இல்லந்தோறும் ஒலித்த குரல்...இன்று சென்னை பெசன்ட் நகரில்...!
மறைந்த பின்னணி பாடகி வாணி ஜெயராமின் உடல் சென்னை பெசன்ட் நகரில் உள்ள மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளது.
சென்னை நுங்கம்பாக்கம் ஹடோஸ் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் வசித்து வந்தார். வேலூரை பூர்விகமாக கொண்ட வாணி ஜெயராமின் கணவர் ஜெயராம், கடந்த 2018-ம் ஆண்டு உடல் நலக் குறைவால் காலமானதை அடுத்து, அடுக்குமாடி குடியிருப்பில் தனியாக வசித்து வந்தார்.
இந்நிலையில், மாடியில் இருந்து படிக்கட்டில் கீழே இறங்கியபோது தவறி விழுந்து வாணி ஜெயராம் உயிரிழந்தார். உடற்கூறு ஆய்வுக்கு பிறகு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்ட பாடகி வாணி ஜெயராமின் உடல் அவரது வீட்டில் பொதுமக்கள் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. அங்கு வாணி ஜெயராமின் உடலுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, திரைப் பிரபலங்கள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.
மறைந்த பாடகி வாணி ஜெயராமின் உடல் சென்னை பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று தகனம் செய்யப்பட உள்ளதாக உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.