

தமிழ் திரையுலகின் இரு துருவங்களான சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் உலகநாயகன் கமல் ஹாசன் ஆகியோர் சுமார் 46 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் ஒரே திரையில் இணையப்போகும் வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்பு இன்று வெளியாக உள்ளது. ரெட் ஜெயண்ட் மூவிஸ் (Red Giant Movies) தயாரிப்பில் உருவாகும் இந்த பிரம்மாண்ட படத்தின் அதிகாரப்பூர்வ அப்டேட் இன்று மாலை சரியாக 7:12 மணிக்கு வெளியாகும் என்று தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த பல மாதங்களாகவே ரஜினி - கமல் கூட்டணி குறித்துப் பல்வேறு ஊகங்கள் நிலவி வந்த நிலையில், தற்போது அதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் விதமாக இந்த அறிவிப்பு வெளியாகிறது. இந்தப் படத்தை 'ஜெயிலர்' புகழ் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கவுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஏற்கனவே ரஜினிகாந்தை வைத்து 'ஜெயிலர்' மற்றும் தற்போது உருவாகி வரும் 'ஜெயிலர் 2' ஆகிய படங்களை இயக்கி வரும் நெல்சன், கோலிவுட்டின் இரு பெரும் ஆளுமைகளை எப்படி ஒரே கதையில் கையாளப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எகிறியுள்ளது. இந்தப் படம் ஒரு காமெடி த்ரில்லர் பாணியில் அமையும் என்றும், வன்முறை குறைவாகக் குடும்பங்கள் கொண்டாடும் படமாக இருக்கும் என்றும் சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இன்று மாலை வெளியாகும் அறிவிப்பைத் தொடர்ந்து, நாளை இந்த மெகா கூட்டணியின் புரோமோ (Promo) வீடியோ வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் ரவிச்சந்தர் இசையமைக்கும் இந்தப் படத்தின் புரோமோ வீடியோ, 'ஜெயிலர்' மற்றும் 'விக்ரம்' படங்களின் ஸ்டைலில் மிகவும் மாஸாகவும் ஸ்டைலிஷாகவும் இருக்கும் எனச் சொல்லப்படுகிறது. சமீபத்தில் இதற்கான புரோமோ படப்பிடிப்பு சென்னையில் ரகசியமாக நடந்து முடிந்த நிலையில், அதில் ரஜினி மற்றும் கமல் ஆகிய இருவருமே கலந்துகொண்டதாகத் தெரிகிறது. இந்தப் படத்திற்காக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திற்கு சுமார் 225 கோடி ரூபாய் வரை சம்பளம் பேசப்பட்டுள்ளதாகவும், இதன் மூலம் அவர் மீண்டும் கோலிவுட்டின் அதிக சம்பளம் வாங்கும் நடிகராக உருவெடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.