ஜெய் பீம் படத்தை பார்த்து சூர்யாவை கட்டியணைத்து பாராட்டிய நல்லகண்ணு...

ஜெய் பீம் திரைப்படத்தை பார்த்து ரசித்த, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு, படக் குழுவினருக்கு பாராட்டு தெரிவித்தார்.  
ஜெய் பீம் படத்தை பார்த்து  சூர்யாவை கட்டியணைத்து பாராட்டிய நல்லகண்ணு...
Published on
Updated on
2 min read

கடந்த நவம்பர் 2-ந் தேதி ஒடிடி தளத்தில் வெளியான ஜெய் பீம் படம் பெருவாரியான ரசிகர்களை கவர்ந்தது. மேலும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இருளர் இன மக்களின் வாழ்வில் நடந்த உண்மை சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில் சூர்யா மணிகண்டன், லிஜமோல் ஜோஸ், ராஷிஜா விஜயன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்டோர் நடித்து இருந்தனர்.

கடந்த 1993-ம் ஆண்டு கடலூர் மாவட்டம் கம்மாபுரம் காவல் நிலையத்தில் குறவர் சமூகத்தைச் சேர்ந்த ராஜகண்ணன் என்பவரை காவல்துறையினர் அடித்து துன்புறுத்தி கொலை செய்த சம்பவத்தை அடிப்படையாக கொண்டு இத்திரைப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. இதில் ராஜகண்ணன் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும் என்று கம்யூனிஸ்ட் கட்சியை சேர்த்த கோவிந்தன் வக்கீல் சந்துரு ஆகியோரின் முயற்சியில் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு வெற்றி பெறப்பட்டது.

இந்த சம்பவத்தை அடிப்படையாக கொண்ட இந்த படத்தில், காவல்துறை அதிகாரியாக வரும் நடிகரின் வீட்டில் வன்னியாரின் சின்னம் எனப்படும் அக்னி கலசம், பொறித்த காலண்டர் மற்றும் சர்ச்சைக்குரிய காவல்துறை அதிகாரியின் பெயர் குருமூர்த்தி என்பது வன்னியர் சங்க தலைவர் ஜெ.குருவை ஞாபகப்படுத்துவதாக உள்ளது என்று கூறி வன்னியர் சங்கத்தினர் மற்றும் பாமகவினர் நடிகர் சூர்யாவிற்கு எதிராக வழக்கு தொடர்ந்தனர். இதில் சூர்யா மற்றும் படத்தின் இயக்குநர் ஞானவேல் ஆகியோர் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும், 5 கோடி நஷ்டஈடு வேண்டும் என்றும் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

மேலும் சூர்யா எட்டி உதைப்பவருக்கு ரூ 1 லட்சம் பரிசு வழங்கப்படும் என்று மயிலாடுதுறை பாமக நிர்வாகி ஒருவர் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விவகாரத்தில் சூர்யாவிற்கு ஆதரவாகவும், எதிராகவும் சமூகவலைதளங்களில் கருத்துக்கள் பதிவாகி வரும் நிலையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லகண்ணு கடந்த இரு தினங்களுக்கு முன்பு  தனது இல்லத்தில் தனது தோழர்கள் சிலரோடு சேர்ந்து ஜெய்பீம் படத்தை பார்த்துள்ளார்.


இந்த படம் அவரை ரொம்பவே கவர்ந்துவிட்ட நிலையில், ஜெய்பீம் படக்குழுவினரை நேரில் சந்தித்து தனது வாழ்த்துக்களை பரிமாறிக்கொண்டார். இந்த சந்திப்பில் நடிகர் சூர்யா, இயக்குனர் ஞானவேல், நடிகர் சிவகுமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பு தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த சூர்யா ரசிகர்களும் நெட்டிசன்களும், ஜெய்பீம் படத்திற்கு மூத்த தலைவரிடம் இருந்து அங்கீகாரம் கிடைத்துவிட்டதாகவும், இதற்கு மேல் என்ன வேண்டும் என்று கேட்டு தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com