”பாட்டி சொல்லை தட்டாதே” படத்தில் டி.ராஜேந்தர் பாடிய பாடல் இணையத்தில் சாதனை...!

Published on
Updated on
1 min read

”பாட்டி சொல்லை தட்டாதே” படத்தில் டி.ராஜேந்தர் பாடிய "கோலி சோடா ரம்மு கலந்து குடிக்கிறான்" என்ற பாடல் இணையத்தில் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. 

எண்பதுகளில் எ.வி.எம் தயாரிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றி பெற்ற படம் “பாட்டி சொல்லை தட்டாதே”. மனோரமா பாட்டியாகவும், பாண்டியராஜன் பேரனாகவும், ஊர்வசி, சில்க் ஸ்மிதா, அனந்தராஜ் ஆகியோர் நடித்து நகைச்சுவை திரைப்படமாக வெளிவந்து அன்றைய ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. 

தற்போது 90கிட்ஸ், 2k கிட்ஸ் ரசிகர்களுக்கு இந்த நகைச்சுவை அனுபவத்தை மீண்டும் கொடுப்பதற்காக ஏவி எம் நிறுவனத்திடம் இருந்து டைட்டிலுக்கு அனுமதி வாங்கி, வின்னர் சினிமாஸ் பிரைவேட் லிமிடெட் மற்றும் விஷ்ணு பிரியா சஞ்சய் பிலிம்ஸ் சார்பில் ஹேம சூர்யா, சஞ்சய் பாபு, தனசேகரன் இணைந்து அதிக பொருட் செலவில் பாட்டி பேரன் இடையிலான உறவை உணர்வுபூர்வமாகவும் காமெடி, காதல் கலந்த படமாகவும்  "பாட்டி சொல்லை தட்டாதே" திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.

இதில் ஆர்.ஜே.விஜய் கதாநாயகனாகவும். அனுஷீலா கதாநாயகியாகவும்  முக்கிய வேடத்தில் பாண்டிய ராஜன், எம்.எஸ்.பாஸ்கர், கலக்கப் போவது யாரு பாலா, பவர்ஸ்டார் சீனிவாசன், நளினி, உள்ளிட்ட எராளமான நட்சத்திரங்கள் நடிப்பில் உருவாகியுள்ளது. இந்த படத்தில் விஜய் சங்கர் இசையில்  4 பாடல்கள் இடம் பெற்றுள்ள நிலையில்,  டி.ராஜேந்தர் பாடிய "கோலி சோடா ரம்மு கலந்து  குடிக்கிறான்" என்ற பாடல் கடந்த 6ம் தேதி வெளியானது. நடிகர் நட்டி தனது இணைய பக்கத்தில் இந்த பாடலை வெளியிட்டார். டி.ராஜேந்தர் தனக்கே உரிய ஸ்டைலில் கலக்கலாக பாடி  வெளியாகிய இந்த பாடல் தற்போது ரசிகர்கள் மத்தியிலும் குறிப்பாக, குழந்தைகள் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.  

டி.ராஜேந்தர் குரலுடன், துள்ளல் இசையும் கலந்து வெளியாகிய இந்த பாடல் ஏழு நாட்களுக்குள் ஒரு மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது. பொதுவாக பெரிய படங்களுக்கும், பெரிய நட்சத்திரங்களுக்கும்  கிடைக்கும் அதே வரவேற்பை "பாட்டி சொல்லை தட்டாதே" படத்தில் டி.ராஜேந்தர் பாடி வெளியாகியுள்ள “கோலி சோடா ரம்மு கலந்து  குடிக்கிறான்” பாடலுக்கு மக்கள் கொடுத்து வரும் ஆதரவு பெறும் மகிழ்ச்சியை தந்துள்ளதாக பாடலை எழுதியவரும் இப்படத்தின் இயக்குனருமான, ஹேம  சூர்யா தனது நன்றியை தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com