பிள்ளைகள் தங்களை முறையாக கவனிக்கவில்லை என மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாராணமக எடுத்துக் கொள்ளாமல், முறையாக விசாரணை நடத்தி, அவர்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது மாவட்ட ஆட்சியரின் கடமை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திருப்பூரைச் சேர்ந்த பாட்ஷா - ஷகிரா பேகம் தம்பதிக்கு இரண்டு ஆண், இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர். பெற்றோரை கவனிப்பதாக மூத்த மகன் முகமது தயான் அளித்த உத்தரவாதத்தின் அடிப்படையில், ஷகிரா பேகம் தனது சொத்தை, தயான் பெயரில் எழுதி வைத்தார்.
இந்த நிலையில், தன்னையும் தன் கணவரையும் முறையாக கவனிக்கவில்லை என்றும், தங்களுக்கான மருத்துவ செலவை மகள் வழங்கியதால், தயான் பெயரில் எழுதி வைத்த சொத்து பத்திரத்தை ரத்து செய்யக்கோரி திருப்பூர் ஆர்.டி.ஓக்கு ஷகிரா பேகம் விண்ணப்பித்தார்.
இந்த விண்ணப்பம் மீது விசாரணை நடத்திய ஆர்.டி.ஓ. பத்திர பதிவை ரத்து செய்து உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து முகமது தயான் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அந்த மனுவில், தன்னுடைய தாய் மற்றும் தந்தையை முறையாக கவனித்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்ரமணியம், மூத்த குடிமக்கள் பராமரிப்பு சட்டப்படி, மூத்த குடிமக்கள் கண்னியமான வாழ்க்கையை வாழ அனைத்து வசதிகளையும் செய்துகொடுக்க வேண்டும் என சுட்டிக்காட்டி உள்ளார்.
உணவு, உறைவிடம் மட்டுமே இயல்பான வாழ்க்கைக்கு போதுமானது அல்ல என்றும், அன்பும், அக்கறையும், கண்ணியத்துடன் நடத்தபட வேண்டும் என கூறிய நீதிபதி, இதை நிறைவேற்ற தவறியதாக சந்தேகம் எழுந்தால், இஷ்டதானமாக எழுதி வைத்த பத்திரத்தை ரத்து செய்ய அதிகாரிகளுக்கு அதிகாரம் உள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.
மேலும், பாதுகாப்பு மற்றும் கண்ணியத்துடன் கூடிய இயல்பான வாழ்க்கையை பெற்றோருக்கு உறுதி செய்ய வேண்டியது பிள்ளைகளின் கடமை என தெரிவித்த நீதிபதி, பிள்ளைகள் தங்களை முறையாக கவனிக்கவில்லை என மூத்த குடிமக்கள் அளிக்கும் புகாரை சாதாராணமக எடுத்துக் கொள்ளாமல, முறையாக விசாரணை நடத்தி மூத்த குடிமக்களின் வாழ்க்கை மற்றும் சொத்துகளை பாதுகாப்பது மாவட்ட ஆட்சியரின் கடமை எனவும் நீதிபதி தெரிவித்துள்ளார்.