டாடா சியராவை மிஞ்சிய 5 கார்கள்! பாதுகாப்பில் இவ்வளவு வித்தியாசமா? கார் வாங்கும் முன் இதைப் படிங்க!

மஹிந்திராவின் மற்றொரு மாடலான பிஇ6 (BE6) காரும் பாதுகாப்பில் சியராவை முந்தியுள்ளது
Mahindra XEV 9e
Published on
Updated on
1 min read

இந்திய கார் சந்தையில் தற்போது மிட்-சைஸ் எஸ்யூவி (SUV) ரகத்தில் டாடா சியரா மிக முக்கியமான இடத்தைப் பிடித்துள்ளது. பழம்பெரும் பெயர் மற்றும் நவீன வசதிகள் காரணமாக வெளியானது முதல் இந்திய வாடிக்கையாளர்களிடையே இந்த கார் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது. குறிப்பாக, இரண்டு சியரா கார்களை நேருக்கு நேர் மோதவிட்டு இதன் வலிமையை டாடா நிறுவனம் விளம்பரப்படுத்தியது. பாரத் என்சிஏபி (BNCAP) பாதுகாப்பு சோதனையில் 5 நட்சத்திர அந்தஸ்தைப் பெற்ற சியரா, பாதுகாப்பில் ஒரு புதிய மைல்கல்லாகப் பார்க்கப்படுகிறது. ஆனால், புள்ளிவிவரங்களின்படி பார்த்தால் சியராவை விடவும் பாதுகாப்பான சில கார்கள் இந்தியச் சந்தையில் உள்ளன.

பாதுகாப்பு தரவரிசையின்படி, டாடா சியரா கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32-க்கு 31.14 புள்ளிகளையும், குழந்தைகளுக்கான பாதுகாப்பில் 49-க்கு 44.73 புள்ளிகளையும் பெற்றுள்ளது. மொத்தமாக 81 புள்ளிகளுக்கு 75.87 புள்ளிகளை இந்த கார் பெற்றுள்ளது. இது மிகச்சிறந்த ஸ்கோர் என்றாலும், மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) கார் இதை முறியடித்து இந்தியாவின் பாதுகாப்பான காராக உருவெடுத்துள்ளது. இந்த கார் பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 32-க்கு 32 என முழு மதிப்பெண்களையும், குழந்தைகளுக்கு 45 புள்ளிகளையும் பெற்று, மொத்தம் 77 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.

அதேபோல், டாடா நிறுவனத்தின் ஹாரியர் இவி (Harrier EV) காரும் சியராவை விட கூடுதல் புள்ளிகளைப் பெற்றுள்ளது. எக்ஸ்இவி 9இ காருக்கு இணையாக இதுவும் 81-க்கு 77 புள்ளிகளைப் பெற்று 5 நட்சத்திர மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. மஹிந்திராவின் மற்றொரு மாடலான பிஇ6 (BE6) காரும் பாதுகாப்பில் சியராவை முந்தியுள்ளது. இது பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 31.97 புள்ளிகள் உட்பட மொத்தம் 76.97 புள்ளிகளைப் பெற்று பாதுகாப்பான கார்களின் பட்டியலில் முன்னிலையில் இருக்கிறது.

பெட்ரோல், டீசல் இன்ஜின் கொண்ட கார்களில் கியா செல்டோஸ் (Kia Seltos) தற்போது பிஎன்சிஏபி தரவரிசையில் மிகச்சிறந்த பாதுகாப்பை வழங்குகிறது. பெரியவர்களுக்கான பாதுகாப்பில் 31.70 புள்ளிகளுடன் மொத்தம் 76.70 புள்ளிகளை இது பெற்றுள்ளது. அதேபோல், ஆஃப்-ரோட் பிரியர்களின் விருப்பமான மஹிந்திரா தார் ராக்ஸ் (Thar Roxx) காரும் 5 நட்சத்திர மதிப்பீட்டுடன் மொத்தம் 76.09 புள்ளிகளைப் பெற்றுள்ளது. இந்த அனைத்து கார்களுமே மொத்த புள்ளிகளின் அடிப்படையில் டாடா சியராவை விடச் சற்று அதிக பாதுகாப்பை உறுதி செய்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com