பென்ஷன் அட்டை தருவதாக வரும் போலி அழைப்பு… சில நிமிடங்களில் ₹5.5 லட்சம் மாயம்!

அந்த அட்டை தனக்குத் தேவையில்லை என்று கூறி முதியவர் அழைப்பைத் துண்டித்துள்ளார்.
பென்ஷன் அட்டை தருவதாக வரும் போலி அழைப்பு… சில நிமிடங்களில் ₹5.5 லட்சம் மாயம்!
Published on: 
Updated on: 
3 min read

ஓய்வூதியம் வாங்கும் முதியவர்களைக் குறிவைத்து சைபர் குற்றவாளிகள் புதிய வகையான மோசடியில் ஈடுபட்டு வருகின்றனர். வங்கியின் பெயர், சின்னம் ஆகியவற்றைப் பயன்படுத்தி அழைப்பு விடுப்பது, மூத்த குடிமக்களுக்கான சிறப்பு அட்டை வழங்குவதாக ஆசை காட்டுவது, பின்னர் செல்போனுக்கு ஒரு செயலியை அனுப்புவது எனத் திட்டமிட்டு பணத்தைத் திருடுகின்றனர். தற்போது நாடு முழுவதும் இந்த வகையான மோசடி அதிகரித்து வருவதால் ஓய்வூதியதாரர்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டிய சூழல் உருவாகியுள்ளது.

சமீபத்தில் 89 வயதான ஓய்வுபெற்ற கணக்குத் தணிக்கை அதிகாரி ஒருவர் இந்த மோசடியில் சிக்கி ரூ.5,56,626 பணத்தை இழந்துள்ளார். இவர் இந்தியாவின் தலைமை கணக்குத் தணிக்கையாளர் அலுவலகத்தில் (CAG) பணியாற்றி 1995ஆம் ஆண்டு ஓய்வுபெற்றவர். நவம்பர் 25ஆம் தேதி காலை அவருக்கு அடையாளம் தெரியாத எண்ணிலிருந்து தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. எதிர்முனையில் பேசிய நபர் கனரா வங்கியில் இருந்து பேசுவதாகவும், மூத்த குடிமக்களுக்கான சிறப்பு அட்டை வழங்கப்படுவதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால், அந்த அட்டை தனக்குத் தேவையில்லை என்று கூறி முதியவர் அழைப்பைத் துண்டித்துள்ளார்.

அதற்குச் சில நிமிடங்களிலேயே மற்றொரு எண்ணிலிருந்து வாட்ஸ்அப் அழைப்பு வந்துள்ளது. இந்த முறை அந்தக் கணக்கில் கனரா வங்கியின் சின்னம் இடம்பெற்றிருந்தது. மருத்துவச் செலவுகள் மற்றும் ரயில் பயணத்தில் சலுகைகள் கிடைக்கும் புதிய அட்டை வழங்கப்படுவதாகக் கூறியுள்ளனர். தொடர்ந்து, 'CANARA PENSION CARD UPDATE APK' என்ற பெயரில் ஒரு கோப்பையும் வாட்ஸ்அப்பில் அனுப்பியுள்ளனர். வங்கியின் பெயரும் சின்னமும் இடம்பெற்றிருந்ததால் அதை நம்பிய முதியவர் கோப்பைத் திறக்க முயன்றுள்ளார். ஆனால் அது திறக்கப்படாததால் அழைப்பைத் துண்டித்துவிட்டார். இருப்பினும், அடுத்த ஐந்து முதல் பத்து நிமிடங்களுக்குள் அவரது செல்போனுக்கு வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுக்கப்பட்டதாகத் தொடர்ந்து குறுஞ்செய்திகள் வந்துள்ளன. ஐந்து அங்கீகரிக்கப்படாத UPI பரிவர்த்தனைகள் மூலம் அவரது ஓய்வூதியக் கணக்கு மற்றும் சேமிப்புக் கணக்கிலிருந்து மொத்தம் ரூ.5.56 லட்சம் எடுக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர மாநிலம் மும்பையின் முலுண்ட் கிழக்குப் பகுதியில் நடைபெற்றுள்ளது. பாதிக்கப்பட்டவர் உடனடியாக தேசிய சைபர் குற்ற உதவி எண்ணான 1930-ஐத் தொடர்புகொண்டு புகார் அளித்துள்ளார். பின்னர் நவம்பர் 26ஆம் தேதி நவ்கர் காவல்நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. அந்த APK கோப்பு திறக்கப்படாத நிலையில் பணம் எவ்வாறு எடுக்கப்பட்டது என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. நவம்பர் 20 மற்றும் 21ஆம் தேதிகளில் புனேவில் 78 வயதான ஓய்வுபெற்ற மருத்துவர் மற்றும் அவரது மனைவி இதேபோன்ற மோசடியில் ரூ.10 லட்சத்தை இழந்துள்ளனர். வங்கியில் இருந்து பேசுவதாகக் கூறிய நபர், ஓய்வூதிய அட்டை வழங்குவதற்காகச் செயலியைப் பதிவிறக்கம் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளார். பின்னர் மனைவியின் செல்போன் திரையைப் பகிரச் செய்துள்ளனர். அதன் மூலம் செல்போனை அணுகிய மோசடிக்காரர்கள், இரண்டு வங்கிக் கணக்குகளிலிருந்தும் ஐந்து பரிவர்த்தனைகளில் பணத்தை எடுத்துள்ளனர்.

