

தமிழ் சினிமாவில் புகழ்பெற்ற இயக்குநரும், நடிகருமான ஆர். பார்த்திபன், தெலுங்கு திரைப்பட விழாவில் தனது சாதியை குறிப்பிட்டு பேசியது தற்போது பெரும் புயலை கிளப்பியுள்ளது. ஏற்கனவே திரிஷா குறித்த சர்ச்சையில் சிக்கியிருந்த பார்த்திபன் தற்போது இந்த சாதி குறித்த தனது பேச்சால் மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறார்.
மார்ச் 15, 2026 அன்று பவன் கல்யாண் நடித்த திரைப்படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சியில் பார்த்திபன் கலந்து கொண்டார். பவன் கல்யாண் ஸ்ரீலீலா, ராஷி கண்ணா ஆகியோர் நடித்துள்ள 'உஸ்தாத் பகத் சிங்' படத்தில் நடித்து இருக்கும் பார்த்திபன், படத்தின் புரமோஷன் நிகழ்ச்சியில், தெலுங்கில் தான் ஒரு 'நாயுடு பையன்' என்று தன்னை அடையாளப்படுத்தி பேசியிருந்தார். இந்தக் கருத்து இணையத்தில் உடனடியான எதிர்ப்பை கிளப்பியது. முற்போக்கு பற்றி அடிக்கடி பேசும் இவர், சாதி அடையாளத்தைப் பற்றிப் பேசுவதைத் தவிர்த்திருக்க வேண்டும் என்று விமர்சகர்கள் கூறிவருகின்றனர். பார்த்திபன் சாதிக்கு எதிராக பேசிய வீடியோக்களையும், பகிர்ந்து நெட்டிசன்கள் தங்களது கேள்விகளை எழுப்பிவருகின்றனர். பார்த்திபனின் பேச்சு கடுமையாக விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், தனது கருத்துக்கு அவர் வருத்தம் தெரிவித்துள்ளார். இந்தப் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் நோக்கில், பார்த்திபன் மார்ச் 17 அன்று அதிகாலை 1:00 மணிக்கு சுமார் நான்கு நிமிட ஒலித்துண்டு ஒன்றை வெளியிட்டார்.
அதில் அவர், "தமிழ் மீது எனக்கு எவ்வளவு பற்று இருந்தாலும், எனது பிறப்புச் சான்றிதழை என்னால் மாற்ற முடியாது. என் பிறப்பு என் பொறுப்பல்ல. எந்தக் குழந்தையும் தான் பிறக்கும் பெற்றோரையோ அல்லது வீட்டையோ தேர்ந்தெடுப்பதில்லை," என்று விளக்கினார். தனக்குத் தெலுங்கு சரளமாகப் பேச வராததால் மேடையில் மிகவும் "பதட்டமாக" இருந்ததாக பார்த்திபன் விளக்கமளித்தார். சில பொதுவான கலாச்சார வார்த்தைகள் மூலம் மக்களுடன் இணைய அவர் மேற்கொண்ட முயற்சியில் பதட்டம் காரணமாகத் தடுமாறியதாக ஒப்புக்கொண்டார். மேலும், சாதியை சொல்லி வயிறு வளர்க்க விரும்புபவன் அல்ல நான். இனி ஒரு முறை கூட தவறியும் இது நடக்காது என உறுதியளிக்கிறேன். என் பேச்சால் வேதனைப்பட்டவர்கள் அனைவரிடமும் மனப்பூர்வமாக மன்னிப்பை தெரிவிக்கிறேன் என்று தெரிவித்திருந்தார்.
இதற்கு முன்பும், தனியார் நிகழ்ச்சி ஒன்றில் திரிஷா குறித்தான கேள்விக்கு, "குந்தவையை வீட்டிலேயே குந்தவைத்திருக்கலாம்" என்ற கருத்தால் சர்ச்சையில் சிக்கினார். அதன் பின்பு, இது குறித்து திரிஷா இதுகுறித்த தனது கண்டங்களை 'X' தளத்தில் பதிவிட்டிருந்தார். தற்போது இந்த சாதி குறித்த பேச்சினால் அடுத்த சர்ச்சையில் சிக்கியுள்ளார் பார்த்திபன்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.