அடுத்த சில மாதங்களில் வெளிநாடு அல்லது உள்நாட்டிற்கு விமானத்தில் பயணம் செய்யத் திட்டமிடுபவர்கள், கூடுதல் பணச் செலவு மற்றும் விமான ரத்து நடவடிக்கைகளுக்குத் தயாராக இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் ஈரான் நாடுகளுக்கு இடையே நிலவும் போர் பதற்றங்கள் காரணமாக, சர்வதேச சந்தையில் விமான எரிபொருள் விலை கட்டுக்கடங்காமல் உயர்ந்துள்ளது. குறிப்பாக, ஈரான் தனது கட்டுப்பாட்டில் உள்ள ஹார்முஸ் ஜலசந்தி வழியாக மிகக் குறைந்த கப்பல்களை மட்டுமே அனுமதிப்பதால், உலகளாவிய எண்ணெய் விநியோகம் பாதிக்கப்பட்டு இந்த இக்கட்டான சூழல் உருவாகியுள்ளது.
எரிபொருள் விலை தாறுமாறாக உயர்ந்து வருவதால், உலகெங்கிலும் உள்ள விமான நிறுவனங்கள் தங்களது விமான சேவைகளை ரத்து செய்தும், டிக்கெட் விலையை உயர்த்தியும் வருகின்றன. மேலும், எரிபொருள் கூடுதல் கட்டணம் மற்றும் லக்கேஜ் கொண்டு செல்வதற்கான கட்டணங்களையும் பல நிறுவனங்கள் அதிரடியாக அதிகரித்துள்ளன. சில வாரங்களுக்கு முன்பு ஒரு பேரல் எரிபொருள் 8,500 ரூபாய் என்ற அளவில் இருந்த நிலையில், தற்போது அது 19,000 ரூபாய் வரை எகிறியுள்ளது. பொதுவாக ஒரு விமான நிறுவனத்தின் மொத்த செலவில் 25 சதவீதம் எரிபொருளுக்கே செலவிடப்படுவதால், இந்த விலையேற்றம் பயணிகளின் தலையில் சுமையாக இறக்கப்பட்டுள்ளது.
உலக அளவில் ஏஜியன் ஏர்லைன்ஸ் மத்திய கிழக்கு நாடுகளுக்கான தனது விமான சேவைகளை நிறுத்தியுள்ளது. ஏர் கனடா நிறுவனம் நியூயார்க்கிற்கு செல்லும் தினசரி நான்கு விமானங்களை அக்டோபர் 2026 வரை குறைத்துள்ளது. ஏர் பிரான்ஸ் மற்றும் கேஎல்எம் நிறுவனங்கள் தங்களது நீண்ட தூர பயணங்களுக்கான டிக்கெட் விலையை சுமார் 5,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. இதில் கே.எல்.எம் நிறுவனம் மட்டும் சுமார் 160 ஐரோப்பிய விமானங்களை ரத்து செய்துள்ளது. இந்தியாவைப் பொறுத்தவரை, ஏர் இந்தியா நிறுவனம் பயண தூரத்தின் அடிப்படையில் புதிய எரிபொருள் கூடுதல் கட்டணத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. ஏர் நியூசிலாந்து நிறுவனம் மே மற்றும் ஜூன் மாத விமானங்களைக் குறைத்து, கட்டணத்தை பல மடங்கு உயர்த்தியுள்ளது.
ஏர் டிரான்சாட் நிறுவனம் ஐரோப்பா மற்றும் கரீபியன் நாடுகளுக்கான விமான சேவைகளை 6 சதவீதம் வரை குறைத்துள்ளது. இந்தியாவின் ஆகாசா ஏர் நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானங்களுக்கு 199 ரூபாய் முதல் 1,300 ரூபாய் வரை கூடுதல் கட்டணம் வசூலிக்கிறது. அலாஸ்கா ஏர்லைன்ஸ் மற்றும் அமெரிக்கன் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்கள் லக்கேஜ் கொண்டு செல்வதற்கான கட்டணத்தை 12,000 ரூபாய் வரை உயர்த்தியுள்ளன. ஆசியானா ஏர்லைன்ஸ் நிறுவனம் எரிபொருள் செலவைக் குறைக்க 22 விமான சேவைகளை ரத்து செய்துள்ளது. கேத்தே பசிபிக் நிறுவனம் தனது 2 சதவீத விமானங்களை ரத்து செய்துள்ளதோடு, எரிபொருள் கூடுதல் கட்டணத்தை 34 சதவீதம் வரை அதிகரித்துள்ளது.
டெல்டா ஏர்லைன்ஸ் தனது பயணிகளுக்கான பேக்கேஜ் கட்டணத்தை உயர்த்தியுள்ள நிலையில், ஈஸிஜெட் நிறுவனம் எரிபொருள் விலை உயர்வால் கடும் நஷ்டத்தை எதிர்நோக்கியுள்ளது. ஹாங்காங் ஏர்லைன்ஸ் நிறுவனம் மாலத்தீவு மற்றும் நேபாளம் போன்ற நாடுகளுக்கான விமானக் கட்டணத்தை 35 சதவீதம் வரை உயர்த்தியுள்ளது. இந்தியாவின் இண்டிகோ நிறுவனம் உள்நாட்டு மற்றும் சர்வதேச வழித்தடங்களில் புதிய எரிபொருள் கட்டணத்தைச் சேர்த்துள்ளது. ஜெட் ப்ளூ ஏர்வேஸ் மற்றும் யுனைடெட் ஏர்லைன்ஸ் ஆகிய நிறுவனங்களும் லக்கேஜ் மற்றும் இதர சேவைகளுக்கான கட்டணத்தை அதிகரித்துள்ளன. லஃப்தான்சா குரூப் சுமார் 20,000 விமான சேவைகளை ரத்து செய்வதாக அறிவித்து அதிரடி காட்டியுள்ளது.
நைஜீரிய ஏர்லைன்ஸ் நிறுவனங்கள், 'எரிபொருள் விலை குறையவில்லை என்றால் அனைத்து சேவைகளையும் நிறுத்துவோம்' என எச்சரிக்கை விடுத்துள்ளன. பாகிஸ்தான் இன்டர்நேஷனல் ஏர்லைன்ஸ் சர்வதேச பயணங்களுக்கு சுமார் 8,000 ரூபாய் வரை கட்டணத்தை ஏற்றியுள்ளது. எஸ்ஏஎஸ் (SAS) நிறுவனம் ஏப்ரல் மாதத்தில் மட்டும் 1,000 விமானங்களை ரத்து செய்துள்ளது. ஸ்பிரிங் ஏர்லைன்ஸ் மற்றும் சன் எக்ஸ்பிரஸ் நிறுவனங்களும் கூடுதல் கட்டணங்களை அறிவித்துள்ளன. டிஏபி ஏர் போர்ச்சுகல், தாய் ஏர்வேஸ் மற்றும் விர்ஜின் ஆஸ்திரேலியா ஆகிய நிறுவனங்கள் தங்களது டிக்கெட் விலையை 10 முதல் 15 சதவீதம் வரை உயர்த்தியுள்ளன. வியட்நாம் ஏர்லைன்ஸ் வாரத்திற்கு 23 உள்நாட்டு விமானங்களை ரத்து செய்துள்ள நிலையில், வெஸ்ட்ஜெட் மற்றும் வோலோடியா ஆகிய நிறுவனங்களும் பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலிக்கத் தொடங்கியுள்ளன.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.