செப்டம்பர் மாதத்தில் புனே மாவட்டத்தைச் சேர்ந்த 65 வயது ஓய்வுபெற்ற ராணுவ வீரர், ஓய்வூதியச் சரிபார்ப்பு என்ற பெயரில் வந்த வாட்ஸ்அப் கோப்பைப் பதிவிறக்கம் செய்ததால் ரூ.28.7 லட்சத்தை இழந்தார். அதேபோல், அகமதாபாத்தில் அக்டோபர் மாதம் மூத்த குடிமக்கள் அட்டை வழங்குவதாகக் கூறி அனுப்பப்பட்ட இரண்டு APK கோப்புகளைத் திறந்த ஒருவர் ரூ.3.3 லட்சத்தை இழந்ததாகப் புகார் பதிவானது.

டெல்லி காவல்துறையும் நவம்பர் 21ஆம் தேதி முக்கிய தகவலை வெளியிட்டுள்ளது. கடந்த மூன்று மாதங்களில் தீங்கிழைக்கும் APK கோப்புகள் மூலம் வங்கிக் கணக்குகளைக் கைப்பற்றியது தொடர்பாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட புகார்கள் அடையாளம் காணப்பட்டதாகத் தெரிவித்துள்ளது. போலி வங்கி அதிகாரிகள் போல் நடித்து, ஓய்வூதியதாரர்களிடம் ஆயுள் சான்றிதழ் சரிபார்ப்பு, KYC புதுப்பித்தல், கடன் அட்டை வழங்குதல் போன்ற காரணங்களைக் கூறி செயலிகளைப் பதிவிறக்கம் செய்ய வைப்பதே முக்கிய வழிமுறையாக இருந்துள்ளது. இந்த மோசடி வலையமைப்பு தொடர்பாக 22 பேரை பல மாநிலங்களில் கைது செய்ததாகவும், நாடு முழுவதும் 22,139 பேர் பாதிக்கப்பட்டதாகவும் காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மோசடி எப்படி நடக்கிறது என்பதைப் புரிந்துகொள்வதும் அவசியம். APK என்பது ஆண்ட்ராய்டு செல்போன்களில் செயலிகளை நிறுவப் பயன்படுத்தப்படும் கோப்பு வடிவமாகும். மோசடிக்காரர்கள் வங்கி அல்லது அரசு அலுவலகத்தின் பெயரில் போலியான செயலிகளை அனுப்புகின்றனர். அவற்றைப் பதிவிறக்கம் செய்து தேவையற்ற அனுமதிகளை வழங்கினால், குறுஞ்செய்திகள், OTP தகவல்கள் மற்றும் செல்போனின் சில செயல்பாடுகளை அணுகும் வாய்ப்பு அவர்களுக்குக் கிடைக்கலாம். இதைப் பயன்படுத்தி வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள முடியும். இருப்பினும், மும்பைச் சம்பவத்தில் கோப்பு திறக்கப்படவில்லை என்று பாதிக்கப்பட்டவர் தெரிவித்துள்ளதால், அந்தக் குறிப்பிட்ட மோசடியில் பணம் எடுக்கப்பட்ட தொழில்நுட்ப வழிமுறை இன்னும் விசாரணைக்கு உட்பட்டுள்ளது.

