நாம் தினமும் சாப்பிடும் உணவு உடலின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, செல்களின் செயல்பாட்டையும் பாதிக்கக்கூடும். குறிப்பாக அதிக கொழுப்புள்ள உணவுகளை நீண்ட காலமாகச் சாப்பிடுவது குடலில் சில மாற்றங்களை ஏற்படுத்தக்கூடும் என்று புதிய ஆய்வு ஒன்று எச்சரிக்கிறது. அதிலும், பல ஆண்டுகளாக ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்தைப் பின்பற்றிவிட்டு பின்னர் உணவைக் கட்டுப்படுத்தினாலும், அதன் தாக்கம் குடல் செல்களில் தொடர்ந்து இருக்க வாய்ப்புள்ளதாக ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். இந்த மாற்றங்கள் எதிர்காலத்தில் பெருங்குடல் புற்றுநோய் உருவாகும் அபாயத்துடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்றும் ஆய்வு சுட்டிக்காட்டுகிறது.
ஆய்வு எலிகளை வைத்து நடத்தப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் மருத்துவ ஆய்விதழான 'ஸ்டெம் செல் ரிப்போர்ட்ஸ்' (Stem Cell Reports) இதழில் வெளியிடப்பட்டுள்ளன. ஆய்வில், அதிக கொழுப்புள்ள மேற்கத்திய உணவு முறையை ஆறு மாதங்கள் தொடர்ந்து சாப்பிட்ட எலிகளின் குடலில் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன. பொதுவாக நமது குடலில் உள்ள செல்கள் தொடர்ந்து புதுப்பிக்கப்பட்டுக்கொண்டே இருக்கும். பழைய செல்கள் சேதமடையும்போது அவற்றுக்குப் பதிலாக புதிய செல்களை உருவாக்குவதில் குடல் ஸ்டெம் செல்கள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. இவற்றை குடலின் பழுதுபார்க்கும் குழு என்று சொல்லலாம். குடலின் உள்பகுதியில் உள்ள படலத்தைப் பாதுகாப்பதும், சேதமடைந்த செல்களை மாற்றுவதும் இவற்றின் முக்கியப் பணியாகும்.
ஆய்வில் அதிக கொழுப்புள்ள உணவைத் தொடர்ந்து சாப்பிட்ட எலிகளின் குடலில் இந்த ஸ்டெம் செல்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. மேலும், அவை வழக்கத்தைவிட வேகமாகப் பிரிந்து புதிய செல்களை உருவாக்கியுள்ளன. செல்கள் தொடர்ந்து அதிக வேகத்தில் பெருகும்போது, அவற்றில் தவறான மாற்றங்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கலாம். இத்தகைய மாற்றங்கள் பின்னர் கட்டிகள் உருவாக வழிவகுக்கக்கூடும் என்று மருத்துவ நிபுணர்கள் விளக்குகின்றனர்.
இந்த ஆய்வில் கவனிக்க வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம், உணவுப் பழக்கத்தை மாற்றிய பிறகும் குடல் செல்களில் சில மாற்றங்கள் நீடித்ததுதான். ஆறு மாதங்கள் அதிக கொழுப்புள்ள உணவைச் சாப்பிட்ட எலிகளுக்கு பின்னர் குறைந்த கொழுப்புள்ள உணவு வழங்கப்பட்டது. இதனால் அவற்றின் குடல் ஸ்டெம் செல்களின் செயல்பாடு மீண்டும் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஆனால், செல்களுக்குள் இருந்த சில மாற்றங்கள் முழுமையாக மறையவில்லை.
DNA அமைப்பு எவ்வாறு ஒழுங்குபடுத்தப்படுகிறது என்பதில் ஏற்பட்ட மாற்றங்களில் சுமார் 18 சதவீதம், குறைந்த கொழுப்புள்ள உணவை நான்கு வாரங்கள் சாப்பிட்ட பிறகும் நீடித்ததாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர். இதைத்தான் 'எபிஜெனெடிக் மாற்றங்கள்' (Epigenetic Changes) என்று அழைக்கிறார்கள். எளிமையாகச் சொன்னால், நமது டிஎன்ஏவில் உள்ள அடிப்படை மரபணு வரிசை மாறாமல் இருந்தாலும், அதில் இருக்கும் சில கட்டளைகள் எப்போது செயல்பட வேண்டும், எப்போது செயல்படக்கூடாது என்பதை இந்த மாற்றங்கள் பாதிக்கின்றன. இதனால் செல்களின் செயல்பாட்டில் மாற்றம் ஏற்படலாம்.
