

கீது மோகன்தாஸ் இயக்கி, 'ராக்கிங் ஸ்டார்' யாஷின் நடிப்பில் பிரம்மாண்ட திரைப்படமாக வெளிவந்ததுதான் 'டாக்ஸிக்'. இத்திரைப்படத்தில் நயன்தாரா, ஹுமா குரேஷி, கியாரா அத்வானி, தாரா சுதாரியா, ருக்மிணி வசந்த் உள்ளிட்ட நட்சத்திரப் பட்டாளமே நடித்துள்ளது. இந்த திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனங்களையே பெற்றது. மேலும், இத்திரைப்படத்தின் ட்ரைலர் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய நிலையில், பலரும் இந்த திரைப்படத்தின் ரிலீசிற்காக காத்திருந்தனர். ஆனால், அவர்களின் எதிர்பார்ப்பை இத்திரைப்படம் பூர்த்தி செய்ததா? என்று கேட்டால்.. அது கேள்வி குறிதான்.
திரைப்படம் வெளியாகி வாரத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்றே இந்தியாவில் ரூ. 200 கோடி வசூலைக் கடந்துள்ளது. அதாவது, திரைப்படம் வெளியான இரண்டாம் நாளிலிருந்து வசூலில் சற்று சரிவைக் கண்ட இப்படம், திரைப்படம் வெளிவந்த அந்த வாரத்தின் முதல் ஞாயிற்றுக்கிழமையன்று ரூ. 23 கோடியை வசூலித்துள்ளது. இதன் மூலம் இந்தியாவில் வசூல் சுமார் (நிகர லாபம்) ரூ. 214 கோடியாகவும், (மொத்தமாக) ரூ. 255.95 கோடியாகவும் உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், ஐந்தாம் நாளில், 'டாக்ஸிக்' திரைப்படத்தின் 16,241 காட்சிகளில் ₹23 கோடி (நிகர) வசூல் செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. சாக்னில்க்-கின் தகவலின்படி, 'டாக்சிக்' திரைப்படம் இதுவரை இந்தியாவில் மொத்த வசூலாக ₹255.95 கோடியையும், நிகர வசூலாக ₹214.10 கோடியையும் வசூலித்துள்ளதாக தெரிவித்துள்ளது.
மேலும், இத்திரைப்படம் வெளிநாடுகளில் ₹2.00 கோடி வசூலித்ததாகவும் கூறப்படுகிறது. இதன் மூலம் இத்திரைப்படம் மொத்த உலகளாவிய வசூலில் ₹285.20 கோடியாக உயர்ந்துள்ளதாக கூறப்படுகிறது. 'டாக்சிக்' திரைப்படம் வெளியான முதல் நாளில் ரூ. 101.10 கோடி வசூலித்துள்ளது. திரைப்படம் வெளியான இரண்டாவது, மூன்றாவது மற்றும் நான்காவது நாட்களில் முறையே ரூ. 37.65 கோடி, ரூ. 27.20 கோடி மற்றும் ரூ. 25.15 கோடி வசூலித்துள்ளது.
2018-ல் 'KGF' திரைப்படம் வெளியானபோது, அந்த சமயத்தில் நடிகர் யாஷ் கன்னட வட்டாரத்திற்கு வெளியே அவ்வளவு பிரபலமான நடிகராக இருக்கவில்லை. ஆனால் இங்குதான் ட்விஸ்ட், 'KGF 2' வெளிவந்த நேரத்தில், 'KGF சாப்டர் 1' திரைப்படம் அதன் திரையரங்கு மற்றும் OTT வெளியீட்டின் மூலம் ஒரு தனித்துவமான அந்தஸ்தைப் பெற்றது. 'KGF' திரைப்படம் வெளியான முதல் நாளில் கன்னடம் மற்றும் அனைத்து மொழிகளிலும் சேர்த்து ரூ. 21.80 கோடி வசூலித்தது என்பது குறிப்பிடத்தக்கது. வர்த்தக கண்காணிப்பு நிறுவனமான சாக்னில்க் தகவலின்படி, ஒன்பது வாரங்களுக்குப் பிறகு இந்தியாவில் இப்படத்தின் நிகர வசூல் ரூ. 228 கோடியாக இருந்துள்ளது. 'KGF சாப்டர் 1' திரைப்படம் வெறும் ரூ. 80 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
அதன்பின்னர் 2022-ம் ஆண்டில், 'KGF சாப்டர் 2' திரைப்படம் உலகளவில் ₹1,215.00 கோடி என்ற பிரம்மாண்டமான வசூலை ஈட்டியது. இத்திரைப்படத்திற்கு இந்தியாவில் மொத்தமாக ₹1,000.85 கோடி வசூலானது. மேலும், வெளிநாடுகளில் ₹214.15 கோடி வசூலானது. இந்தியாவில் இப்படத்தின் நிகர வசூல் ₹434.70 கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், ஆச்சரியப்படுத்தும் விதமாக 'KGF சாப்டர் 2' திரைப்படத்தின் பட்ஜெட் ₹100 கோடிதான். ஆனால் கிடைத்த லாபமோ பன்மடங்கு.
'டாக்ஸிக்' திரைப்படத்தினை 'கேவிஎன் புரொடக்ஷன்ஸ்' மற்றும் 'மான்ஸ்டர் மைண்ட் கிரியேஷன்ஸ்' சார்பில் வெங்கட் கே. நாராயணா மற்றும் யாஷ் தயாரித்துள்ளனர். கன்னடம் மற்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டு படமாக்கப்பட்ட இத்திரைப்படம், இந்தி, தெலுங்கு, தமிழ் மற்றும் மலையாளத்தில் மொழிமாற்றம் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
இத்திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றாலும் சமூகவலைத்தளங்களில் பெரும் விவாதத்தையே ஏற்படுத்தியுள்ளது. மேலும், அந்த திரைப்படத்தின் இயக்குநர் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்த கருத்து ரசிகர்களை இன்னும் கோபத்தை ஏற்படுத்தியது. அதாவது, அவர் ஒரு கதையை எழுதி, வேறொன்றை படமாக்கி, எடிட்டிங்-கில் ஒருவிதமாக எடிட் செய்து, திரைப்படம் ஒன்றாக வெளியிடுவதாக கூறினார். இந்த வீடியோ வைரலாகி பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. எது எப்படி இருந்தாலும் வசூலில் 'டாக்ஸிக்' தெறிக்க வைத்து விட்டது என்றுதான் கூறவேண்டும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்