இலங்கை பயணம்..... மீனவர் பிரச்சினைக் குறித்து விவாதிப்பாரா எல். முருகன்?!!

இலங்கை பயணம்..... மீனவர் பிரச்சினைக் குறித்து விவாதிப்பாரா எல். முருகன்?!!

பிரதமர் மோடி அடிக்கல் நாட்டிய யாழ்பாணம் கலாச்சார மையம் திறப்பு விழாவிற்கு மத்திய அமைச்சர் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை பயணம்.

இலங்கை பயணம்:

இலங்கை யாழ்ப்பாணத்தில் கடந்த 2015ம் ஆண்டு பிரதமர் நரேந்திர மோடியால் அடிக்கல் நாட்டப்பட்ட  யாழ்ப்பாணம் கலாச்சார மையக் கட்டிட திறப்பு விழா இலங்கை அதிபர் ரணில் விக்ரமசிங்கே தலைமையில் வரும் 11ந் தேதி நடைபெற உள்ளது.  இதில் கலந்து கொள்ள மத்திய அமைச்சர் எல். முருகன், தமிழ்நாடு பா.ஜ.க. தலைவர்  அண்ணாமலை ஆகியோர் சென்னை பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து யாழ்பாணம் செல்லும் விமானத்தில் புறப்பட்டு சென்றனர்.  

இலங்கை பயணம் குறித்து விமான நிலையத்தில் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

அரசுமுறை பயணம்:

3 நாள் அரசு முறை பயணமாக இலங்கை செல்கிறேன்.   2015ம் ஆண்டு பிரதமர் மோடி யாழ்பாணம் சென்று இந்திய அரசின் நிதியுதவியுடன் கலாச்சாரம் மையம் கட்ட அடிக்கல் நாட்டினார்.  வருகிற 11ந் தேதி யாழ்ப்பாணத்தில் கலாச்சார மைய திறப்பு விழாவில் பங்கேற்கிறேன்.  இலங்கையில் 75வது சுதந்திர தின விழா கொண்டாடப்பட்டு வருகிறது.  யாழ்ப்பாணம், தலை மன்னார், கொழும்பு நகரங்களுக்கும் அரசு முறைப் பயணமாக செல்ல உள்ளேன். 

மீனவர் பிரச்சினை:

இலங்கையில் தமிழ்த் தலைவர்களை சந்திக்க  வாய்ப்பு இருக்கிறது.  இலங்கை சிறையில் தமிழ்நாடு மீனவர்கள் ஒருவர் கூட இல்லை.  இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பு குழு கூட்டம் நடக்க வேண்டும்.  கொரோனா காரணமாக இதுவரை நடக்கவில்லை.  இலங்கையில் சூழ்நிலை சரி இல்லாமல் இருந்ததால் தள்ளி போனது.  

கூடிய விரைவில் இணைப்பு  கூட்டத்தை மீண்டும் நடத்துவது தொடர்பாக பேச உள்ளேன். அதில் மீனவர்களின் பிரச்சினை குறித்து பேசப்படும்.  இந்தியா - இலங்கை  கூட்டுக் கூட்டம் நடைபெறும்போது மீனவர்களின் படகுகள் உள்பட பல பிரச்சனைகளுக்கு தீர்வு கிடைக்கும் என அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com