ஒவ்வொரு செங்கலும்... அது எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமானது அல்ல...!!!

ஒவ்வொரு செங்கலும்... அது எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமானது அல்ல...!!!

அதிமுகவின் சட்ட விதிகளை புரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள் என்று பண்ருட்டி ராமச்சந்திரன் விமர்சித்துள்ளார். 

மாநாட்டு திடல்:

திருச்சியில் ஓபிஎஸ் அணி சார்பில்  நாளை  முப்பெரும் விழா  நடைபெற உள்ளது.  அந்த மாநாட்டுத் திடலை ஓபிஎஸ் அணியை சேர்ந்த பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், கு.ப.கிருஷ்ணன் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.  பின்னர் அவர்கள் மூவரும் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்து பேசினர்.  அப்போது  மாநாட்டிற்கு காவல் துறை நல்ல பாதுகாப்பு கொடுத்துள்ளதாக தெரிவித்தனர்.

பேச்சுக்கே இடமில்லை:

தொடர்ந்து பேசிய பண்ருட்டி ராமச்சந்திரன்,67 ஆண்டுகளுக்கு பிறகு அறிஞர் அண்ணா வழியில் இந்த மாநாடு  நடக்க உள்ளது என்றும்  இது வரலாற்றை படைக்கும் மாநாடாக இருக்கும் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.  மேலும் அதிமுக வில் ஒருங்கிணைந்த என்கிற பேச்சுக்கே இடமில்லை எனவும் எம்.ஜி.ஆரிடம் உங்கள் அரசியல் வாரிசு யார் என கேட்ட போது அதிமுக வின் தொண்டர்கள் தான் என் அரசியல் வாரிசு என்றார் எனத் தெரிவித்த பன்ருட்டி ராமச்சந்திரன் அந்த வழியில் தொண்டர்களை அழைத்து உங்கள் இயக்கத்தை நீங்களே நடத்துங்கள் என கூறுவதற்காகவே இந்த மாநாடு எனக் கூறினார்.

தேர்தல் கமிஷன் சின்னம்:

அதனை தொடர்ந்து பேசிய அவர் ஒரு சிலர் பொதுக்குழுவை அவர்களே நியமித்து தலைமை கழக நிர்வாகிகளை நியமித்தார்கள், எனவும் அது இட்டுக்கட்டிய சிறு கும்பல் எனவும் அவர்களுக்க்கும் இந்த இயக்கத்துக்கும், தொண்டர்களுக்கும் சம்மதமில்லை எனவும் தெரிவித்தார்.  மேலும் அதிமுக தனித்தன்மை வாய்ந்தது எனவும் தேர்தல் கமிஷன் சின்னம் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை எனவும் கூறிய ராமச்சந்திரன் ஏனென்றால் இங்கு நிர்வாகம் முடங்கவே இல்லை எனக் கூறினார்.

அண்ணியின் சீதனம்:

ஒருங்கிணைப்பாளருக்கு முரணாக செயல்பட்டால் அந்த பொதுக்குழுவை கலைக்க ஒருங்கிணைப்பாளருக்கு அதிகாரம் உள்ளது எனவும் அதிமுக வின் சட்ட விதிகளை புரிந்து கொள்ளாமல் நீதிபதிகள் தீர்ப்பு வழங்குகிறார்கள் எனவும் அவர்களுக்கு புரிய வைக்கும் அளவுக்கு எங்களுக்கு சக்தி இல்லையோ என தோன்றுகிறது எனத் தெரிவித்தார்.  அதிமுகவின் தலைமை அலுவலகம் ஜானகி அம்மையார் எம்ஜிஆருக்கு கொடுத்தது எனவும் அது எடப்பாடி பழனிச்சாமிக்கு சொந்தமானது அல்ல எனத் தெரிவித்த அவர் அந்த கட்டிடத்தில் உள்ள ஒவ்வொரு செங்கலும் அதிமுகவின் ஒவ்வொரு தொண்டர்களுக்கும் உரியது எனவும் எங்கள் தலைவரும் அண்ணியாரும் எங்களுக்கு கொடுத்த சீதனம் இது எனவும் கூறினார்.

நாளை தெரியும்:

திருச்சியில் நாளை  நடைபெறும் மாநாட்டிற்கு சசிகலா மற்றும் டிடிவி தினகரன் பங்கேற்பு குறித்து தற்பொழுது உறுதியாக எதுவும் கூற முடியாது எனக் கூறிய அவர் ஒரு கட்சியிலிருந்து மற்றொருவர் வேறொரு கட்சிக்கு சென்றால் அதனால் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படாது எனவும் கட்சி இயங்குவதற்கு தொண்டர்கள் முக்கியம் அதை வெற்றி பெற செய்ய மக்கள் ஆதரவு முக்கியம் எனவும் அதிமுகவில் தொண்டர்களின் ஆதரவு எடப்பாடி பழனிச்சாமிக்கு இருக்கிறதா ஓபிஎஸ்கு இருக்கிறதா என்பதை நாளை மாநாட்டின் மூலம் தெரிந்து கொள்வீர்கள் எனவும் தெரிவித்தார்.

logo
Malaimurasu Seithigal
www.malaimurasu.com