

கடந்த 2021-ல் பாடகரும் பாடலாசிரியருமான அறிவு மற்றும் பாடகி தீ-யும் இணைந்து 'என்ஜாய் எஞ்சாமி' என்ற பட்டி தொட்டி எங்கும் ஹிட் அடித்த பாடலைப் பாடினர். இந்தப் பாடலுக்கு இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்தார். நீண்டகாலத்துக்குப் பிறகு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்ற தனியிசைப் பாடலாக 'என்ஜாய் என்சாமி' கொரோனா காலத்தில் இப்பாடல் அமைந்தது. இந்த ஹிட் பாடல் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வந்தாலும் இப்பாடலை உருவாக்கிய அறிவு மற்றும் சந்தோஷ் நாராயணன் மத்தியில் மிகப்பெரிய மோதலை ஏற்படுத்தியது. அறிவுக்கும் சந்தோஷ் நாராயணனுக்கும் இடையே பாடலுக்கான காப்பீட்டு உரிமைப் பிரச்சனை ஏற்பட்டது. இந்த அப்பாடல் தொடர்பாக 5 ஆண்டுகளாக தொடர்ந்து பிரச்சனை நீடித்து வந்த நிலையில் மீண்டும் தற்போது அறிவு இந்த பாடலுக்கான அங்கீகாரம் தனக்கு கிடைக்கவில்லை என்று ஆதங்கத்தை சமூகவலைதள பக்கத்தில் வெளிபடுத்தியிருந்தார். அதுமட்டுமின்றி, தன்னிச்சையாக பணிபுரிபவர்கள் (Independent artists) எப்போதும் ஒப்பந்தம் மேற்கொள்ள வேண்டும் என்றும், தங்களின் உரிமைகளைத் தெரிந்துகொள்ள வேண்டும் என்றும் அறிவு அறிவுறுத்தியுள்ளார்.
இசை என்பது ஒரு கூட்டு முயற்சிதான். ஆனால், அதற்கான அங்கீகாரமும் ஊதியமும் நியாயமான முறையில் பகிரப்பட வேண்டும். இந்தப் பாடல் எனது கிராமத்தில், எனது மண்ணின் மற்றும் மக்களின் கதைகளைக் கொண்டு படமாக்கப்பட்டது. அந்த வரலாறு மக்களைச் சென்றடையும் என்ற நம்பிக்கையில்தான் நான் அதைப் பகிர்ந்து கொண்டேன். ஆனால், அந்தப் பாடலை முழுமையாக எழுதியும், அதன் முதன்மை மெட்டை அமைத்திருந்தும்கூட, நான் ஒரு 'Collaborating Artist' ஆக மட்டுமே அடையாளப்படுத்தப்பட்டேன் என்று தனது ஆதங்கத்தை தெரிவித்திருந்தார். இவரின் இந்த பதிவிற்கு சந்தோஷ் நாராயணன் பதில் அளித்துள்ளது தற்போது, சோஷியல் மீடியாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து சந்தோஷ் நாராயணன் கூறிய பதில், "இதெல்லாம் உங்களுடைய கருத்துக்களாக இருக்கலாம். ஆனால் தொழில்நுட்பம் ரீதியாகவும் சட்ட ரீதியாகவும் நீங்கள் முன் வைக்கும் வாதங்கள் அனைத்தும் கற்பனையாகவேதான் உள்ளது. இதில் எந்த ஒரு உண்மையும் இல்லை. இதுகுறித்து எந்த ஒரு தளத்தின் மூலமாகவும் நான் விவாதிக்க தயார். நீங்கள் விவாதிக்க தயாரா?. என்னை சமூக தளங்களில் எல்லாம் பிளாக் செய்துவிட்டீர்கள். நீங்கள் இங்கேயேகூட பேசலாம். நான் பதிலளிக்க எப்போதும் தயாராக இருக்கிறேன்" என சந்தோஷ் நாராயணன் காட்டமாக பதிவிட்டிருந்தார்.
சமூகவலைத்தளங்களில் இவர்களின் இந்த பிரச்சனை ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்