
“உயிரோட்டமுள்ள மனித ஆன்மாவை போர் ஊனப்படுத்திவிடும்” போரின் தாக்கம் அதன் பிந்திய விளைவுகளிலிருந்தே துவங்குகிறது என்பார்கள்.. பாஹல்காம் பயங்கரவாத தாக்குதலில் கணவனை இழந்த பெண் தன் கணவரின் உடலின் அருகில் அமைதியுடன் அமர்ந்திருக்கும் புகைப்படம் அனைவரின் மனதையும் உலுக்கியது.. அந்த படத்தை கிப்லி அனிமியாக மாற்றி சட்டிஸ்கர் மாநில பாஜக அரசு x தளத்தில் ஒரு பதிவிட்டிருந்தது… இந்த அனிமேஷன் பஞ்சாயத்தை கடந்த மாதமே இணையம் முழுக்க பேசி தீர்த்தாகிவிட்டது… இருப்பினும் இந்த போக்கு வரவேற்கப் படக்கூடியதா? இல்லை ஆபத்தானதா.. என்பதை பாப்போம்..
நிஜ புகைப்படத்தை அனிமேஷன் புகைப்படமாக மாற்றி தரும் AI தொழில்நுட்பம் நிகழ்காலத்தில் மிகவும் பிரபலமடைந்து வருகிறது, அனைத்து தர மக்களும் இதனை பயன்படுத்துகின்றனர். இந்த ‘Ghibli’ -ஐ உருவாக்கிய புகழ்பெற்ற இயக்குனரும், Studio Ghibli -ன் நிறுவனருமான ஹையோ மியாஸாக்கி பற்றி நீங்கள் அனைவரும் நன்கு அறிந்திருப்பீர்கள்.. ஆனால் அவர் இது ‘‘மனித வாழ்க்கைக்கு அவமானகரமான செயல்" என்று சில வருடங்களுக்கு முன்பே கூறியிருக்கிறார்.. ஏன் என்பதை இந்த முழுப்பதிவில் பார்ப்போம்..
யார் இந்த ஹையோ மியாசாக்கி?
AI ஐ ஏன் இத்துணை காத்திரமாக சாடியுள்ளார் என்பதை விரிவாக பாப்போம். இரண்டு அணுகுண்டுகளை உடலில் தாங்கிய ஜப்பானின் டோக்கியோ நகரில் பிறந்த இந்த கலைஞர் காலத்தால் அழியாத அனிமே திரைப்படங்களை உருவாக்கியுள்ளார். 50 ஆண்டுகளுக்கு மேலாக திரைத்துறையில் பணியாற்றி வரும் இவர் My Neighbour Toroto, Sprited away உள்ளிட்ட 13 படங்களை மட்டுமே உருவாக்கியுள்ளார். 83 வயதாகும் இந்த கலை வித்தகர் தனது ஒரு படத்திற்கு பல ஆண்டுகள் எடுத்துக்கொள்வார் என்பதுதான் உண்மை.
இரண்டாம் உலக போரின் காலத்தில் பிறந்த இவர், போரின் கோரத்தையும், அதனால் ஏற்படும் பன்னெடுங்கால உளவியல் சிக்கலையும் பார்த்து, உணர்ந்து வளர்ந்ததால் அதன் தாக்கம் அவரின் அனைத்து படங்களிலும் எதிரொலித்தது. இவரின் படத்தில் சித்தரிக்கப்படும் அனைத்து பெண் கதாபாத்திரங்களும் சுதந்திரமாகவும், நேர்த்தியாகவும் மிகுந்த அழகியலோடும் படைக்கப்பட்டவை. பெரும்பாலும் கதையின் முக்கிய கதாபாத்திரமாக அல்லது கதை சொல்லியாக பெண்களே இருக்கும் நடைமுறையால் நிறைந்ததே மியாசாக்கியின் உலகம்.
வணிகமயமாக்களாலும், போராலும் நிறைந்த இந்த உலகை மாய ஜால உலகாக சித்தரித்து, அதற்கெதிரான சக்தியாக குழந்தைகளை நிறுத்துகிறார் மியாசாகி. Sprited away திரைப்படத்தில் வரும் No Face பேராசைக்கும், அதிக நுகர்வு கலாச்சாரத்திற்கும் மக்கள் ஆட்பட்டிருப்பதை மிக அழகாக காட்சிப்படுத்தியிருப்பார்.
