வேலை நேரத்தில் அரசு ஊழியர்களின் அலப்பறைகள்... என்ன கொடுமை சரவணன் இது?

வெளியில் பொதுமக்கள் மனுக்களுடன் காத்திருக்கும் போது, அலுவலகத்தில் சினிமா பாடலுக்கு ரீல்ஸ் வெளியிட்ட அரசு ஊழியர்களுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது
வேலை நேரத்தில் அரசு ஊழியர்களின் அலப்பறைகள்... என்ன கொடுமை சரவணன் இது?
Published on
Updated on
2 min read

ஆடிப்பாடி வேலை செய்தால் களைப்பு தெரியாது என்பார்கள்.. கிராமங்களில் விவசாய நிலத்தில் நாற்று நடுவது, களை பறிப்பது, அறுவடை செய்வது போன்ற வேலைகளில் ஈடுபடுபவர்கள் நாட்டுப்புறப் பாடல்களை பாடுவது வழக்கம்.

காலங்கள் மாறினாலும், இந்த பழக்கங்கள் நவீன முறையில்தான் தற்போது வரை தொடர்ந்து வருகிறது. இன்றைய இளைஞர்கள், ரீல்ஸ் என்ற பெயரில் சினிமா பாடல்களுக்கு நடனமாடுவதும், நடித்துக் காட்டுவதும் என ஈடுபட்டு வருகின்றனர்.

ஆனால் எந்த துறையில் எந்த வேலையின்போது ஆடிப் பாடலாம் என்ற வரையறையும் நிச்சயம் உண்டு. இந்த வரையறை தெரியாமல், அலுவலகத்தில் வைத்தே ரீல்ஸ் போட்ட அரசு ஊழியர்களுக்கு தற்போது நோட்டீஸ் பறந்துள்ளது.

மோகன்லாலின் பாடலுக்கு அழகாக நடித்துக் காட்டும் இவர்கள் வேலை செய்வது ஐ.டி. நிறுவனத்தில் அல்ல, அரசு அலுவலகத்தில்..

கேரள மாநிலம் பத்தினம்திட்டா அருகே உள்ள திருவல்லா நகராட்சி அலுவலகத்தில் வருவாய்த்துறை ஊழியர்கள் 10-க்கும் மேற்பட்டோர் வேலை பார்த்து வருகின்றனர்.

இந்நிலையில் வேலை நேரத்திலேயே பொதுமக்கள் மனுக்கள் வழங்குவதற்கு வெளியில் காத்திருந்தனர். அப்போது இது எதையுமே பொருட்படுத்தாத இந்த இளசுகள், ரீல்ஸ் வேலையில் ஈடுபட்டனர்.

மோகன்லால் நடித்த தேவதூதன் படத்தின் பூவே பூவே என்ற பாடலை ரீல்ஸ் எடுத்தவர்கள் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூகவலைதளங்களில் பதிவு செய்தனர்.

இந்த வீடியோ வைரலானதைத் தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் கடும் அதிருப்தி உண்டானது. மக்கள் தங்கள் பிரச்னையை சொல்வதற்கு காத்திருந்தால், ஊழியர்கள் இப்படி ஆடிப்பாடி பொழுதைப் போக்குவதா? என கருத்துக்களை பதிவு செய்தனர்.

இதுகுறித்து நகராட்சி நிர்வாகம் சார்பாக இன்னும் நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. பொழுதை போக்குவதே என்றாலும், அதற்கும் இடம் பொருள் ஏவல் பார்த்தாக வேண்டும். அவ்வாறு பார்க்காமல் போனால் வழக்குதான் பாயும்..

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com