தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் டி.டி.எப்... இப்போ புது கேஸ்..? கடந்து வந்த பாதை என்ன ...?

தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் டி.டி.எப்... இப்போ புது கேஸ்..? கடந்து வந்த பாதை என்ன ...?
Published on
Updated on
3 min read

சென்னையில் படம் பார்க்க, நம்பர் பிளேட் இல்லாமல்  காரை ஓட்டி வந்த டி.டி.எப் வாசனின் வாகனத்தை போக்குவரத்து போலீசார் பறிமுதல் செய்து அபராதம் விதித்தனர். 

கோவையை சேர்ந்த பிரபல யூடியூபரான டி.டி.எப் வாசன் பைக் ரைய்டு செய்வது, திரைப்படங்களில் வருவது போன்று ஸ்டண்ட் செய்வது ஆகியவற்றை வீடியோ எடுத்து அதனை  யூடியூபில் பதிவு செய்து பிரபலமானவர். இதற்கென இவர் ஒரு ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளார். அவரது யூடியூப் பக்கத்தில் மூன்று மில்லியன் சப்ஸ்கிரைபர்களை வைத்துள்ளார்.   

 
இந்தநிலையில் அவர் தொடர்ந்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். அதாவது கடந்த ஜூலை மாதம் அவர் தனது பிறந்தநாளை கோவை தனியார் விடுதியில் ஆயிரக்கணக்கான ரசிகர்களுடன் கொண்டாடினார். அப்போது கூடிய ரசிகர்களின் கூட்டத்தால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டினர். தொடர்ந்து டி.டி.எப் வாசன் பற்றி பல விமர்சனங்கள் எழுந்தது . மேலும் பைக் ஸ்டண்டுகள், நெடுஞ்சாலையில் அதிவேகமாக பைக் ஓட்டுவது என இளைஞர்களுக்கு தவறான முன்னுதாரணமாக இருப்பதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டது. இந்த பிரச்சனைக்கு விளக்கமளித்து முடிவுற்ற நிலையில் அடுத்த சர்ச்சையில் சிக்கினார். 

தூத்துக்குடியை சேர்ந்த பிரபல யூடியூபர் ஜி.பி.முத்து வட்டார வழக்கு மொழிகளில் பேசி மக்கள் மத்தியில் பரீட்சையமானவர். இவரை சந்தித்து பேசிய டி.டி.எப், அவரை பைக்கில் அமரவைத்துக்கொண்டு அதிவேகமாக சென்றுள்ளார். ரைய்டுக்கு செல்லும் முன் வாசனின் பைக்கை பார்த்த ஜி.பி.முத்து, இந்த பைக்கை பார்த்தால் பயமாக உள்ளது, பிடிமானம் கூட இல்லை, இதை எப்படி ஏறுவது எனக் கேட்டுள்ளார். அதற்கு பதிலளித்த வாசன், தன்னை பிடித்துக்கொள்ளுங்கள் என கூறிவிட்டு அதிவேகமாக சென்றுள்ளார். வாகன நெருக்கடியுள்ள சாலையில், 150 கி.மீ வேகத்தில் செல்கிறார். அப்போது பயத்தில் ஜி.பி.முத்து அலறுகிறார். மேலும் ஜி.பி. முத்து ஹெல்மெட் கூட அணியாத நிலையில், சென்றுள்ளார். இந்த விடியோவை பார்த்த நெட்டிசன்கள் பலரும் சாலை விதிகளை மீறும் டி.டி.எப். வாசன் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என காவல்துறைக்கு கோரிக்கை விடுத்தனர். அதன்படி, கோவை போத்தனூர் காவல் துறையினர் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். மேலும் டி.டி.எப். வாசன் மீது சூலூர் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. சூலூர் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட சிந்தாமணிபுதூர் பகுதியில் பாலக்காடு சாலையில் அதிவேகமாக வாகனம் ஓட்டியதால் 3 பிரிவுகளில் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவிலும், மோட்டார் வாகன சட்டப்படி பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய 2 பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் டி.டி.எப். வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக சூலூர் காவல் நிலையத்திற்கு வந்த வாசனை காவல் துறையினர் கைது செய்து, பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். 

