சில ஆண்டுகளுக்கு முன்பு சர்ச்சையில் சிக்கிய ஆன்மீகப் பேச்சாளர் மகாவிஷ்ணுவை, தனது காதலராக நடிகை மிருணாளினி ரவி அறிமுகப்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள புகைப்படம் தற்போது கவனம் பெற்றுள்ளது. புதுச்சேரியைச் சேர்ந்த மிருணாளினி ரவி, பெங்களூரில் படித்து பின்னர் அங்கு மென்பொருள் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். டப்ஸ்மாஷ், டிக்-டாக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தனது திறமைகளை வெளிப்படுத்தி பிரபலமான இவர், பின்னர் திரைத்துறையில் நுழைந்தார்.
தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் விஜய் சேதுபதி, சமந்தா, ஃபகத் பாசில் உள்ளிட்டோர் நடித்த 'சூப்பர் டீலக்ஸ்' திரைப்படத்தின் மூலம் கடந்த 2019ஆம் ஆண்டு தமிழ் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார் மிருணாளினி. தொடர்ந்து 'சாம்பியன்', 'எனிமி', 'எம்ஜிஆர் மகன்', 'ஜாங்கோ', 'கோப்ரா', 'ரோமியோ' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். தமிழில் மட்டுமின்றி தெலுங்கிலும் பல திரைப்படங்களில் நடித்துள்ள மிருணாளினி, விஜய் ஆண்டனி நடிப்பில் கடந்த 2024ஆம் ஆண்டு வெளியான 'ரோமியோ' திரைப்படத்தில் நடித்திருந்தார்.
காதலரை அறிமுகப்படுத்திய மிருணாளினி
இந்நிலையில், ஆன்மீகப் பேச்சாளரான மகாவிஷ்ணுவுடன் இருக்கும் புகைப்படத்தை தனது சமூக வலைதளப் பக்கத்தில் மிருணாளினி பகிர்ந்துள்ளார். அவரை தனது காதலர் என அறிமுகப்படுத்தியுள்ள அவர், காதல் குறித்து உருக்கமான பதிவையும் வெளியிட்டுள்ளார்.
"உங்களைக் காதலிக்கத் தொடங்கும்போது, என்னை நானே காதலிப்பது போல உணர்ந்தேன். ஒவ்வொரு பிறவியிலும், ஒவ்வொரு பிரபஞ்சத்திலும், நான் எப்போதும் உங்களையே தேர்ந்தெடுப்பேன்" என மிருணாளினி குறிப்பிட்டுள்ளார். இந்தப் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் நிலையில், மிருணாளினி மற்றும் மகாவிஷ்ணுவுக்கு ரசிகர்கள் பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
யார் இந்த மகாவிஷ்ணு?
மிருணாளினி தனது காதலராக அறிமுகப்படுத்தியுள்ள மகாவிஷ்ணு, ஆன்மீகப் பேச்சாளராக சமூக வலைத்தளத்தில் அறியப்பட்ட இவர் 'பரம்பொருள் அறக்கட்டளை' என்ற அமைப்பை நடத்தி வந்தார். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சென்னையில் உள்ள அரசுப் பள்ளி ஒன்றில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஆன்மீகம் தொடர்பாக அவர் பேசிய கருத்துகள் சர்ச்சையை ஏற்படுத்தின. குறிப்பாக, பார்வையற்ற மாற்றுத்திறனாளி ஆசிரியர் குறித்து அவர் பேசியது பெரும் சர்ச்சையான நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் ஜாமீனில் வெளியே வந்தார்.
இதையடுத்து, அவர் நடத்தி வந்த பரம்பொருள் அறக்கட்டளையை மூடுவதாக கடந்த ஆண்டு அறிவித்திருந்தார். தொடர்ந்து தனது ஆன்மீகப் பணியை வேறு வடிவில் மேற்கொள்ளப் போவதாகவும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், தற்போது நடிகை மிருணாளினி ரவி, மகாவிஷ்ணுவை தனது காதலராக வெளிப்படையாக அறிமுகப்படுத்தியிருப்பது திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.