இலங்கை பெண்ணுடன் திருமணமா? - சிம்பு தரப்பு மறுப்பு!
இலங்கை பெண்ணுடன் நடிகர் சிம்புவுக்கு நிச்சயதார்த்தம் நிகழ்ந்துவிட்டதாக சமூக வலைதளங்களில் உலாவி வரும் செய்திக்கு சிம்பு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது.
தமிழ் சினிமாவின் சகலகலா வல்லவன், நடிப்பு, இயக்கம், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு பரிமாணங்களில் ஜொலித்து வருபவர் நடிகர் சிம்பு. தற்போது இவரது நடிப்பில் உருவாகியுள்ள ’பத்து தல’ திரைப்படம் அடுத்த மாதம் வெளியாக உள்ளது. நடிகர் சிம்பு என்றாலே சர்ச்சை என்றான நிலையில், தற்போது இவரது திருமணம் குறித்த ஏகப்பட்ட வதந்திகள் சமூக வலைத்தளங்களில் சுற்றி வருகிறது.
40 வயதாகும் சிம்புவுக்கு அவரது தந்தையும் இயக்குனருமான டி.ராஜேந்தர் தீவிரமாக பெண் பார்த்து வருகிறார். அதேசமயம் கூடிய விரைவில் சிம்புவுக்கு திருமணம் செய்துவைத்துவிட வேண்டும் என்பதே அவரது தாயாரான உஷாவின் விருப்பமும். ஆனால், சிம்புவை சுற்றி இருக்கும் காதல் தோல்வி கதைகள் நிறைய உண்டு. தற்போது எல்லாவற்றையும் மறந்து புதிய சிம்புவாக அவதாரம் எடுத்துள்ள அவர், தற்போது சின்சியராக படங்களில் நடித்து வருகிறார். இருப்பினும், அவரை சுற்றி திருமண சர்ச்சைகள் ஓய்ந்தபாடில்லை. இந்த நடிகையுடன் காதல், அந்த நடிகையை திருமணம் செய்துகொள்ளப் போகிறார் என எப்போதும் எதாவது செய்தியில் அவரது பெயர் வந்துகொண்டு தான் இருக்கிறது.
இந்நிலையில் சில யூடியூப் சேனல்களில் சிம்புவுக்கு பெண் பார்த்து விட்டதாக கூறப்பட்டு வருகிறது. அதாவது இலங்கையை சேர்ந்த பெரிய தொழிலதிபரின் மகளை சிம்புவுக்கு நிச்சயம் செய்துவிட்டதாக தகவல் பரவி வருகிறது. இது சிம்பு ரசிகர்கள் இடையே ஆச்சரியம் கலந்த குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது.
ஆனால், இந்த செய்திக்கு சிம்பு தரப்பு மறுப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து அவரது மேலாளர் கூறிய போது, ”இலங்கை பெண்ணுடன் சிம்புவுக்கு நிச்சயம் ஆகிவிட்டதாக சில மீடியாக்களில் வரும் செய்திகள் முற்றிலும் தவறானது, உண்மைக்கு புறம்பானது. இதனை கடுமையாக மறுக்கிறோம். மீடியா நண்பர்கள் திருமணம் போன்ற விஷயங்களில் எங்களிடம் உறுதிபடுத்திவிட்டு செய்திகளை வெளியிடுங்கள். நல்ல செய்தி என்றால் முதலில் உங்களிடம் தான் பகிர்ந்துகொள்வோம்” என்று தெரிவித்துள்ளார்.