
கர்நாடக மாநிலத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதன் காரணமாக கபினி மற்றும் கிருஷ்ணராஜசாகர் அணைகள் வேகமாக நிரம்பி வருகிறது.
இந்நிலையில் தொடர் மழையினால் உத்தரகன்னடா மாவட்டம் அங்கோலா தாலுகாவில் உள்ள சிரூர் தேசிய நெடுஞ்சாலையில் மிகப்பெரிய அளவில் நிலச்சரிவு ஏற்பட்டது.
சிரூர் கிராமத்தில் ஒரு புறம் மலைத்தொடரும், மறுபுறம் கங்காநதியும் பாய்கிறது. இந்த பகுதியில் லட்சுமண் நாயக் என்பவர் டீக் கடை நடத்தி வருவதோடு அங்கு சிறிய வீடு அமைத்து குடும்பத்தோடு தங்கி வந்தார்.
ஜூலை 16-ம் தேதியன்று பிற்பகலில் மலைத்தொடரில் இருந்து திடீரென நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் லட்சுமண் நாயக், அவரது மனைவி சாந்தி, 11 வயது மகன் மற்றும் உறவினர் உள்பட 20-க்கும் மேற்பட்டோர் மண்சரிவில் சிக்கி புதைந்தனர். இவர்களில் 9 பேரின் சடலங்கள் மீட்கப்பட்ட நிலையில், 6 வயது சிறுமி அவந்திகா என்பவரது உடலை மிட்புப் படையினர் தீவிரமாக தேடி வருகின்றனர்.
அதே நேரம் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த 3 டேங்கர் லாரிகளும் கங்கவாலி ஆற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன. இதில் தமிழ்நாட்டின் நாமக்கல் பகுதியைச் சேர்ந்தவர் ஓட்டிச் சென்ற லாரியும் ஆற்று வெள்ளத்தில் மூழ்கியது. மேலும் இந்த மண் சரிவில் சிக்கி இறந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகலாம் என்றும் கூறப்படுகிறது.
உடனடியாக மீட்புப்படையினர் விரைந்து சென்று காயமடைந்தவர்கள் மீட்டு மருத்துவமனையில அனுமதித்தனர். மண் சரிவு ஏற்பட்டுள்ள தேசிய நெடுஞ்சாலையின் ஒரு புறத்தில் கங்காவதி ஆறு இருக்கும் நிலையில் மண் சரிவின் போது சிலர் ஆற்றில் அடித்து செல்லப்பட்டு இருக்கலாம் என்ற தகவலும் கிடைத்துள்ளது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நாராயணன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்.