பின்னர் கடந்த சில தினங்களுக்கு முன்பாக கடலூரில் திரைப்பட அலுவலகம் திறப்பு விழாவிற்கு டி.டி.எப். வாசனுக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.இதுகுறித்து அவர் சமூக வலைத்தளத்தை வீடியோ வெளியிட்ட நிலையில் அவரது ரசிகர்கள் கடலூர் பகுதிக்கு படையெடுத்தனர். இதனால் அந்த பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர். காவல்துறையின் கட்டுப்பாட்டை மீறியும் கூட்டம் கூடியதால் கட்டுப்படுத்த முடியாமல் திணறிய காவல்துறையினர் அவர்களை விரட்டி அடித்தனர். வாசன் ரசிகர்களின்  இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்த காவல்துறையினர், ஹெல்மெட் அணியாமல் இருசக்கர வாகனங்களை இயக்கிய 200க்கும் மேற்பட்ட வாகனங்களுக்கு அபராத தொகையும் விதித்தனர். மேலும், டிடிஎஃப் வாசன் மீது 5 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவும்  செய்யப்பட்டுள்ளது. இப்படியாக தொடர் சர்ச்சைகளில் சிக்கி வரும் வாசன்,  சென்னையில் படம் பார்க்க நம்பர் பிளேட் இல்லாமல் காரை ஓட்டி வந்துள்ளார். 

எம். பி என்டர்டெயின்மென்ட் - சரத் மற்றும் பிரவீன் தயாரிப்பில் இயக்குநர் ஜெய் அமர் சிங் இயக்கத்தில் லிங்கேஷ் நடிக்கும் படம் காலேஜ் ரோடு. காலேஜ் ரோடு படத்தின் சிறப்பு காட்சி  சென்னை - வடபழனி கமலா திரையரங்கில் இன்று காலை சிறப்பு காட்சி திரையிடப்பட்டது. இந்த சிறப்பு காட்சியை காண்பதற்காக நடிகர் லிங்கேஷ் மற்றும் யூடியூப் புகழ் டிடிஎப். வாசன் ஆகியோர் படத்தை  காண்பதற்காக திரையரங்கிற்கு வந்தனர். அவரை காண ரசிகர்கள் கூட்டம் வரக்கூடும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கமலா திரையரங்கு வளாகத்தில் 20 க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். 

இந்த நிலையில் டி.டி.எப் வாசன் வந்து இறங்கிய வெள்ளை நிற மகேந்திரா காரில் நம்பர் பிளேட் இல்லாததால் சர்ச்சையானது. இது குறித்து தகவலறிந்து வந்த கோடம்பாக்கம் போக்குவரத்து போலீசார், நம்பர் பிளேட் இல்லாமல் டி.டி.எப் வாசன் ஓட்டி வந்த காரை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட கார் குறித்து போலீசார் விசாரணை நடத்தும் போது, நம்பர் பிளேட் இல்லாமல் டி.டி.எப் வாசன் ஓட்டி வந்த கார், அவரது நண்பர் பிரவீனுக்கு சொந்தமான கார் எனவும் கர்நாடக மாநிலத்தில் கார் வாகன பதிவு செய்யப்பட்டதும் தெரியவந்தது. மேலும் for registration என காரில் ஒட்டப்பட்டிருந்ததாகவும், அது உடைந்துவிட்டதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனையடுத்து முறையான நம்பர் பிளேட் இல்லாமல் வந்ததாக வழக்குபதிவு செய்யப்பட்டு, 500 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி வருவதாக போக்குவரத்து போலீசார் தெரிவித்துள்ளனர். 

ஏற்கனவே போக்குவரத்து விதிமீறல்,அனுமதியின்றி கூடுதல் உள்ளிட்ட பல சர்ச்சைகளில் சிக்கி வரும் டி.டி.எப் வாசனுக்கு, இது மற்றொரு தலைவலியாக அமைந்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், சாலை விதிகளை பின்பற்றுவது தேவை தான். பின்பற்ற தொடங்கி விட்டேன். பிரச்சனைகள் வந்ததெல்லாம்  போன ஆண்டு. இது புது ஆண்டு என கூறியுள்ளார்.

-- சுஜிதா ஜோதி  

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com