தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரம் உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் “விக்ரம்”. இந்த படத்தில் முக்கிய வில்லனாக விஜய் சேதுபதி நடித்துள்ளார். மேலும் ஒரு முக்கிய கேரக்டரில் பகத் பாசில் மற்றும் நரேன், அர்ஜீன் தாஸ், ஷிவானி நாராயணன் உள்பட பலர் நடித்துள்ளனர்.
பான் இந்திய திரைப்படமாக உருவாகியுள்ள ’விக்ரம்’ உலகம் முழுவதும் வருகிற ஜீன் 3 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதனால் இந்த திரைப்படத்திற்கான முன்பதிவுகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதே சமயம் படக்குழுவினர் படத்தின் புரொமோஷன் பணிகளையும் விறுவிறுப்பாக செய்து வருகின்றனர்.
இந்நிலையில் சற்று முன்னர் ‘விக்ரம்’ படத்தில் விஜய் சேதுபதியின் கதாபாத்திரம் குறித்த போஸ்டர் ஒன்றை படக்குழுவினர் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனத்தின் சமூக வலைதளப்பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். அந்த பதிவில் ’தீயவன் வருகிறான்’ என்றும், ’சந்தானம்’ கேரக்டரில் விஜய் சேதுபதி நடித்து உள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து நடிகராகவும், வில்லனாகவும் பட்டைய கிளப்பி வரும் விஜய் சேதுபதியின் தற்போதைய மாஸ் போஸ்டர் இணையத்தில் ட்ரெண்டாகி வருகின்றது.