
இந்திய சினிமாவின் மிகச்சிறந்த கலைஞர்களில் ஒருவரான கமல்ஹாசன், பல்வேறு மொழிகளில் சரளமாகப் பேசுவதில் வல்லவர் என்பது அனைவரும் அறிந்ததே. அவர் ஒவ்வொரு மொழியையும் மிக வேகமாக கற்றுக்கொள்வார். ஆனால், அவர் பெங்காலி மொழி கற்றுக் கொண்டது ஏன் என்பது குறித்த ஒரு சுவாரஸ்யமான ரகசியத்தை, அவரது மகள் ஸ்ருதி ஹாசன் தற்போது வெளிப்படுத்தியுள்ளார்.
சமீபத்தில், நடிகர் சத்யராஜுடன் ஒரு நேர்காணலில் கலந்துகொண்ட ஸ்ருதி, தனது அப்பா பற்றிப் பேசும்போது இந்தத் தகவலைப் பகிர்ந்துகொண்டார். அந்தப் பேட்டியின்போது, சத்யராஜ், "உங்களுக்கு அப்பா போலவே பல மொழிகள் தெரியும்" என்று ஸ்ருதியை பாராட்டினார். மேலும், "கமல் ஹாசன் பெங்காலி மொழியைக் கூட ஒரு படத்திற்காகக் கற்றுக்கொண்டார்" என்றும் குறிப்பிட்டார்.
அப்போது, இடைமறித்த ஸ்ருதி ஹாசன், "உங்களுக்கு ஒரு ரகசியம் தெரியுமா? அப்பா ஏன் பெங்காலி மொழி கத்துக்கிட்டார் தெரியுமா? அது ஒரு படத்துக்காக இல்லை!" என்று கூறி அனைவரையும் ஆச்சரியப்படுத்தினார்.
"அவர் அந்த நேரத்தில் பெங்காலி நடிகை அபர்ணா சென் மீது காதல் கொண்டிருந்தார். அவரை ஈர்க்கும் நோக்கில் தான் அப்பா பெங்காலி மொழி கத்துக்கிட்டார்" என்று சிரித்தபடி ஸ்ருதி ஹாசன் தெரிவித்தார்.
இந்தத் தகவலை மேலும் உறுதிப்படுத்தும் விதமாக மற்றொரு தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டார். "அப்பா இயக்கி நடித்த 'ஹே ராம்' படத்தில், ராணி முகர்ஜி நடித்த பெங்காலி பெண்ணின் கதாபாத்திரத்துக்கு, 'அபர்ணா' என்ற பெயரை அப்பா வைத்தார். இப்போ கனெக்ஷன் புரிந்திருக்கும் என்று நினைக்கிறேன்" என்று ஸ்ருதி கூறினார். இந்தச் செய்தி சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி, பல ரசிகர்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.