இயக்குனர் மீது பண மோசடி புகார்...! மீண்டும் விசாரணை நடத்தவுள்ள போலீசார்...!

இயக்குனர் மீது பண மோசடி புகார்...! மீண்டும் விசாரணை நடத்தவுள்ள போலீசார்...!
Published on
Updated on
1 min read

நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ். ஏ சந்திரசேகர் மீதான பண மோசடிப் புகார் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தவுள்ளதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டிராஃபிக் ராமசாமி என்ற திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை வழங்குவதாகக் கூறி நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர், வெளிநாடு வாழ் இந்தியரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவரிடம் இருந்து 21 லட்ச ரூபாய் பெற்றதாகவும், ஆனால் சொன்னபடி வெளியீட்டு உரிமையை வழங்காமல் சந்திரசேகர், தானே அத்திரைப்படத்தை வெளியிட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. மேலும், டிராஃபிக் ராமசாமி திரைப்படத்தின் வெளியீட்டு உரிமையை சொன்னபடி வழங்காமலும், அதற்காக பெற்ற 21 லட்ச ரூபாயை திரும்பத் தராமலும் எஸ். ஏ சந்திரசேகர் மோசடி செய்துவிட்டதாகக் கூறி பாதிக்கப்பட்டவரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் சார்பில் அவரது நண்பரும், தயாரிப்பாளருமான மணிமாறன் என்பவர் முதலில் விருகம்பாக்கம் காவல் நிலையத்திலும், பின்னர் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்திலும் கடந்த 2019 ஆம் ஆண்டு புகார் அளித்தார். அதன் தொடர்ச்சியாக சிவில் நீதிமன்றத்திலும் கடந்த 2020 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்தார். அவ்வழக்கை விசாரித்த நீதிமன்றம் இயக்குனர் எஸ்.ஏ சந்திரசேகர், தான் வாங்கிய பணத்திற்காக வட்டியுடன் சேர்த்து 27 லட்சம் ரூபாய் பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவருக்கு வழங்க உத்தரவிட்டது. ஆனால் எஸ்.ஏ சந்திரசேகர் பணத்தை கொடுக்காமல் தனக்கும் தனது வெளிநாடு வாழ் நண்பரான பிரம்மானந்தம் சுப்பிரமணியம் என்பவருக்கும் தொடர்ந்து கொலை மிரட்டல் விடுத்து வருவதாக தயாரிப்பாளர் மணிமாறன் மூலம் சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் மீண்டும் ஒரு வழக்கு தொடரப்பட்டது. 

அவ்வழக்கை விசாரித்த சைதாப்பேட்டை நீதிமன்றம், புகார்தாரரான மணிமாறன் மற்றும் எதிர்மனுதாரரான எஸ். ஏ சந்திரசேகர் ஆகியோரிடம் மீண்டும் விசாரணை நடத்துமாறு விருகம்பாக்கம் போலீசாருக்கு உத்தரவிட்டது. அதனடிப்படையில் நடிகர் விஜயின் தந்தையும், இயக்குனருமான எஸ்.ஏ சந்திரசேகர் மீதான 21 லட்ச பண மோசடிப் புகார் தொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தவுள்ளதாக விருகம்பாக்கம் போலீசார் சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com