் & க்ரீட் தலைவர்' போட்டி முற்றிலும் போலியானது, அங்கீகரிக்கப்படாதது. தலைவரிடம் இருந்து எந்தவித முன் அனுமதியும் பெறாமல் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது என்பதைத் தெளிவுபடுத்த விரும்புகிறோம்" என்று கூறப்பட்டுள்ளது.
மேலும், "ரசிகர்களும் பொதுமக்களும் இதுபோன்ற தவறான செயல்களில் கலந்துகொள்ள வேண்டாம் என்று நாங்கள் உறுதியாக அறிவுறுத்துகிறோம். ரசிகர்கள் தவறாக வழிநடத்தப்படாமல் இருக்க, இந்தத் தெளிவுபடுத்தலைப் பரப்ப உங்கள் அன்பான ஒத்துழைப்பை நாங்கள் கோருகிறோம்" என்றும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
ரஜினிகாந்த் போன்ற ஒரு பெரிய நடிகரின் பெயரையும் புகழையும் பயன்படுத்தி இதுபோன்ற போலியான நிகழ்வுகள் நடத்தப்படுவது இது முதல் முறையல்ல. ரசிகர்கள் தங்கள் அபிமான நட்சத்திரத்தைச் சந்திக்க வேண்டும் என்ற ஆர்வத்தில், எளிதாக இதுபோன்ற ஏமாற்று வேலைகளில் சிக்கிவிடுகின்றனர். இந்த விவகாரத்தில், ரஜினிகாந்த் தரப்பு விரைந்து செயல்பட்டு, அதிகாரப்பூர்வமாக மறுப்பு தெரிவித்ததன் மூலம், பல ரசிகர்கள் ஏமாற்றப்படுவதிலிருந்து எஸ்கேப் ஆகியுள்ளனர்.
தற்போது, ரஜினிகாந்த் தனது அடுத்தடுத்த படங்களில் பிஸியாக உள்ளார். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் வெளியான 'கூலி' திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்றுள்ள நிலையில், நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் 'ஜெயிலர்' படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.