

மலையாள நடிகர் மம்மூட்டியின் கார் இரவில் வழிதவறி சென்றபோது எதிர்பாராத விதமாக அவரது தமிழ் ரசிகர் ஒருவர் வழிகாட்டி உதவிய சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
காரைக்குடியில் நடைபெற்று வந்த படப்பிடிப்பை முடித்துவிட்டு நள்ளிரவில் கேரளா திரும்பியுள்ளார் மெகா ஸ்டார் மாமமூட்டி. 3 மணி அளவில் அவரது கார் வழிதவறி சிக்கலில் மாட்டியிருக்கிறது.
கடினமான அந்தப் பயணம், எதிர்பாராத ஒருவரின் உதவியுடன் இனிமையான முடிவைப் பெற்றுள்ளது. அதிகாலை நேரத்தில் நடந்த இந்த மனதைத் தொடும் சம்பவம் பற்றிய வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கிறது.
அந்த வீடியோவில் தமிழக ரசிகரை "நம்ம ஃபிரெண்டு" என மம்மூட்டி கூறுகிறார். மேலும், அந்த ரசிகரின் பைக்கை ஃபாலோ செய்யும்போது,
"சொந்தம் என்ன பந்தம் என்ன
போனா என்ன வந்தா என்ன
உறவுக்கெல்லாம் கவலைப்பட்ட
ஜென்மம் நான் இல்லை ஹோய்"
என மம்மூட்டி பாடுவதும் அந்த வீடியோவில் இடம்பெற்றுள்ளது.
அந்த வீடியோவை தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பகிர்ந்து, நடந்த நிகழ்வு குறித்தும் தகவல் வெளியிட்டுள்ளார்.
அதன்படி, மம்மூட்டி கம்பெனி தயாரிப்பில் நிதீஷ் சகதேவன் இயக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு காரைக்குடியில் நடைபெற்று வந்தது. படப்பிடிப்பு முடிந்து அதிகாலை வேளையில் மம்மூட்டி, தயாரிப்பாளர் ஆன்டோ ஜோசப், நடிகர் ரமேஷ் பிஷாரடி, ஜார்ஜ் மற்றும் ஓட்டுநர் உன்னி ஆகியோர் காரில் கேரளா நோக்கிப் புறப்பட்டுள்ளனர்.
"திருப்பத்தூரில் நெடுஞ்சாலை மறிக்கப்பட்டிருந்தது. கூகுள் மேப்ஸ் (Google Maps) எங்களை பலமுறை வெவ்வேறு திசைகளில் சுற்ற வைத்தது... அங்கிருந்து வெளியேற வழியே இல்லை. சுமார் ஒரு மணி நேரம் கடந்துவிட்டது.
மம்மூக்கா சற்று பதற்றத்துடன், “காரைக்குடியில் உள்ள அறைக்கே திரும்பிவிடலாம். நாளை காலை சாலை திறக்கப்படும்,” என்றார்.
ஜார்ஜ் அதற்கு ஒப்புக்கொண்டார். உன்னி காரைத் திருப்பினார்.
பிஷாரடியும் நானும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம்.
நாளைக்கான திட்டங்கள் அனைத்தும் பாழாகிவிட்டன. வழியில் உதவிக்கு வேறு பயணிகளோ வாகனங்களோ இல்லை." என ஆன்டோ ஜோசப் கூறியுள்ளார்.
தொடர்ந்து அவர்கள் பட்டமங்கலம் என்ற இடத்தில் உள்ள ஒரு இளைஞரிடம் விசாரித்துள்ளனர். அவர் சொன்ன வழிகளில் பல ஏற்கெனவே அடைக்கப்பட்டிருந்ததால் செய்வதறியாது திணறியுள்ளனர்.
அப்போது அவர்களுக்கு உதவும் நோக்கத்துடன் வந்த ஒருவர் நீங்கள் மலையாளிகளா எனக் கேட்டுள்ளார். கார் உள்ளே உற்றுப் பார்த்தவர் மம்மூட்டியை பார்த்ததும் அவரது முகம் மலர்ந்துள்ளது. “நீங்கள் மம்மூட்டி சார்தானே!! என்னைப் பின்தொடருங்கள்...” என்று கூறிவிட்டு அவர் தனது பைக்கை எடுத்துள்ளார்.
அடுத்த 10 கிலோமீட்டர் கூகுளுக்கே தெரியாத பாதையில் அவர் கூட்டிச்சென்றதாக ஆன்டோ ஜோசப் எழுதியிருக்கிறார்.
கேரளாவுக்கான பாதையில் வந்து “அப்படியே நேராக கேரளாவுக்குச் செல்லலாம்” எனக் கையை நீட்டிக் காட்டியுள்ளார்.
“நாளை காலையில் மம்மூக்காவைப் பார்த்ததாகவும், அவருக்கு வழி காட்டியதாகவும் யாரிடமாவது சொன்னால், யாராவது நம்புவார்களா?” என வியந்து கேட்டுள்ளார்.
அப்போது மம்மூட்டி காரிலிருந்து இறங்கி, தனது போனை எடுத்து பிஷாரடியிடம் கொடுத்துள்ளார். வீடியோவில் மாம்மூட்டி அந்த மனிதரைக் கட்டியணைப்பதை பார்க்கலாம்.
செல்வதற்கு முன்னர் அவரது பெயர் பாண்டியன் எனக் கேட்டுத் தெரிந்துகொண்டுள்ளனர் படக்குழுவினர்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்