"சோஷியல் மீடியாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!" - உலகக்கோப்பை வெற்றியை "அந்த 2 பேருக்கு" அர்ப்பணித்த கம்பீர்!

அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் 250 ரன்களைக் கடந்தது தான் எங்களது துணிச்சலுக்குச் சான்று...
"சோஷியல் மீடியாவுக்கு பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை!" - உலகக்கோப்பை வெற்றியை "அந்த 2 பேருக்கு" அர்ப்பணித்த கம்பீர்!
Published on
Updated on
2 min read

இந்திய கிரிக்கெட் அணி 2026-ஆம் ஆண்டு டி20 உலகக்கோப்பையை வென்று வரலாற்றுச் சாதனை படைத்துள்ள நிலையில், பயிற்சியாளர் கௌதம் கம்பீர் வழக்கம்போல தனது அதிரடியான பேட்டியால் அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளார். வெற்றிக்குப் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், "எனது பொறுப்பு என்பது சமூக வலைதளங்களில் கருத்துச் சொல்பவர்களுக்காக அல்ல; அந்த அறையில் இருக்கும் 30 வீரர்களுக்கு மட்டுமே நான் பதில் சொல்லக் கடமைப்பட்டவன்" என்று முகத்திலடித்தார் போலக் கூறினார். ஒரு பயிற்சியாளர் எவ்வளவு திறமையானவர் என்பது அந்த அணியைப் பொறுத்தே அமையும் என்றும், இன்று வீரர்கள் தான் தன்னை ஒரு சிறந்த பயிற்சியாளராக மாற்றியுள்ளனர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

வெற்றிக் கொண்டாட்டங்களுக்கு மத்தியிலும், தனக்கு முன்னால் இந்தப் பதவியில் இருந்த ராகுல் டிராவிட் மற்றும் தற்போதைய பிசிசிஐ சிறப்பு மையத்தின் தலைவர் விவிஎஸ் லக்ஷ்மன் ஆகியோரை கம்பீர் மறக்கவில்லை. இந்த உலகக்கோப்பை வெற்றியை அவர் இவ்விருவருக்கும் அர்ப்பணிப்பதாகத் தெரிவித்தார். இந்திய அணியை ஒரு வலுவான நிலையில் விட்டுச் சென்றதற்காக ராகுல் டிராவிட்டிற்கும், சிறந்த இளம் வீரர்களை உருவாக்கித் தந்ததற்காக லக்ஷ்மணிற்கும் அவர் நன்றி தெரிவித்தார். மேலும், பல விமர்சனங்களுக்கு மத்தியிலும் நேர்மையுடன் பணியாற்றிய தேர்வு குழுத் தலைவர் அஜித் அகர்கர் மற்றும் ஐசிசி தலைவர் ஜெய் ஷா ஆகியோருக்கும் தனது நன்றியைப் பகிர்ந்து கொண்டார்.

குறிப்பாக, தனது பயிற்சியின் கீழ் இந்திய அணி சொந்த மண்ணில் நியூசிலாந்து மற்றும் தென்னாப்பிரிக்காவிடம் டெஸ்ட் தொடர்களை இழந்தபோது, தான் மிகுந்த மன உளைச்சலில் இருந்ததாகக் கம்பீர் குறிப்பிட்டார். அந்த மோசமான காலகட்டத்தில் ஜெய் ஷா தனக்கு போன் செய்து நம்பிக்கை கொடுத்ததாக அவர் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். "தோற்றுவிடுவோம் என்ற பயத்தை நாம் முதலில் தூக்கி எறிய வேண்டும். பயந்து போய் 120 ரன்கள் எடுப்பதை விட, அதிரடியாக விளையாடி 120 ரன்களில் ஆட்டமிழப்பது பரவாயில்லை. அரையிறுதி மற்றும் இறுதிப்போட்டியில் 250 ரன்களைக் கடந்தது தான் எங்களது துணிச்சலுக்குச் சான்று" என்று அவர் வீரர்களின் அதிரடி ஆட்டத்தைப் பாராட்டினார்.

கேப்டன் சூர்யகுமார் யாதவைப் பற்றிப் பேசிய கம்பீர், அவர் ஒரு தந்தை போன்ற பொறுப்புடன் அணியை வழிநடத்துவதாகவும், அவருடன் இணைந்து பணியாற்றுவது மிக எளிதாக இருப்பதாகவும் கூறினார். மேலும், "தனிப்பட்ட சாதனைகளைக் கொண்டாடுவதை நிறுத்திவிட்டு, கோப்பைகளைக் கொண்டாடுங்கள். பல ஆண்டுகளாக நாம் தனிநபர் ரன்களைக் கொண்டாடியது போதும்" என்று ஒரு முக்கியக் கோரிக்கையை வைத்தார். இதற்குப் பதிலளித்த சூர்யகுமார் யாதவ், கொல்கத்தா அணியில் விளையாடிய காலத்திலிருந்தே தங்களுக்குள் ஒரு நல்ல நட்பு இருப்பதாகவும், அணியின் வெற்றிக்காக இருவரும் ஒருமித்த கருத்துடன் செயல்படுவதாகவும் தெரிவித்தார். அடுத்ததாக 2028 ஒலிம்பிக் போட்டியில் தங்கம் வெல்வதே தங்களது இலக்கு என்றும் அவர் நம்பிக்கையுடன் கூறினார்.

இந்தப் போட்டியில் இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள் நியூசிலாந்து பந்துவீச்சை நிலைகுலையச் செய்தனர். சஞ்சு சாம்சன் 89 ரன்கள் குவித்து அசத்த, அபிஷேக் சர்மா (52) மற்றும் இஷான் கிஷன் (54) ஆகியோரும் அதிரடியாக அரைசதம் கடந்தனர். இதனால் இந்தியா 255 ரன்கள் என்ற மலைக்க வைக்கும் இலக்கை எட்டியது. பின்னர் பந்துவீச்சில் ஜஸ்பிரித் பும்ரா 15 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்தி மிரட்டினார். அவருக்குத் துணையாக அக்சர் படேல் 3 விக்கெட்டுகளைச் சாய்த்தார். இதனால் நியூசிலாந்து அணி 159 ரன்களுக்குச் சுருண்டு, இந்தியா தனது மூன்றாவது உலகக்கோப்பையைத் தக்கவைத்துக் கொண்டது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com