பறக்கும் வெள்ளைக் குதிரைகள்.. மூன்று தலை நாகங்கள்! கிரேக்கப் புராணங்களின் மர்ம உலகம் பற்றித் தெரியுமா?

சுதந்திரத்தின் உச்சம் என்றும், கற்பனை உலகின் அற்புதம் என்றும் கிரேக்கர்கள் நம்பினர்...
பறக்கும் வெள்ளைக் குதிரைகள்.. மூன்று தலை நாகங்கள்! கிரேக்கப் புராணங்களின் மர்ம உலகம் பற்றித் தெரியுமா?
Published on
Updated on
2 min read

கிரேக்கப் புராணங்கள் என்பவை வெறும் கதைகள் மட்டுமல்ல; அவை மனிதனின் கற்பனைத் திறன், வீரம், கடவுள்கள் மற்றும் அமானுஷ்ய உயிரினங்களின் மீதான நம்பிக்கைகளின் தொகுப்பு என்கின்றனர் ஆய்வாளர்கள். உலகின் மிகவும் செல்வாக்கு மிக்கப் புராணங்களில் கிரேக்கக் கதைகளுக்குத் தனியிடம் உண்டு. இந்தக் கதைகளின் இன்றியமையாத அங்கமாக இருப்பது, மூன்று தலை நாகங்கள் (ஹைட்ரா), பறக்கும் குதிரைகள் (பெகாசஸ்) போன்ற கற்பனை உயிரினங்களாகும். இந்தக் கற்பனை உயிரினங்கள் ஒவ்வொன்றும், ஒரு பெரிய தத்துவத்தையும், மனித உணர்வுகளின் பிரதிபலிப்பையும் வெளிப்படுத்துகின்றன.

கிரேக்கப் புராணங்களில் மிகவும் புகழ்பெற்ற கற்பனை உயிரினங்களில் முதன்மையானது, பெகாசஸ் (Pegasus) எனப்படும் பறக்கும் வெள்ளை குதிரை ஆகும். இந்த குதிரை, கடலுக்கான கடவுளான போஸைடனுக்கும், கொடிய அரக்கியான மெடூசாவுக்கும் பிறந்ததாகக் கூறப்படுகிறது. பெகாசஸ், தூய்மை, சுதந்திரம் மற்றும் வீரம் ஆகியவற்றின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது. பெகாசஸின் மிக முக்கியமான பங்கு, வீரன் பெல்லரோஃபோனைத் தாங்கி, சிரமமான சவால்களைச் சந்தித்ததுதான். பெகாசஸ் என்றாலே, சுதந்திரத்தின் உச்சம் என்றும், கற்பனை உலகின் அற்புதம் என்றும் கிரேக்கர்கள் நம்பினர்.

இரண்டாவது மிகவும் பயங்கரமான மற்றும் பிரபலமான உயிரினம், ஹைட்ரா (Hydra) எனப்படும் மூன்று தலை நாகம் அல்லது பல தலை நாகமாகும். லெர்னியன் ஹைட்ரா என்று அழைக்கப்படும் இந்த அரக்கன், கிரேக்க வீரன் ஹெர்குலஸ்ஸால் தோற்கடிக்கப்பட முடியாதவனாகக் கருதப்பட்டது. காரணம், இந்த நாகத்தின் ஒரு தலையை வெட்டினால், அந்த இடத்தில் இரண்டு புதிய தலைகள் முளைக்கும். இது, நம்முடைய வாழ்க்கையில் இருக்கும் தீய பழக்கவழக்கங்கள் அல்லது மீள முடியாத பிரச்சினைகளைத் தீர்க்க முற்படும்போது, அது மேலும் மேலும் வளர்கிறது என்பதை உருவகப்படுத்துவதாகக் கொள்ளலாம். ஹெர்குலஸ், வெட்டிய தலையைத் தீயினால் எரித்து, புதிய தலைகள் முளைப்பதைத் தடுத்து, இறுதியாக ஹைட்ராவைக் கொன்றான். ஹைட்ரா, தீமையின் மீள முடியாத வடிவத்தைக் குறிக்கிறது.

மூன்றாவதாக, சென்டார் (Centaur) எனப்படும் உயிரினம். இது மனிதனின் மேற்பகுதியையும், குதிரையின் உடலையும் கொண்டது. சென்டார்கள், காடுகள் மற்றும் மலைகளின் காட்டுமிராண்டித்தனமான சக்தியைக் குறிப்பதாகக் கருதப்பட்டது. இவர்களில் சிலர் மிகவும் புத்திசாலிகளாகவும், ஞானிகளாகவும் இருந்தனர். உதாரணமாக, சீரோன் (Chiron) என்ற சென்டார், பல கிரேக்க வீரர்களுக்கு ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் இருந்தார். சென்டார்கள், மனிதனின் மிருக இயல்புக்கும், அறிவுக்கும் இடையே உள்ள மோதலைக் குறிப்பதாகத் தத்துவார்த்த ரீதியாகப் பார்க்கப்படுகின்றன.

இவை தவிர, உடலின் பாதிப் பகுதி பெண்ணாகவும், பாதிப் பகுதி பறவையாகவும் இருக்கும் சைரன்ஸ் (Sirens), இரட்டை உடல்களைக் கொண்ட ஜெரியன் (Geryon), சிங்கத்தின் தலை, ஆட்டின் உடம்பு மற்றும் பாம்பின் வாலைக் கொண்ட கைமேரா (Chimera) போன்ற பல கற்பனை உயிரினங்களும் கிரேக்கப் புராணங்களில் நீக்கமற நிறைந்துள்ளன. இந்த உயிரினங்கள் ஒவ்வொன்றும், இயற்கை சக்திகள், மனிதனின் ஆசைகள், பயங்கள் மற்றும் தத்துவார்த்த நம்பிக்கைகளின் உருவகமாகப் பார்க்கப்படுகின்றன.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.

logo
Malaimurasu Seithikal
www.malaimurasu.com