அப்பாடா! இந்த படத்துக்காவது தடை இல்லையே!- நெகிழ்ச்சியில் சிம்பு ரசிகர்கள்!!!

அப்பாடா! இந்த படத்துக்காவது தடை இல்லையே!- நெகிழ்ச்சியில் சிம்பு ரசிகர்கள்!!!
Published on
Updated on
2 min read

நடிகர் சிம்பு நடித்து இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் வெந்து தணிந்தது காடு திரைப்படம் நாளை வெளியாக உள்ளது. இந்த படத்துக்கு தடை விதிக்க கோரி ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

அந்த மனுவில் கடந்த 2018 ஆம் ஆண்டு நடிகர் சிம்பு நடிக்க சூப்பர் ஸ்டார் என்ற பெயரில் படத்தை தயாரிக்க இயக்குனர் கவுதம் வாசுதேவ் மேனனுடன் ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. இதற்கு முன் பணமாக 2 கோடியே 40 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்களிடம் கூறிய அதே கதையை வெந்து தணிந்தது காடு என்ற பெயரில் படமாக எடுத்து, நாளை வெளியிட இருப்பதாகவும், தங்களுக்கு தரவேண்டிய இரண்டு கோடியே 40 லட்சம் ரூபாய் பணத்தை தராமல் படத்தை வெளியிட கூடாது என தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த வழக்கு நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஜெ.மணிகண்டன், 2018ம் ஆண்டு ஒப்பந்தத்தை மீறி எடுக்கப்பட்டுள்ள வெந்து தணிந்தது காடு படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்.

கவுதம் வாசுதேவ் மேனன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரேவதி, ஒப்பந்தம் செய்தது உண்மைதான் என்றும்  அடுத்த படத்தை இயக்கும் முன் மனுதாரருக்கு வழங்க வேண்டிய பணத்தை திருப்பி வழங்கி விடுவதாகவும், இது சம்பந்தமாக மனுதாரருடன் சமரசம் செய்து கொள்வதாகவும் தெரிவித்தார்.

சமரசம் செய்து கொள்ள மனுதாரர் தரப்பில் சம்மதம் தெரிவித்ததை அடுத்து, பணத்தை திருப்பி கொடுப்பது தொடர்பான  உத்தரவாதத்தை பதில் மனுவாக தாக்கல் செய்யும்படி கவுதம் வாசுதேவ் மேனன் தரப்புக்கு உத்தரவிட்ட நீதிபதி, மனு மீதான விசாரணையை செப்டம்பர் 21ஆம் தேதிக்கு தள்ளி வைத்துள்ளார்.

இதனால் நாளை இந்த படம் வெளியாவதில் எந்த சிக்கலும் இல்லை.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com