கனரா வங்கியும் தனது அதிகாரப்பூர்வ இணையதளத்தில் போலி APK மற்றும் போலி ஓய்வூதிய ஆயுள் சான்றிதழ் மோசடி குறித்து எச்சரிக்கை வெளியிட்டுள்ளது. வாட்ஸ்அப், குறுஞ்செய்தி அல்லது மின்னஞ்சல் வழியாக வரும் அறிமுகமில்லாத APK கோப்புகளைப் பதிவிறக்கம் செய்ய வேண்டாம் என்றும், தெரியாத செயலிகளுக்கு SMS மற்றும் Accessibility அனுமதிகளை வழங்க வேண்டாம் என்றும் அறிவுறுத்தியுள்ளது.

ஓய்வூதியதாரர்கள் தங்களின் ஆயுள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தால், மத்திய அரசின் அதிகாரப்பூர்வ 'ஜீவன் பிரமாண்' இணையதளம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட செயலியை மட்டுமே பயன்படுத்த வேண்டும். வங்கிக் கிளைக்குச் சென்றும் சான்றிதழைச் சமர்ப்பிக்கலாம். அரசு அல்லது வங்கி அதிகாரிகள் என்று கூறி அழைப்பவர்கள் கேட்டாலும் OTP, ATM PIN, UPI PIN, வங்கிக் கணக்கு விவரங்கள் ஆகியவற்றைப் பகிரக்கூடாது.

ஒருவேளை தெரியாத செயலியைப் பதிவிறக்கம் செய்துவிட்டால் உடனடியாக இணைய இணைப்பைத் துண்டித்து, வங்கியைத் தொடர்புகொண்டு UPI மற்றும் அட்டைகளைத் தற்காலிகமாக முடக்க வேண்டும். பணம் மோசடியாக எடுக்கப்பட்டால் காத்திருக்காமல் 1930 என்ற தேசிய சைபர் குற்ற உதவி எண்ணை அழைக்க வேண்டும். www.cybercrime.gov.in இணையதளத்திலும் புகார் அளிக்கலாம்.

ஓய்வூதியம் என்பது பல ஆண்டுகள் உழைத்த பிறகு கிடைக்கும் வாழ்நாள் பாதுகாப்பு. அதை ஒரே ஒரு போலி அழைப்பின் மூலம் இழக்க வேண்டிய நிலை ஏற்படக்கூடாது. எனவே, முதியவர்களின் குடும்பத்தினரும் அவர்களுக்கு இதுபோன்ற மோசடிகள் குறித்து எடுத்துரைக்க வேண்டும். வங்கியின் பெயர் தெரிகிறது என்பதற்காகவோ, அதிகாரி போல் பேசுகிறார் என்பதற்காகவோ யாரையும் நம்பி செல்போனில் வரும் கோப்புகளைத் திறக்காதீர்கள். சந்தேகம் இருந்தால் அழைப்பைத் துண்டித்துவிட்டு, வங்கியின் அதிகாரப்பூர்வ எண்ணைத் தொடர்புகொண்டு உறுதிப்படுத்துவதே பாதுகாப்பான வழி.

உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்.