இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போடுவது, Memeகள் பதிவிடுவது, தங்களுடைய புகைப்படங்களை பதிவிடும் தளமாக இருந்து வருகிறது. இந்த தலைமுறை இன்ஸ்டா தலைமுறையாகவே உலாவந்து கொண்டிருக்கிறது. கருத்து பரிமாற்றம் முதல் கருத்தில்லா களம் வரை இந்த இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உள்ளது. தற்போது இந்த இனிஸ்டாகிராமில் Subscription என்ற வார்த்தையை கட்டாயம் நீங்கள் கேட்காமல் இருந்திருக்கமாட்டீர்கள். இந்த வார்த்தையை கட்டாயம் நீங்கள் 'Biggboss 9 அரோரா' மூலம் இன்னும் பரீட்சயமாக கேள்விப்பட்டிருக்க வாய்ப்பிருக்கிறது. ஆனால் சமீபத்தில் இதில் வெள்ளித்திரை நடிகை ஒருவர் இணைந்திருப்பது பெரும் பேசுபொருளாகியுள்ளது. இந்த Subscription நோக்கி ஒரு பெரும் படை வருவதற்கான காரணம் என்ன?
பொதுவாகவே இந்த இன்ஸ்டாகிராம் Subscriptionல் சின்னத்திரை நடிகைகள், சில மாடலிங் செய்யும் பெண்கள் போன்றோர் இணைந்து அதன் மூலம் ஒரு பெரும் பணத்தை திரட்டி வந்தனர். ஆனால் தற்போது வெள்ளித்திரை நடிகை வந்திருப்பது ஆச்சரியத்தை கொடுத்துள்ளது, முதலில் இந்த Subscription என்றால் என்ன? என்பது பற்றி பார்க்கலாம். இன்ஸ்டாகிராம் சந்தா என்பது, தங்களது பயனர்களுக்காக சிறப்பு உள்ளடக்கத்தை உருவாக்குவது ஆகும். இது, மாதாந்திரக் கட்டணம் வசூலிப்பதன் மூலம் தங்கள் கணக்குகளிலிருந்து ஒரு குறிப்பிட்ட வருமானம் ஈட்ட அனுமதிக்கும் ஒரு முறையாகும். அதாவது, இந்த உள்ளடக்கத்திற்குள் வருவதற்கு ஒரு குறிப்பிட்ட பணம் பயனர்கள் கட்டவேண்டி இருக்கும். இந்த கட்டண அளவையும் கூட இன்ஸ்டாகிராம் கணக்கின் உரிமையாளரே நிர்ணயித்துக்கொள்ளலாம். பிரத்தேயேகமாக இந்த சந்தாதாரர்களுக்கு மட்டுமே என்று சில ரீல்ஸ்கள், கண்டெண்ட்கள், லைவ் போன்றவை வழங்கப்படும்.
தற்போது இந்த Subscription முறையில் நடிகை நந்திதாவும் இணைத்துள்ளார். இவர் இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கிய 'அட்டகத்தி' திரைப்படத்தின் மூலம் தமிழ் திரையுலகிற்கு அறிமுகமானார். சமீப காலமாக இவருக்கு பட வாய்ப்புகள் கொஞ்சம் குறைவாகவே கிடைப்பதால் இவர் இன்ஸ்டாகிராம் Subscription முறையை அறிமுகம் செய்துள்ளாரோ? என்ற கேள்வியை ரசிகர்களுக்கு மத்தியில் எழுப்பியுள்ளது. இவர் Subscription துவங்கிய சிறிது நேரத்திலேயே 111 பேர் இணைத்துள்ளனர். இதற்காக இவர் நிர்ணயித்துள்ள பணம் ரூ.390. தற்போது இந்த மதிப்பிற்கு கணக்கிட்டால் இவர் ரூ. 43,290 சம்பாதித்துள்ளார். இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் 1.4M பாலோவர்ஸ் உள்ளனர். இன்னும் பல பேர் இந்த சந்தாவில் இணைந்தால் ஒரு படத்தில் நடிப்பதற்கான பணத்தை விட அதிகமாகவே இவர் மாதம் மாதம் பெற்றுவிடலாம். தமிழ் திரையுலகம், அதாவது, சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரையில் 'நேர்கொண்ட பார்வை' படத்தின் மூலம் பிரபலமான அபிராமி வெங்கடாச்சலம், 'வின்னர்' திரைப்படத்தின் மூலம் பிரபலமான கிரண் ரத்தோட், தர்ஷா குப்தா உள்ளிட்ட பல நடிகைகள் இதில் உள்ளனர்.
