
ஐதராபாத்தில் உள்ள பஞ்சரா ஹில்ஸ் பகுதியில் உள்ள ஐந்து நட்சத்திர ஓட்டலில் போதைப் பொருட்களுடன் உல்லாச பார்ட்டி நடத்தப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து போலீசார் சம்பந்தப்பட்ட ஓட்டலை முற்றுகையிட்ட போது பிரபல தெலுங்கு நடிகரும், சிரஞ்சீவியின் சகோதரருமான நாகபாபுவின் மகள், காவல்துறை அதிகாரியின் மகள், எம்பியின் மகன் உள்பட ஒரு சில முக்கிய பிரமுகர்கள் என மொத்தம் 150 பேரிடமும் விசாரணை நடந்ததாக கூறப்படுகிறது.
விசாரணைக்கு பின் அனைவரும் விடுவிக்கப்பட்டதாகவும், ரத்த பரிசோதனையின் முடிவுக்கு பின்னரே அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், போதைப்பொருள் பயன்படுத்தியிருந்தால் யாரும் தப்ப முடியாது என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மேலும் இந்த பார்ட்டி நடந்த இடத்தில் கோகைன் உள்ளிட்ட போதை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதால், விடுதியின் உரிமையாளர்கள் மற்றும் மேலாளர் உள்ளிட்டோரை கைது செய்ததாகவும் கூறப்படுகிறது.
இந்நிலையில் நடிகர் நாகபாபுவின் மகளும் இதில் சம்பந்தப்பட்டிருப்பதால் இதுகுறித்து அவர் விளக்கமளித்துள்ளார். அதாவது எனது மகள் நிகாரிகா சம்பந்தப்பட்ட பப் ஹோட்டலுக்கு சென்றது உண்மைதான் என்றும், ஆனால் அதே நேரத்தில் அவர் எந்தவித போதை பொருளும் உபயோகப்படுத்தவில்லை என்றும், போலீசாரின் முதல் கட்ட விசாரணைக்கு பின்னரே அவர் விடுவிக்கப்பட்டதாகவும் நாகபாபு கூறியுள்ளார்.