“குரங்குடன் விக்ரம் வெளியிட்ட வீடியோ.." - மகள் வீட்டில் வனத்துறை விசாரணை! ‘லார் கிப்பன்’ பின்னணி என்ன?

விக்ரம் தனது மகளை சந்திப்பதற்காக சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள
Vikram Monkey Video
Published on
Updated on
2 min read

நடிகர் விக்ரம் அரிய வகை குரங்கு குட்டியுடன் கொஞ்சி விளையாடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து, சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள அவரது மகள் வீட்டில் வனத்துறை அதிகாரிகள் நேரில் சென்று விசாரணை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

நடிகர் விக்ரம் சமீபத்தில் தனது சமூக வலைதளப் பக்கத்தில் குரங்கு குட்டி ஒன்றுடன் இருக்கும் வீடியோவை பகிர்ந்திருந்தார். அந்த வீடியோவில், விக்ரமின் மடியில் அமர்ந்திருந்த குரங்கு அவரது தலைமுடியைப் பிடித்து விளையாடுவதும், அதனுடன் அவர் கொஞ்சி மகிழ்வதும் இடம்பெற்றிருந்தது. இந்த வீடியோ இணையத்தில் வேகமாகப் பரவிய நிலையில், அந்தக் குரங்கு எந்த வகையைச் சேர்ந்தது, அது எங்கிருந்து கொண்டுவரப்பட்டது என்ற கேள்விகளும் எழுந்தன.

இதையடுத்து, அந்த குரங்கு அரிய வகையைச் சேர்ந்த லார் கிப்பன் (Lar Gibbon) எனக் கூறப்பட்டதால், வனத்துறை அதிகாரிகளின் கவனம் இந்த விவகாரத்தின் மீது திரும்பியது. இந்த வகை குரங்குகள் தென்கிழக்கு ஆசியப் பகுதிகளை பூர்வீகமாகக் கொண்டவை என கூறப்படுகிறது. விக்ரம் தனது மகளை சந்திப்பதற்காக சென்னை ஈசிஆர் பகுதியில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றபோது, அங்கு இந்த குரங்கு இருந்ததாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, கிண்டி வனத்துறை அதிகாரிகள் அந்த வீட்டுக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில், அரிய வகை குரங்குகளை விற்பனை செய்யும் சிலர் அந்த வீட்டிற்கு குரங்கை கொண்டு வந்ததாக கூறப்படுகிறது. விக்ரமின் மகள் அந்தக் குரங்கை வாங்குவது தொடர்பாக பரிசீலித்ததாகவும், பின்னர் அதை வாங்க விருப்பமில்லாததால், குரங்கை கொண்டு வந்தவர்களிடமே மீண்டும் ஒப்படைத்ததாகவும் அதிகாரிகளிடம் தெரிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது.

மேலும், அந்தக் குரங்கு உரிய ஆவணங்களுடன் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டதா என்பதையும் வனத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து வருகின்றனர். குறிப்பாக, குரங்கை இந்தியாவுக்குக் கொண்டு வருவதற்கும், அதன் விற்பனை அல்லது பரிமாற்றத்திற்கும் தேவையான அனுமதிகள் பெறப்பட்டிருந்தனவா என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதற்காக மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் PARIVESH 2.0 இணையதளத்தில் சம்பந்தப்பட்ட அனுமதிகள் மற்றும் ஆவணங்கள் குறித்து அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. குரங்கை விற்பனைக்காக கொண்டு வந்த நபரிடம் உரிய ஆவணங்கள் உள்ளனவா என்பதும் விசாரணையின் முக்கிய அம்சமாக உள்ளது.

அரிய வகை வனவிலங்குகளை சட்டவிரோதமாக வாங்குவது, விற்பது அல்லது உரிய அனுமதியின்றி வைத்திருப்பது தொடர்பாக இந்தியாவில் பல்வேறு சட்ட விதிமுறைகள் உள்ள நிலையில், இந்த குரங்கு விவகாரத்திலும் அதிகாரிகள் அனைத்து கோணங்களிலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எனினும், நடிகர் விக்ரம் அல்லது அவரது குடும்பத்தினர் சட்டவிரோதமாக குரங்கை வாங்கியதாக இதுவரை அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்படவில்லை. குரங்கை வாங்கும் முயற்சி நடைபெற்றதா, அது சட்டப்பூர்வ ஆவணங்களுடன் கொண்டுவரப்பட்டதா என்பதுதான் தற்போது விசாரணையின் மையமாக உள்ளது. இதற்கிடையே, விக்ரம் வெளியிட்ட குரங்கு வீடியோ சமூக வலைதளங்களில் தொடர்ந்து பேசுபொருளாகி வருகிறது. அரிய வகை வனவிலங்குகளை வீடுகளில் வளர்ப்பது தொடர்பான சட்ட விதிமுறைகள் குறித்து பொதுமக்களிடையேயும் இந்த சம்பவம் கவனத்தை ஏற்படுத்தியுள்ளது.

வனத்துறையின் விசாரணை முடிவில், குரங்கை கொண்டு வந்தவர்களிடம் உரிய ஆவணங்கள் இருந்ததா, அதன் விற்பனைக்கு தேவையான அனுமதிகள் பெறப்பட்டிருந்தனவா என்பது தெரியவரும். அதன்பிறகே இந்த விவகாரத்தில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து அதிகாரிகள் முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com