

பாயாசம் என்றாலே சேமியா பாயாசம், ஜவ்வரிசி பாயாசம், பருப்பு பாயாசம் தானே செய்திருக்கிறீர்கள். எப்போதும் ஒரே மாதிரியான பாயாசங்களை செய்வதை தவிர்த்து, கொஞ்சம் வித்தியாசமாக சுரைக்காய் பாயாசம் ட்ரை பண்ணிப் பாருங்க சுவை அள்ளும்....
ஏராளமான நீர் சத்துக்களும், பல்வேறு மருத்துவ குணங்களும் நிறைந்தது சுரைக்காய். ஆனால் பெரும்பாலும் சுரைக்காயை குழந்தைகள், இளைஞர்கள் விரும்பி உண்பதில்லை. அப்படிப்பட்டவர்களுக்கு இந்த சுரைக்காய் பாயாசம் ஒரு சிறப்பான தேர்வு என்றே சொல்லலாம். சரி சுரைக்காய் பாயாசம் எப்படி செய்வது இதோ உங்களுக்காக செய்முறையும், அதற்கு தேவையான பொருட்களும்.
சுரைக்காய் பாயாசம்
சுரைக்காய் - 300 கிராம் (துருவியது)
நெய் - 2 டீஸ்பூன்
காய்ச்சிய பால் - 1/2 லிட்டர்
ஏலக்காய் - 2
சர்க்கரை - 1/4 கிலோ. காயின் அளவைப் பொருத்து சர்க்கரை அளவை கூட்டியோ, குறைத்தோ சேர்த்துக் கொள்ளலாம்.
கண்டென்ஸ்டு மில்க் - 3 டேபிள் ஸ்பூன்
முந்திரி - சிறிது
உலர் திராட்சை - சிறிது
செய்முறை:
முதலில் சுரைக்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை நன்கு துருவிக் கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நெய் ஊற்றி சூடானதும், துருவிய சுரைக்காயை சேர்த்து 5 முதல் 7 நிமிடங்கள் வரை மிதமான தீயில் வைத்து நன்கு வதக்கி வேக வைக்க வேண்டும்.
அதன் பின் அதில் 1/2 லிட்டர் காய்ச்சிய பாலை ஊற்றி கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்து நன்கு வேக வைக்க வேண்டும்.
சுரைக்காய் நன்கு வெந்ததும், அதில் ஏலக்காயை தட்டி சேர்த்து, அத்துடன் சர்க்கரை மற்றும் கண்டென்ஸ்டு மில்க் சேர்த்து நன்கு கிளறி, 5 நிமிடம் குறைவான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
மற்றொரு அடுப்பில் சிறு வாணலியை வைத்து, அதில் 1 டீஸ்பூன் நெய் ஊற்றி சூடானதும் முந்திரி மற்றும் உலர் திராட்சையை சேர்த்து வறுத்து பாயாசத்தில் சேர்த்தால், சூடான சுவையான சுரைக்காய் பாயாசம் தயார்.
சுரைக்காயில் நீர்ச்சத்து, நார்ச்சத்து அதிக அளவில் நிறைந்துள்ளது. இது உடலுக்குப் பல்வேறு ஆரோக்கிய நன்மைகளைத் தருகிறது.
சுரைக்காயின் முக்கிய நன்மைகள்
உடலைக் குளிர்வித்தல்:
சுரைக்காயில் அதிகளவு நீர் இருப்பதால், உடல் சூட்டைக் தணித்து குளிர்ச்சியாக வைத்திருக்க உதவுகிறது.
செரிமானம் மற்றும் மலச்சிக்கல் நீங்கும்:
சுரைக்காயில் உள்ள நார்ச்சத்து செரிமான மண்டலத்தை சீராக வைத்து, மலச்சிக்கல், வாயுத் தொல்லை மற்றும் அஜீரணக் கோளாறுகளைப் போக்குகிறது.
உடல் எடை குறைக்க:
இதில் குறைந்த கொழுப்பு மற்றும் அதிக நீர்ச்சத்து உள்ளதால், உடல் எடையைக் குறைக்க விரும்புவோருக்கு இது சிறந்த உணவு.
இரத்த சர்க்கரை மற்றும் அழுத்தம்:
இது ரத்தத்தில் உள்ள சர்க்கரை அளவையும், இரத்த அழுத்தத்தையும் சீராக வைத்திருக்க உதவுகிறது.
மேலும் சிறுநீரக நோய்த்தொற்றுகள், நீர் எரிச்சல் மற்றும் சிறுநீர் கட்டு போன்ற பிரச்சனைகளைக் குறைக்க உதவுகிறது.
இதய ஆரோக்கியம்:
சுரைக்காயில் உள்ள பொட்டாசியம் சத்து இதயத்தின் செயல்பாட்டைப் பாதுகாக்கிறது.
கல்லீரல் செயல்பாடு:
மேலும் கல்லீரல் வீக்கத்தைக் குறைத்து, அதன் நச்சுக்களை நீக்க உதவுகிறது.
கவனிக்க வேண்டிய எச்சரிக்கை
சுரைக்காய் சாறு எடுத்து குடிப்பதோ அல்லது சமைக்கும் போதோ கவனிக்க வேண்டிய முக்கிய எச்சரிக்கை என்னவென்றால், சுரைக்காய் கசப்புச் சுவையுடன் இருந்தால், அதைச் சாப்பிடக் கூடாது. கசப்பான சுரைக்காயில் நச்சுத்தன்மை இருக்கும். எனவே சுரைக்காயை வெட்டியதும் ஒரு துண்டு சாப்பிட்டு பார்த்து, கசப்பு தன்மை இல்லாமல் இருந்தால் மட்டுமே பயன்படுத்தவும்.
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.