”வாரிசு” படத்துக்கு வரிசை கட்டும் பிரச்னைகள்...டென்ஷனில் படக்குழுவினர்!

”வாரிசு” படத்துக்கு வரிசை கட்டும் பிரச்னைகள்...டென்ஷனில் படக்குழுவினர்!
Published on
Updated on
2 min read

"வாரிசு” படத்திற்கு மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் விதமாக அமைந்த விவகாரத்தில் படக்குழுவின் முடிவு என்னவாக இருக்கும்...

”வாரிசு” திரைப்படம்:

தமிழ் திரையுலகின் முன்னணி நட்சத்திரமான நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் வம்சி படிப்பள்ளி இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ”வாரிசு”. தெலுங்கு மற்றும் தமிழில் வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வருகிறது. 

ரஞ்சிதமே பாடல்:

இதனிடையே, இந்த படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான “ரங்சிதமே” பாடல் கடந்த நவம்பர் 5 ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. தமன் இசையில் நடிகர் விஜயின் குரலில் வெளியான இந்த பாடல், 2 மில்லியன் பார்வையாளர்களை கடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

போர்க்கொடி தூக்கிய சங்கம்:

தமிழ் மற்றும் தெலுங்கில் உருவாகி வரும் “வாரிசு” பொங்கலுக்கு வெளியாகும் என தகவல் வெளியானது. ஆனால்,  பொங்கலுக்கு ( தெலுங்கில் சங்கராந்தி) ”வாரிசு” படத்தை தெலுங்கு திரையுலகில் வெளியிட விடமாட்டோம் என எதிர்ப்பு கிளம்பியது. அன்றைய தினம் எங்களுடைய தெலுங்கு படத்தை தான் வெளியிட வேண்டும் என்று தெலுங்கு திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பில் போர்க்கொடி தூக்கியதாலும், எதிர்ப்பார்த்த அளவுக்கு திரையரங்குகள் கிடைக்காததாலும் படத்தின் ரிலீஸ் தேதி மாற்றம் செய்யப்படும் என தகவல் வெளியானது.

அடுத்தடுத்த பிரச்னை:

விஜய் படம் என்றாலே பிரச்சனைக்கு பங்சமே இருக்காது என்பது தெரிந்த ஒன்றே, அதில் “வாரிசு” மட்டும் விதிவிலக்கல்ல. திரையிடுவதில் ஏற்பட்ட பிரச்னையையடுத்து, படத்தின் போஸ்ட் ப்ரொடக்‌ஷன் பணிகளில் படக்குழுவினர் அதிக கவனம் செலுத்தி வந்தனர். அதுமட்டுமல்லாமல், வாரிசு படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னை அருகே நடைபெற்று வரும் நிலையில், உரிய அனுமதி பெறாமல் யானைகளை படப்பிடிப்பு தளத்திற்கு அழைத்து வந்து படப்பிடிப்பு நடத்தியதாக குற்றச்சாட்டு எழுந்தது.

படக்குழுவினற்கு நோட்டீஸ்:

இந்த குற்றச்சாட்டை தொடர்ந்து செய்தி சேகரிக்கச் சென்ற செய்தியாளர்களை தாக்கியதாகவும் மற்றொரு குற்றச்சாட்டு எழுந்தது. இந்த விவகாரம் மிகப்பெரிய அளவில் பிரச்னையான நிலையில், வாரிசு படக்குழுவுக்கு விலங்குகள் நல வாரியம் நோட்டீஸ் அனுப்பியது. படப்பிடிப்பு தளத்தில் உரிய அனுமதியின்றி யானையை பயன்படுத்தியது குறித்து ஏழு நாட்களுக்குள் விளக்கம் அளிக்க வேண்டும் என்று அந்த நோட்டீஸில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

படக்குழுவின் முடிவு என்ன?:

இந்நிலையில், “வாரிசு” படத்திற்கு அடுத்தடுத்து வரும் பிரச்னையில் இந்த விவகாரம் மேலும் பின்னடைவை ஏற்படுத்தும் என்பதால், விலங்குகள் நல வாரியத்திற்கு விளக்கம் அளிக்க படக்குழு தயாராக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த வகையில் யானையை வைத்து படப்பிடிப்பு நடத்தவில்லை எனவும் பூஜைக்கு மட்டுமே அழைத்துவரப்பட்டது என விளக்கம் அளிக்கப்பட இருப்பதாகவும், மேலும் யானைகளை வைத்து எடுத்த காட்சிகளை நீக்கிவிட்டு அதற்கு பதிலாக கிராபிக்ஸ் காட்சிகளை சேர்க்கலாமா எனவும் தயாரிப்பு தரப்பு தீவிர ஆலோசனையில் இருப்பதாக கூறுகின்றனர்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com