ஒரு திரைப்படத்தின் முதல் சில காட்சிகளிலேயே அதன் உலகத்துக்குள் பார்வையாளர்களை அழைத்துச் செல்வது எளிதான விஷயம் அல்ல. அதற்கான முயற்சியை ‘Toxic: A Fairy Tale for Grown-Ups’ திரைப்படம் தொடக்கத்திலேயே மேற்கொள்கிறது. பிரம்மாண்டமான காட்சியமைப்பு, இருண்ட உலகம், குற்றப் பின்னணி, அதிகாரப் போட்டி, குடும்ப உறவுகள் என வழக்கமான மாஸ் சினிமாவின் எல்லைகளைத் தாண்டி வேறு ஒரு அனுபவத்தை கொடுக்க இயக்குநர் கீது மோகன்தாஸ் முயன்றிருக்கிறார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு யஷ் நடிப்பில் வெளியாகியிருக்கும் இந்தப் படம், ‘KGF’ பாணியில் இன்னொரு மாஸ் விருந்தாக இருக்குமா என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. ஆனால், Toxic அந்த எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யாமல், யஷ்ஷின் ஸ்டார் இமேஜை வைத்து ஒரு இருண்ட கிரைம் உலகத்தை உருவாக்க முயற்சிக்கிறது. ஆனால் ரசிகர்களின் எதிர்பார்ப்பை முழுமையாக்கும் வகையில் இல்லை.
படத்தின் மையக் கதாபாத்திரம் ராயா. வெளியில் அமைதியான மனிதராகத் தெரியும் அவர், உண்மையில் குற்றம், போதைப்பொருள் வர்த்தகம் மற்றும் அதிகாரப் போட்டி நிறைந்த உலகத்தின் ஒரு முக்கியமான பகுதியாக இருக்கிறார். அந்த உலகத்தில் தனது இருப்பையும் அதிகாரத்தையும் தக்கவைத்துக்கொள்ள ராயா எடுக்கும் முடிவுகள்தான் கதையின் மையம். அதேசமயம் குடும்ப உறவுகளுக்கும் திரைக்கதை முக்கியத்துவம் கொடுக்கிறது. குறிப்பாக தேவாவுக்கும் அவரது சகோதரிக்கும் இடையேயான உறவு, கதைக்கு உணர்ச்சிப் பரிமாணத்தை சேர்க்கிறது.
யார் நண்பன்? யார் எதிரி? யாரை நம்புவது? என்ற கேள்விகளை தொடர்ந்து எழுப்புவதன் மூலம் படம் ஒரு குறிப்பிட்ட அளவுக்கு சஸ்பென்ஸை தக்கவைத்துக் கொள்கிறது. ஆனால் இங்கேதான் திரைக்கதையின் இன்னொரு முகமும் தெரிகிறது. பல கதாபாத்திரங்களையும், பல அடுக்குகளையும் ஒரே நேரத்தில் கையாள முயற்சிப்பதால், சில இடங்களில் கதை தெளிவை இழக்கிறது. ரசிகர்கள் எளிதில் புரிந்து கொள்ள முடியாத வகையில் அமைந்திருக்கிறது. கதாபாத்திரங்களின் நோக்கங்கள் முழுமையாக புரியாமல் போகும் தருணங்களும் இருக்கின்றன.
Toxic-ன் மிகப்பெரிய பலம் யஷ்.
‘KGF’ மூலம் உருவான அவரது மாஸ் இமேஜை அப்படியே பயன்படுத்தாமல், சற்று இருண்ட மற்றும் சிக்கலான கதாபாத்திரமாக அவரை காட்சிப்படுத்த இயக்குநர் முயன்றிருக்கிறார். அமைதியாக நிற்கும் காட்சிகளிலும், பார்வையாலும் உடல்மொழியாலும் கதாபாத்திரத்தின் மனநிலையை வெளிப்படுத்தும் இடங்களிலும் யஷ் தனது திரை இருப்பை உணர்த்துகிறார்.
ஆக்ஷன் காட்சிகளில் அவரது ரசிகர்களுக்கு தேவையான மாஸ் தருணங்கள் கிடைக்கின்றன. குறிப்பாக பின்னணி இசையுடன் யஷ்ஷின் என்ட்ரி மற்றும் ஆக்ஷன் காட்சிகள் திரையரங்கில் கொண்டாட்டத்தை ஏற்படுத்தக்கூடியவை.
ஆனால், யஷ்ஷின் ஸ்டார் பவரை விட கதாபாத்திரத்தின் ஆழம் இன்னும் அதிகமாக இருந்திருக்கலாம் என்ற எண்ணமும் ஏற்படுகிறது. சில இடங்களில் யஷ் கதாபாத்திரமாக இருப்பதைவிட ‘யஷ்’ ஆகவே தெரியும் தருணங்கள் உள்ளன.