முன்பு அதிக கொழுப்புள்ள உணவைச் சாப்பிட்ட எலிகளுக்கு மீண்டும் அதே உணவு வழங்கப்பட்டபோது, அவற்றின் குடல் ஸ்டெம் செல்கள் வேகமாகவும் வலுவாகவும் எதிர்வினையாற்றின. முதல் முறையாக அந்த உணவைச் சாப்பிட்ட எலிகளுடன் ஒப்பிடும்போது, ஏற்கெனவே அதே உணவுப் பழக்கத்தைக் கொண்டிருந்த எலிகளில் ஆரம்பநிலை குடல் கட்டிகள் பெரியதாக வளர்ந்ததாக ஆய்வில் தெரியவந்துள்ளது. இது, பழைய உணவுப் பழக்கத்தின் தாக்கத்தை குடல் செல்கள் ஒருவித நினைவாக வைத்திருக்கக்கூடும் என்பதற்கான சாத்தியத்தை எடுத்துக்காட்டுகிறது. மீண்டும் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கத்துக்குத் திரும்பும்போது குடல் அதிக பாதிப்புக்கு உள்ளாகலாம் என்பதையும் இந்த முடிவுகள் உணர்த்துகின்றன.
இந்த ஆய்வின் முடிவுகளை மனிதர்களுக்கும் அப்படியே பொருத்திப் பார்க்க முடியாது. ஏனெனில், இந்த ஆராய்ச்சி எலிகளிடம் மட்டுமே நடத்தப்பட்டுள்ளது. மனிதர்களிடமும் இதே மாற்றங்கள் ஏற்படுகின்றனவா, அவை ஒருவருக்கு புற்றுநோய் ஏற்படும் அபாயத்தை எந்த அளவுக்குப் பாதிக்கின்றன என்பதைக் கண்டறிய கூடுதல் ஆய்வுகள் தேவைப்படுகின்றன. எனவே, முன்பு அதிக கொழுப்புள்ள உணவுகளைச் சாப்பிட்டவர்கள் அனைவருக்கும் புற்றுநோய் ஏற்படும் என்று இதற்குப் பொருள் கொள்ளக்கூடாது. குடல் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க உணவுப் பழக்கத்தில் சில மாற்றங்களைச் செய்வது அவசியம். அதிக அளவில் பதப்படுத்தப்பட்ட இறைச்சி, சிவப்பு இறைச்சி, எண்ணெயில் பொரித்த உணவுகள் மற்றும் அதிகமாகச் செயலாக்கப்பட்ட பாக்கெட் உணவுகளைத் தவிர்ப்பது நல்லது. அதற்குப் பதிலாக காய்கறிகள், பழங்கள், முழு தானியங்கள், பருப்பு வகைகள் மற்றும் நார்ச்சத்து நிறைந்த உணவுகளை அன்றாட உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும்.
இதனுடன் போதுமான அளவு தண்ணீர் குடிப்பது, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வது, உடல் எடையைச் சீராக வைத்திருப்பது போன்ற பழக்கங்களும் முக்கியமானவை. பெருங்குடல் புற்றுநோய் ஏற்படும் அதிக அபாயம் உள்ளவர்கள் மருத்துவர்களின் ஆலோசனைப்படி உரிய பரிசோதனைகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்வு உணர்த்தும் முக்கியமான செய்தி என்னவென்றால், பல ஆண்டுகளாக ஆரோக்கியமற்ற உணவுகளைச் சாப்பிட்டிருந்தாலும் உணவுப் பழக்கத்தை மாற்றுவதற்கு ஒருபோதும் தாமதமாகிவிடவில்லை. பழைய உணவுப் பழக்கங்கள் நிரந்தரமாக உடலைப் பாதித்துவிட்டன என்று நினைத்து அச்சப்பட வேண்டியதில்லை. இன்றிலிருந்து ஆரோக்கியமான உணவைத் தேர்ந்தெடுத்து, சுறுசுறுப்பான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது நீண்ட கால ஆரோக்கியத்திற்கு உதவும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.