கொடைக்கானல் மோயர் சதுக்கம் பகுதியில் 3 நாட்களாக சுற்றுலா பயணிகளுக்கு தடை விதிக்கப்பட்டிருந்த நிலையில், மீண்டும் இன்று முதல் சுற்றுலா தலங்கள் திறக்கப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் பல்வேறு சுற்றுலா இடங்கள் இருந்து வருகிறது. இங்கு பிரதான சுற்றுலா பகுதிகளாக இருக்கும் மோயர் சதுக்கம், குணா குகை, பைன் மர காடுகள், தூண்பாறை என பல்வேறு இடங்கள் உள்ளது. இந்த நிலையில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்பாக மோயர் சதுக்கம் பகுதியில் ஐந்திற்கும் மேற்பட்ட காட்டு யானைகள் முகாமிட்டு அப்பகுதியில் உள்ள கடைகளை சேதப்படுத்தி வந்தது.
தொடர்ந்து, இதன் காரணமாக சுற்றுலா பயணிகள் மற்றும் பொதுமக்களுக்கு வனத்துறை மூலம் தடை விதிக்கப்பட்டு இருந்தது . யானையை கண்காணித்து விரட்டும் பணிகளில் வனத்துறையினர் ஈடுபட்டு வந்தனர் . யானை அடர்ந்த வனப் பகுதிக்குள் இடம் பெயர்ந்ததை அடுத்து கொடைக்கானல் வனத்துறை கட்டுப்பாட்டில் உள்ள சுற்றுலாத் தலங்களுக்கு மீண்டும் இன்று முதல் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க வனத்துறையானது அனுமதி அளித்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தொடர்ந்து பேரிஜம் ஏரிக்கு மட்டும் சுற்றுலாப் பயணிகள் கண்டு ரசிக்க தடையானது நீடித்து வருகிறது.