நயன்தாராவின் கதாபாத்திரம் படத்தின் குடும்ப மற்றும் உணர்ச்சிப் பகுதிக்கு வலு சேர்க்கிறது. அவரது நடிப்பு இயல்பாக இருக்கிறது. ஆனால், அவரது கதாபாத்திரத்திற்கு இன்னும் அதிகமான ஆழமும் முக்கியத்துவமும் கொடுத்திருக்கலாம். கியாரா அத்வானி வரும் காட்சிகள் படத்தின் கிரைம் மற்றும் ஆக்ஷன் உலகத்துடன் இணைக்கப்பட்டுள்ளன. அவரது திரை இருப்பு படத்திற்கு கிளாமரை மட்டுமின்றி வேறு ஒரு டோனையும் கொடுக்கிறது. இருப்பினும், இரண்டு கதாபாத்திரங்களுமே திரைக்கதையில் இன்னும் வலுவாக எழுதப்பட்டிருந்தால், படத்தின் உணர்ச்சிப் பகுதி இன்னும் தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கும்.
இயக்குநர் கீது மோகன்தாஸ் வழக்கமான மாஸ் சினிமாவின் பாதுகாப்பான பாதையைத் தேர்வு செய்யாமல், தனக்கென ஒரு உலகத்தை உருவாக்க முயன்றிருப்பது பாராட்டுக்குரியது. இருண்ட காட்சியமைப்பு, கதாபாத்திரங்களின் தோற்றம், பிரம்மாண்டமான செட்கள், கிரைம் உலகத்தின் வடிவமைப்பு என படத்தின் ஒவ்வொரு பிரேமிலும் ஒரு தனித்துவமான கலை வடிவத்தை கொண்டு வர முயற்சி தெரிகிறது.
‘A Fairy Tale for Grown-Ups’ என்ற டேக்லைனும் படத்தின் உலகத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. இது குழந்தைகளுக்கான தேவதைக் கதை அல்ல; பெரியவர்களுக்கான இருண்ட, வன்முறையான, அதிகாரம் நிறைந்த உலகம். ஆனால், அந்த உலகத்தை உருவாக்கிய அளவுக்கு அதை சீராகச் சொல்லும் திரைக்கதையில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம்.
ஒளிப்பதிவு படத்தின் முக்கியமான பலம். இருண்ட உலகம், பிரம்மாண்டமான லொகேஷன்கள், ஆக்ஷன் காட்சிகள் என ஒவ்வொரு காட்சியும் பெரிய திரைக்காக உருவாக்கப்பட்டிருப்பது தெளிவாக தெரிகிறது. பின்னணி இசையும் மாஸ் தருணங்களுக்கு தேவையான எடையை கொடுக்கிறது. யஷ்ஷின் என்ட்ரி மற்றும் ஆக்ஷன் காட்சிகளில் இசை மற்றும் காட்சியமைப்பு இணையும் விதம் ரசிகர்களுக்கு நல்ல அனுபவத்தை கொடுக்கிறது. அதே நேரத்தில், இந்த பிரம்மாண்டம் சில நேரங்களில் கதையைவிட முன்னிலை பெறுகிறது. காட்சிகள் அழகாகவும் பிரம்மாண்டமாகவும் இருந்தாலும், அவை அனைத்தும் கதைக்கு சமமான பங்களிப்பை செய்கிறதா என்ற கேள்வி எழுகிறது.
Toxic-ன் மிகப்பெரிய பலவீனம் அதன் திரைக்கதை வேகம்.
பல கதாபாத்திரங்கள், பல்வேறு உறவுகள், குற்ற உலகம், போதைப்பொருள் வர்த்தகம், அதிகாரப் போட்டி என ஏராளமான விஷயங்களை ஒரே கதைக்குள் கொண்டு வர முயற்சிப்பதால், சில பகுதிகள் தேவைக்கு அதிகமாக நீள்கின்றன. சில காட்சிகள் தாக்கத்தை ஏற்படுத்தினாலும், அவற்றுக்கு இடையிலான இணைப்பு எப்போதும் வலுவாக இருப்பதில்லை.
குறிப்பாக யஷ்ஷிடம் இருந்து ‘KGF’ அளவிலான தொடர்ச்சியான மாஸ் தருணங்களை எதிர்பார்த்து செல்லும் ரசிகர்களுக்கு படம் சற்று பொறுமையை கேட்கிறது. இது முழுக்க முழுக்க மாஸ் திரைப்படம் அல்ல; அதே நேரத்தில் முழுமையான கிரைம் டிராமாவாகவும் எப்போதும் நிலைத்திருக்கவில்லை. ‘KGF’ போன்ற நேரடியான மாஸ் என்டர்டெயின்மென்ட்டை எதிர்பார்ப்பவர்கள் ஏமாற்றமடைய வாய்ப்பு உள்ளது. ஆனால் வித்தியாசமான உலகம், டார்க் கிரைம் கதை, ஸ்டைலிஷான மேக்கிங் ஆகியவற்றை ரசிப்பவர்களுக்கு Toxic ஒரு முயற்சி செய்யக்கூடிய படம்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்