வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி நடிப்பில் உருவான விடுதலை திரைப்படம் நேற்று வெளியானது. சென்னை ஐநாக்ஸ் திரையரங்கில் படம் திரையிடப்படுவது பாதியிலேயே நிறுத்தப்பட்டதானது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திரைப்படத்திற்கு ஏ சான்றிதழ் அளிக்கப்பட்டுள்ளதால் சிறுவர்கள் உள்ளே படம் பார்க்க கூடாது என போலீசார் வெளியேற்ற முயன்றனர். இதற்கு அவர்களது பெற்றோர்கள் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அங்கு திரைப்படம் பார்க்க வந்த ரசிகர்களும் சிறுவர்களது பெற்றோருக்கு ஆதரவு தெரிவித்து போலீசாருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். "ஆபாச நடனங்களை திரையில் பார்க்க அனுமதிக்கும் காவல்துறை, அவர்கள் சித்ரவதை செய்யும் காட்சிகள் வரும்போது மட்டும் அனுமதி மறுப்பது ஏன்?" என ரசிகர்கள் கேள்வி எழுப்பியதால் மேலும் பதற்றம் ஏற்பட்டது. இதனால் சிறிது நேரம் படம் திரையிடப்படுவது பாதியிலேயே நிறுத்தப்பட்டு பின்னர் மீண்டும் திரையிடப்பட்டது.
ஏற்கனவே, ரோகினி திரையரங்கில் படம் பார்க்க வந்த நரிக்குறவர் சமூகத்தினரை உள்ளே அனுமதிக்காதது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து பல்வேறு தரப்பினரும் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் விடுதலை திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதானது மேலும் விவாதங்களை எழுப்பியுள்ளது.