ஆனால் இந்த போக்கு ஆரோக்கியமானதா? என்ற மிகப்பெரிய கேள்வியை முன்வைக்கிறது. இந்த Subscription உள்ளடக்கத்தில் ஆபாசமான காட்சிப்பதிவுகள்தான் அதிகமாக இருப்பதாக அதை பயன்படுத்துவோர் தரப்பில் கூறப்படுகிறது. இது மற்ற தொழில்களை காட்டிலும் சிரமம் இல்லாமல், வேண்டியபோது உள்ளடக்கத்தில் வீடியோ பதிவிட்டால் போதும் என்ற இலகு நிலை உள்ளதால் இதில் சாதாரண பெண்கள் வரவும் வாய்ப்புள்ளது. இது போன்ற போக்கு சமூகத்தில் 'பெண் சுதந்திரம்' குறித்த பார்வையை கேள்விக்குறியாகும். அதாவது, "பெண்களுக்கு சுதந்திரம் கொடுத்ததால்தான் இந்த நிலை வந்தது" என்ற ஒரு மேம்போக்கான கருத்தை விதைக்க வாய்ப்புள்ளது. இது பெண்களையே குத்தும் கருவியாக உருமாறுகிறது. இந்த சந்தா, மேற்கத்திய நாடுகளில் உள்ள 'Only Fans' என்ற பக்கத்தினை போன்றது. அதிலும் கூட உடற்பயிற்சி, சமையல் கலை வல்லுநர்களால் பதிவேற்றப்படும் பிரத்யேக தளம் என்பதை மறைத்து வயதுவந்தோருக்கான ஆபாச தளமாகவே அறியப்படுகிறது.
இதுபோன்ற போக்கு சமூகத்தில் உள்ள திருமணம் என்ற கட்டமைப்பை சீர்குலைவிற்கு உள்ளாக வாய்ப்பு இருக்கிறது. அதாவது பல பெண்கள் இப்பொழுது குழந்தை பெற்றுக்கொள்வது, திருமணம் போன்ற சமூக கட்டமைப்புகளை தங்கள் மீது திணிக்கப்படும் ஒரு சுமையாக பார்க்கிறார்கள். ஏனென்றால், பெண்கள் தற்போதைய சூழலில் வீட்டின் வாசலை தாண்டி வேலைக்கு சென்று பொருளாதார தன்னிறைவை அடைந்து வருகிறார்கள். அதனால் பல பெண்கள் இந்த பொறுப்புகளை நோக்கி தூரம் ஓடுகிறார்கள். இது பலராலும் ஆரோக்கியமாக பார்க்கப்பட்டாலும், கலாச்சாரம் சமூகம் என்று சிந்திக்கும் நபர்களால் இந்த போக்கு தவறாகவே பார்க்கப்படுகிறது. ஆனால், இந்த Subscription போக்கு அந்த பெண்களையும் கூட இந்த ஆணாதிக்க சமூகத்தின் நிபந்தனையற்ற கேள்விக்குள்ளாக்க வாய்ப்பு அதிகமாகவே இருக்கிறது. மேலும், இது ஜனநாயகத்திற்குட்பட்ட வரம்புகளையும் மீறி சமூகத்தில் வரம்பற்ற ஒரு போக்கிற்குள்ளாக்க வாய்ப்பிருக்கிறது. பணம் செலுத்தினால் இந்த உள்ளடக்கத்தை பார்க்கலாம் என்ற நிலை என்பது வக்கிர மனப்பான்மையை இளைய சமூகத்திற்கு விதைக்கவும் செய்யலாம்.
சாதாரணமாக வேலைக்கு போய் சம்பாதிப்பதை விட இதன்மூலம் அதிக வருவாய் ஈட்டலாம் என்ற மனப்பான்மை பெண்களுக்கு வந்தால் இன்னும் மிக மோசமான சமூக சீர்கேட்டை சந்திப்பதற்கும் வாய்ப்பிருக்கிறது. இது மெதுவாக குடும்பத்திற்குள்ளேயேயும் கூட வரலாம். குழந்தைகளை வளர்க்க வருவாய் போதாமை வரும்போது கட்டாயம் இது குடும்ப அமைப்பிற்குள் வரவும் வாய்ப்பிருக்கிறது. இது திருமணம் என்னும் கட்டமைப்பை வெகுவாக உடைத்து 'லிவ் இன்' கலாச்சாரத்தை அதிகரிக்கலாம். கேள்வி கேட்காமல் ஒரு துணையோடு வாழும் நிலையை இந்த Subscription முறை ஊக்குவிக்கும் என்பதால் திருமணம் என்னும் போக்கு காலப்போக்கில் பெண்கள் மத்தியில் இல்லாமல் போகலாம். சமூகத்தில் கட்டமைப்புகளை தகர்ப்பது தவறில்லை. ஆனால் எதனைக்கொண்டு தகர்கிறோம் என்பதில்தான் அந்த விஷயமே இருக்கிறது. பெண்ணுக்கான உரிமைகளை முன்வைத்து கலாச்சாரத்தையும், சமூக கட்டமைப்புகளையும் உடைத்தால் அது வரவேற்கத்தக்க விஷயமாக பார்க்கப்படும். ஆனால் அதே சமயம் இது போன்ற விரும்பத்தகாத போக்கில் சமூக கட்டமைப்பை தகர்ப்பது என்பது இன்னும் வீட்டை விட்டு வாசலை தாண்டாத பெண்களுக்கு முட்டுக்கட்டையாக கூட அமைந்து விடலாம். ஜனநாயகம் கூட வரைமுறைக்குட்பட்டதுதான் என்பதை உணரும் நிலை இன்னும் வெகுதொலைவில் இல்லை.
இது போன்ற Subscription போக்கு சமூக சீர்கேட்டை உருவாக்குவதுடன் தவறான முன்னுதாரணத்தை வரும் தலைமுறைக்கு பாதையாக இட்டுச்செல்கிறது, ஆபாச போக்கிற்கும் வழிவகுக்கிறது என்பது தவிர்க்கமுடியாத உண்மை.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்