ராகவா லாரன்ஸ் படத்தில் சம்பளம் தரப்படாமல் இழுத்தடிக்கப்படும் கலைஞர்கள்!!!

ராகவா லாரன்ஸ் படத்தில் சம்பளம் தரப்படாமல் இழுத்தடிக்கப்படும் கலைஞர்கள்!!!
Published on
Updated on
1 min read

ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ருத்ரன் திரைப்படத்தில் நடித்த டான்ஸ் கலைஞர்களுக்கு சம்பளம் தராமல் இழுத்தடிப்பதாக சினிமா ஏஜென்ட் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். 

கடந்த மாதம் 14ஆம் தேதி இயக்குனர் கதிரேசன் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளியான திரைப்படம் ருத்ரன்.  இந்த திரைப்படத்தின் கிளைமாக்ஸில் அதிகளவு டான்ஸ் கலைஞர்களுடன் பகை முடி என்ற பாடல் படமாக்கப்பட்டது. 

இந்நிலையில் இந்த பாடல் காட்சியில் நடித்த பின்னணி நடிகர்கள் மற்றும் டான்ஸ் கலைஞர்களுக்கு சம்பள பாக்கி தராமல் ஏமாற்றி வருவதாக, ஏற்பாடு செய்து கொடுத்த பழைய வண்ணாரப்பேட்டையை சேர்ந்த சினிமா ஏஜென்ட் தன்ராஜ் என்பவர் வடபழனி காவல் நிலையத்தில் இன்று புகார் அளித்துள்ளார். 

கடந்த ஜனவரி மாதம் 26 ஆம் தேதி முதல் பிப்ரவரி மாதம் மூன்றாம் தேதி வரை 10 நாட்களாக ராகவா லாரன்ஸ் நடிப்பில் வெளிவந்த ருத்ரன் திரைப்படத்தின் கிளைமாக்ஸ் பாடலுக்காக பின்னனி நடிகர்கள் மற்றும் ஆடல் கலைஞர்களை ஏற்பாடு செய்து கொடுத்ததாகவும், அதன் பின்பு அந்த காட்சியில் பணியாற்றிய ஒருவருக்கும் 10 நாட்களாகியும் சம்பளம் தரவில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.

இதனையடுத்து சம்பளம் பாக்கி தொடர்பாக பெப்சி உறுப்பினரான ஸ்ரீதர் என்பவரிடம் கேட்டபோது இரண்டு நாட்களில் சம்பளம் வந்து சேரும் என குறிப்பிட்டதாகவும், அதன் பிறகும் சம்பளம் வராததால் திரைப்படத்தின் மேனேஜரை தொடர்பு கொண்டு பேசியபோது என்னிடம் பேசினால் 10 பைசா உங்களுக்கு தர முடியாது என அவதூறாக பேசியதாக தெரிவித்துள்ளார்.  இதனால் இது குறித்து பலமுறை பெப்சி அலுவலகத்தில் புகார் அளித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காததால், ருத்ரன் திரைப்படத்தின் மேனேஜரிடம் கேட்டபோது முறையாக பதிலளிக்காமல், ராகவா லாரன்ஸ் அலுவலகத்திற்கு சென்று உங்களால் முடிந்ததை பார்த்துக் கொள்ளுங்கள் என கூறியதாக தெரிவித்துள்ளார்.

இதனால் 10 நாட்கள் கடுமையாக உழைத்த நடன மற்றும் பின்னணி நடிகர்களுக்கு சம்பளம் பாக்கி தராமல் ஏமாற்றி வரும் மெயின் ஏஜென்ட் ஸ்ரீதர் மற்றும் அந்த திரைப்படத்தின் மேனேஜர் ஆகியோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுத்து சம்பள பாக்கியை பெற்றுத் தருமாறு புகாரில் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com