"குடிக்கு அடிமையாகி கஷ்டப்பட்டேன்!" - பிரபல பாடகியின் உருக்கமான வாக்குமூலம்! தப்பிக்க உதவியது யாரு?

வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருப்பது, இதே போன்ற சிக்கலில் இருக்கும் பலருக்கு ஒரு விழிப்புணர்வையும் நம்பிக்கையையும்
Dhurandhar Singer Jasmine Sandlas
Published on
Updated on
2 min read

சமீபத்தில் வெளியாகி ஹிட் அடித்த 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படத்தின் மூலம் மீண்டும் கவனத்தைப் பெற்றுள்ள பிரபல பாடகி ஜாஸ்மின் சாண்ட்லாஸ், தான் மதுப் பழக்கத்திற்கு அடிமையாகி இருந்த கசப்பான உண்மைகளை வெளிப்படையாகப் பகிர்ந்துள்ளார். ஒரு காலத்தில் மதுவின் பிடியில் சிக்கித் தனது வாழ்க்கையைத் தொலைக்கும் நிலைக்குச் சென்றதாகவும், அங்கிருந்து மீண்டு வரத் தனது தாய் கொடுத்த ஆதரவுதான் முக்கிய காரணம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். இந்த அதிர்ச்சிகரமான தகவல்கள் தற்போது அவரது ரசிகர்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிரபல யூடியூப் சேனல் ஒன்றில் பேசிய ஜாஸ்மின், தான் 23 வயது வரை மதுவைத் தொட்டதே இல்லை என்றும், ஆனால் வாழ்க்கையில் அடுத்தடுத்து ஏற்பட்ட சோகமான சம்பவங்களே தன்னை அந்தப் பழக்கத்திற்குத் தள்ளியதாகவும் கூறினார். ஒரே நேரத்தில் புகழின் உச்சிக்குச் சென்றது, குடும்ப உறவுகளில் ஏற்பட்ட விரிசல் மற்றும் தந்தையின் மறைவு எனத் தொடர்ந்து ஏற்பட்ட மன அழுத்தத்தால் தான் மதுவைத் தேடிச் சென்றதாக அவர் வருத்தத்துடன் தெரிவித்தார். அந்த இரண்டு மூன்று ஆண்டுகளில் மது போதையில் தான் செய்த சில காரியங்களுக்காக இப்போதும் வருந்துவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

தனது சிறுவயதில் பெற்றோர்களால் ஏற்பட்ட சில மனக்காயங்களே தன்னை இந்த நிலைக்குத் தள்ளியதாக ஜாஸ்மின் கூறினார். "சிறுவயதில் குழந்தைகள் மனம் உடைந்தால் அது அப்படியே தங்கிவிடும். தஞ்சம் அடையச் சரியான இடம் இல்லாதபோது, எல்லாவற்றிலும் ஒரு பாதுகாப்பைத் தேடத் தோன்றும். நானும் அப்படித் தேடித்தான் கடைசியில் மதுவிடம் சிக்கினேன்" என்று அவர் உருக்கமாகப் பேசினார். விலை உயர்ந்த மது வகைகள் மற்றும் சிரித்துப் பேசும் நண்பர்கள் என வெளியில் பார்க்க வாழ்க்கை ஜாலியாகத் தெரிந்தாலும், உண்மையில் பால்கனியில் அமர்ந்து தனியாக அழுதுகொண்டு தனிமையில் வாடியதாக அவர் தனது வேதனையைப் பகிர்ந்துள்ளார்.

இந்தக் கொடிய பழக்கத்திலிருந்து மீண்டு வருவது தனக்கு மிகப்பெரிய போராட்டமாக இருந்ததாகக் கூறிய ஜாஸ்மின், அந்தச் சமயத்தில் தனது தாயும் குடும்பத்தினரும் கொடுத்த அன்புதான் தன்னைக் காப்பாற்றியதாகத் தெரிவித்தார். "ஒவ்வொரு நாளும் பழைய பழக்கத்திலேயே விழத் தோன்றும். அப்போது கடவுளிடம் அழுது தொழுது எனக்கு இன்னொரு வாய்ப்பு கொடுங்கள் என்று வேண்டுவேன். மதுவை 'வேண்டாம்' என்று சொல்லும் தைரியம் நமக்குத் தேவை" என்று அவர் கூறினார். தனது வாழ்க்கையிலிருந்து நச்சுத்தன்மையான விஷயங்களை நீக்கிய பிறகு, தற்போது ஒரு மறுபிறவி எடுத்தது போல உணர்வதாக அவர் நெகிழ்ந்துள்ளார்.

பாடகி ஜாஸ்மின் சாண்ட்லாஸ் 'துரந்தர்: தி ரிவெஞ்ச்' திரைப்படத்தில் இடம்பெற்ற 'ஜாயே சஜனா' உள்ளிட்ட உணர்ச்சிகரமான பாடல்களைப் பாடியுள்ளார். ஆரி ஆரி மற்றும் மெயின் அவுர் து போன்ற இவரது மற்ற பாடல்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. கலைத்துறையில் சாதித்து வரும் இவர், தனது சொந்த வாழ்க்கைப் போராட்டங்களைப் பற்றி வெளிப்படையாகப் பேசியிருப்பது, இதே போன்ற சிக்கலில் இருக்கும் பலருக்கு ஒரு விழிப்புணர்வையும் நம்பிக்கையையும் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com