“வெளியான பிறகும் ஜனநாயகனுக்கு சிக்கலா?” - பாப்பாபட்டி மக்கள் போட்ட புதிய வழக்கு.. பதிலளிக்க படக்குழுவிற்கு உத்தரவிட்ட நீதிமன்றம்!

திரைப்படத்தை திரையரங்குகளிலோ அல்லது பிற ஊடகங்களிலோ திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும்..
jana nayagan movie
Published on
Updated on
2 min read

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தாலுகாவைச் சேர்ந்த பாப்பாபட்டி கிராம மக்கள் சார்பாக சின்னச்சாமி என்பவர் ஐகோர்ட் கிளையில் நடிகர் விஜய் நடிப்பில் வெளியான ஜனநாயகன் திரைப்படத்தில் சர்ச்சை குரிய சில காட்சிகளை நீக்க வலியுறுத்தி மனு அளித்துள்ளார். நடிகர் விஜய் நடிப்பில், இயக்குனர் H.வினோத் இயக்கத்தில் உருவான 'ஜனநாயகன்' திரைப்படம் பல தடைகளுக்கு பின் ஜூலை 23ம் தேதி திரையரங்குகளில் வெளியாகியது. 

2026 பொங்கலுக்கு வெளியாகும் என படக்குழு சார்பில் அறிவிக்கப்பட்ட பின், தணிக்கை சான்றிதழ் பெறுவதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக படம் வெளியாவது தள்ளிப் போனது. பின்னர் தேர்தலுக்கு பின்னர் வெளியாகுமென அறிவிக்கபட்டது. அதையடுத்து ஜூலை 23ம் தேதி சுமார் 8000 திரையரங்குகளில் வெளியானது. நடிகர் விஜய்யின் 69-வது திரைப்படமாக உருவான ‘ஜனநாயகன்’, அவரது கடைசி திரைப்படம் என்று அறிவித்து, சினிமாவை விட்டு விலகி அரசியலில் முழுமையாக களமிறங்கினர். 2026 சட்டமன்ற தேர்தலில் 108 என்ற பெரும்பாண்மையை கைப்பற்றி தற்போது தமிழக முதல்வராக பதவி வகித்து வருகிறார்.

இந்நிலையில் இந்த படத்தின் தொடக்க மற்றும் முடிவு பகுதிகளில், உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி என்ற கிராமத்தில் ஊராட்சி மன்றத் தேர்தல் நடைபெற்றது போலவும், அங்கு வாக்களிக்க முற்படுபவர்களின் கைகள் வெட்டப்படுவது போலவும், பள்ளிச் சிறுமிகள் மற்றும் பெண்கள் மீது வன்முறை தாக்குதல்கள் நடத்தப்படுவது போலவும் காட்சிகள் அமைக்கப்பட்டுள்ளன. தற்போது இதன் எதிரொலியாக பாப்பாபட்டி கிராம மக்கள் தங்களது உரிமைகளுக்காகவும், சட்டப் போராட்டங்களின் வழியிலும் போராடி வந்த வரலாற்றை மறைத்து, கிராமத்தை சாதி வெறி பிடித்த பகுதியாகவும் வன்முறை பூமியாகவும் தவறாக  சித்திருத்துள்ளதாக கிராம மக்கள் குற்றசாட்டியுள்ளனர். மேலும் "இது கிராம மக்களின் கண்ணியத்திற்கும் நற்பெயருக்கும் களங்கத்தை ஏற்படுத்தியுள்ளது” என்றும் அத்தகைய காட்சிகளை நீக்கவேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 

பாப்பாபட்டி கிராம மக்கள் அளித்த புகார்களை ஆய்வு செய்து, படத்தில் உள்ள அவதூறு மற்றும் வன்முறையைத் தூண்டும் காட்சிகளை உடனடியாக நீக்க வேண்டும். ஆட்சேபனைக்குரிய காட்சிகள் முழுமையாக நீக்கப்படும் வரை திரைப்படத்தை திரையரங்குகளிலோ அல்லது பிற ஊடகங்களிலோ திரையிட இடைக்காலத் தடை விதிக்க வேண்டும் என்றும் கிராமத்தின் நற்பெயருக்கு களங்கம் விளைவித்ததற்காகப் படக்குழுவினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் மனுதாரர் கோரியிருந்தார்.

இந்த மனு மதுரை நீதிமன்ற நீதிபதிகள் சிவி.கார்த்திகேயன், ஆர்.சக்திவேல் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் வித்யா சாகர் ஆஜராகி, கிராமத்தை சாதி வெறி பிடித்த பகுதியாகவும் வன்முறை பூமியாகவும் தவறாக சித்தரித்துள்ளது ஏற்புடையது அல்ல. எனவே அந்த காட்சிகளை நீக்க உத்தரவிட வேண்டும். ஏற்கனவே இந்த படம் சமூக வலைதளங்களில் வெளியான போதே மனுதாரர் தரப்பில் எங்களது ஊர் பெயரை நீக்க வேண்டும் என மனு அளித்திருந்தோம் அதை பரிசீலனை செய்யவில்லை என்று வாதிட்டார்.

அதையடுத்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோவிந்தராஜன் “இந்த படத்தில் ‘பாப்பம் பட்டி’ என்று தான் வருகிறது ‘பாப்பா பட்டி’ இல்லை மேலும் மனுதாரர் சமூக வலைதளங்களில் படத்தை பார்த்ததாக சொல்கிறார், அதுவே குற்றம் எனவே இந்த மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என வாதிட்டார். இதனை பதிவு செய்த நீதிபதிகள் தங்கள் கூறும் கருத்துக்களை பதில் மனுவாக தாக்கல் செய்யுங்கள் என உத்தரவிட்டு. மேலும் இது தொடர்பாக படத்தின் தயாரிப்பாளர் வெங்கட் நாராயணன், பட இயக்குநர் H வினோத், தணிக்கை துறை அதிகாரிகள் பதிலளிக்க உத்தரவிட்டு இந்த வழக்கை ஆகஸ்ட் 8ஆம் தேதி ஒத்தி வைத்தார்.

இதற்குமுன் படம் இணையத்தில் கசிந்த போதே, மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே உள்ள பாப்பாபட்டி கிராமத்தில் நடந்த உள்ளாட்சித் தேர்தல் குறித்து தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாகவும், அதை நீக்கக் கோரியும் கிராம மக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். 1996 முதல் 2006 வரை பாப்பாபட்டி கிராமத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாமல் இருந்தது. பாப்பாபட்டி ஊராட்சி தலைவர் பதவி பட்டியல் சமூகத்திற்கு ஒதுக்கப்பட்டதை, மற்றொரு சமூகத்தினர் எதிர்த்ததால் தொடர்ந்து தேர்தல் புறக்கணிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com