த்விஷா ஷர்மா மரணம்.. இது கொலையல்ல, கற்பனை! கணவரின் வாதத்தால் பரபரப்பு!

த்விஷாவின் குடும்பத்தினர், அவரது தாயார் மீதான முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில்...
த்விஷா ஷர்மா
த்விஷா ஷர்மா
Published on
Updated on
2 min read

நடிகையும் மாடலுமான த்விஷா ஷர்மாவின் மரணம் தொடர்பான வழக்கு தற்போது மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்திற்குச் செல்லவிருக்கிறது. தனது முன்ஜாமீன் மனுவை கீழமை நீதிமன்றம் தள்ளுபடி செய்ததை எதிர்த்து, த்விஷாவின் கணவர் சமர்த் சிங் உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அதேசமயம், சமர்த்தின் தாயார் கிரிபாலா சிங்கிற்கு வழங்கப்பட்ட முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி, த்விஷாவின் குடும்பத்தினர் சட்டப் போராட்டத்திற்குத் தயாராகி வருகின்றனர். தலைமறைவாக இருப்பதாகக் கருதப்படும் சமர்த், காவல்துறை தனக்கு சன்மானம் அறிவித்ததையும், கீழமை நீதிமன்றத்தின் உத்தரவையும் எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வாதிட்டுள்ளார்.

தனது மனுவில் சமர்த் சிங், த்விஷாவின் குடும்பத்தினர் சுமத்தியுள்ள வரதட்சணை கொடுமை புகார்கள் முற்றிலும் ஆதாரமற்றவை என்று வாதிட்டுள்ளார். த்விஷாவின் வங்கி கணக்கிற்குத் தானும் தனது தாயாரும் 7 லட்சம் ரூபாய்க்கும் மேலாகப் பணத்தை அனுப்பியுள்ளோம் என்றும், 2 லட்சம் ரூபாய் வரதட்சணை கேட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என்றும் அவர் தெரிவித்துள்ளார். மேலும், புகார்தாரர் சமர்ப்பித்த வாட்ஸ்அப் சாட்டிங் தகவல்கள் எடிட் செய்யப்பட்டவை மற்றும் முழுமையற்றவை என்றும், அவற்றில் தகிடுதத்தங்கள் செய்யப்பட்டுள்ளதால் அவற்றை நம்ப முடியாது என்றும் அவர் தனது மனுவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வழக்கில் தன் மீது சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் கற்பனையானவை என்றும், ஆதாரங்கள் எதையும் காவல்துறை கண்டறியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார்.

த்விஷா போதைப் பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததாகவும், அதிலிருந்து விடுபடும்போது ஏற்படும் அறிகுறிகளால் அவர் அவதிப்பட்டதாகவும் குறிப்பிட்ட சமர்த், இதற்கான மனநல மருத்துவச் சிகிச்சைப் பதிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாகத் தெரிவித்துள்ளார். சமர்த்தின் தாயார் ஒரு ஓய்வுபெற்ற நீதிபதி என்பதால், அவர் மீதான குற்றச்சாட்டுகள் பெயரளவில் மட்டுமே இருப்பதாகக் கூறி அவருக்குச் செஷன்ஸ் நீதிமன்றம் முன்ஜாமீன் வழங்கியது. ஆனால், திருமணமாகி ஆறு மாதங்களுக்குள்ளேயே த்விஷா உயிரிழந்துள்ளார் என்பதைக் கருத்தில் கொண்டும், குடும்பத்தினர் மற்றும் வாட்ஸ்அப் சாட்டிங் ஆதாரங்களின் அடிப்படையிலும் சமர்த்தின் முன்ஜாமீன் மனுவை நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று த்விஷாவின் குடும்பத்தினர் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். முதலமைச்சர் மோகன் யாதவ், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க மாநில அரசு கடிதம் எழுதும் என்று கூறியுள்ள நிலையில், போபால் காவல் ஆணையர் சஞ்சய் குமார், தற்போதைய விசாரணையின்படி இது தற்கொலைதான் என்றும், கொலை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை என்றும் தெரிவித்துள்ளார். த்விஷாவின் குடும்பத்தினர், அவரது தாயார் மீதான முன்ஜாமீனை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்யத் திட்டமிட்டுள்ளனர். விவாதங்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் நிறைந்த இந்த வழக்கு மத்தியப் பிரதேசத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com