டெல்லியில் நடைபெற்ற 69வது தேசிய விருதுகள் வழங்கும் விழாவில், இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா, நடிகர் மாதவன் உள்ளிட்டோருக்கு விருதுகளை வழங்கி குடியசு தலைவர் திரவுபதி முர்மு கவுரவித்தார்.
2021ம் ஆண்டு வெளியான படங்களுக்கான தேசிய விருதுகளை கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் தேதி மத்திய அரசு அறிவித்தது. அதைத் தொடர்ந்து அதற்கான விருதுகளை டெல்லியில் குடியரசுத்தலைவர் திரவுபதி முர்மு வழங்கினார்.
சிறந்த திரைப்படமாக ராக்கெட்ரி தி நம்பி எஃபெக்ட் வென்ற நிலையில், நடிகர் மாதவன் விருதை பெற்றுக் கொண்டார். சிறந்த தமிழ் திரைப்படமாக கடைசி விவசாயி படமும், அப்படத்தில் நடித்து மறைந்த நல்லாண்டிக்கு தமிழ் சிறப்பு விருதுகள் பிரிவில் சிறந்த நடிகருக்கான விருதும் அறிவிக்கப்பட்டது. 2 விருதுகளையும் படத்தின் இயக்குநர் மணிகண்டன் பெற்றுக் கொண்டார்.
அதைத்தொடர்ந்து சிறந்த நடிகருக்கான விருதை புஷ்பா படத்திற்காக அல்லு அர்ஜூனுக்கும், சிறந்த நடிகைக்கான விருதை ஆலியா பட், கிருத்தி சோனனுக்கும் குடியரசுத்தலைவர் வழங்கினார். சிறந்த இசையமைப்பாளருக்கான விருதை தேவி ஸ்ரீபிரசாத் பெற்ற நிலையில், கருவறை என்ற ஆவணப்படத்துக்காக இசையமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா பெற்றுக் கொண்டார்.
இரவின் நிழல் படத்தில் மாயவா சாயவா பாடலுக்காக சிறந்த பின்னணிப் பாடகருக்கான விருது ஸ்ரேயா கோஷலுக்கும், சிறந்த கல்வித் திரைப்படமாக தேர்வான சிற்பிகளின் சிற்பங்கள் படத்திற்காக பி.லெனினுக்கும் விருது வழங்கப்பட்டது.