அவரின் கற்பனை உலகத்திற்கு வலு சேர்த்தது அவரின் பல ஆண்டு கால உழைப்பு தான். மனித உழைப்பையும், ஆர்வத்தையும், ஈடுபாட்டையும், அர்ப்பணிப்பையும் அடிப்படையாக கொண்டு உருவாக்கப்பட்டதுதான் Studio Ghibli. ஒரு நாளைக்கு சராசரியாக 12 மணி நேரத்திற்கு மேல் உழைக்கும் இந்த 83 வயது கலைஞர், The Wind Rises என்ற படத்தில் வரும் 4 வினாடி காட்சிக்கு ஒரு ஆண்டு 3 மாதம் உழைத்திருக்கிறார் என்று சொன்னால் நம்மால் நம்ப முடியுமா? ஆம். 96 பிரேம்கள் கொண்ட அந்த காட்சியில் வரும் அத்துணை கதாபாத்திரங்களும் உயிரோட்டத்துடன் இருப்பதை மட்டுமல்ல அந்த மக்களின் வாழ்வியல், உடை, அவர்களின் குடும்ப சூழல், அவர்கள் முகத்தில் உள்ள பதற்றம், அவசரம், தொய்வு என அனைத்தயும் காண்பித்திருப்பார்.
அத்தகு உழைப்பாளியின் பல வருட உழைப்பைத்தான் இன்று chat Gpt சில நொடிகளில் விற்றுகொண்டிருக்கிறது.
AI சாடிய மியாசாக்கி
கடந்த 2016 ஆம் ஆண்டு தொழில்நுட்ப வல்லுநர்கள் அசை பட ஓவியர்கள், வடிவமைப்பாளர்கள் நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உருவாக்கப்பட்ட ‘Gaming Animation’-ஐ மியாசாகியிடம் காண்பித்தனர். இதில் ஜாம்பி ஒன்று கோரமாக நகர்வதை போல ஒரு வீடியோவை காட்டி இது மனித கற்பனைகளுக்கு அப்பாற்பட்டது, இதன் மூலம் திகில் படங்கள் மற்றும் சுவாரஸ்யமான வீடியோ கேம்களை உருவாக்க முடியும் என்று கூறினர், இதனை பார்த்துக்கொண்டிருக்கும்போதே மியாஸாக்கி-யின் முகம் மாறுவதை அந்த காணொளியில் நம்மால் பார்க்க முடியும்,
‘இதனை யார் உருவாகியிருந்தாலும், மனித உணர்வுகள் குறித்து எந்த புரிதலும் இல்லை என்றே சொல்ல வேண்டும். இது போன்ற மோசமான விஷயங்களை உருவாக்க வேண்டும் என்றால் உருவாக்கிக்கொள்ளுங்கள், ஆனால் என்னால் ஒரு போதும் இந்த தொழில்நுட்பத்துடன் இணைந்து வேலை செய்ய முடியாது என்று மிகவும் உறுதி பட கூறியிருந்தார்.
இந்த காணொளி காட்சிதான் தற்போது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட இணைய தளங்களில் வைரலாகி கொண்டிருக்கிறது.
கலையை ஜனநாயகப் படுத்தும் செயலா இது?
Open AI - நிறுவனத்தின் CEO sam altman ஒரு மணி நேரத்தில் ஒரு மில்லியன் வாடிக்கையாளர்கள் ஸ்டூடியோ ஜிப்பிலியை பயன்படுத்துவதாக தெரிவித்துள்ளார். அதுமட்டுமின்றி ‘எங்களின் GPU உருகி வழிகிறது மக்கள் தயவு செய்து ஜிப்லியின் யன்பாட்டை குறைத்து கொள்ளுமாறும் கேட்டுக்கொண்டுள்ளார்.
மக்களின் அதீத நுகர்வு கலாச்சாரத்தின் தீவிரத்தன்மையையே இச்செயல் காட்டுகிறது. எதற்கு இதை செய்கிறோம் இதனால் என்ன விளைவு என்று ஆராயும் ஏன் யோசிக்கும் தன்மையே நம்மிடம் இல்லை என்றுதான் கூற வேண்டும். படங்களில் அனிமேஷனாக வந்த உருவங்களை நிஜ உலக புகைப்படங்களோடு பொருத்திப்பார்ப்பது ‘Fun ஆகவும், ட்ரெண்ட் ஆகவும் தோன்றலாம் உண்மையில் இது ஒரு கலை வடிவத்தின் அழிவு பாதை ஆகும். சில வருடங்களுக்கு முன்பு கையால் போஸ்டர் வரையும் கலைஞர்கள் இருந்தார்கள், புகைப்பட துறையில் நெகட்டிவ்டிபார்ட்மென்ட் என்ற துறையே இருந்தது, திரையிலும் பிலிம் ரோல் முறைதான் இருந்தது இது அத்தனைக்கும் மாற்றாக டிஜிட்டல் வடிவம் பிறந்தது, நேரத்தையும் உழைப்பையும் மிச்சப்படுத்தும் நோக்கத்தில் மக்கள் இதனை வரவேற்றனர். தொழில்நுட்பம் வளர்வதற்கு ஏற்ப தங்களையும் பரிணமித்து கொண்டனர்.
ஆனால் இதில் உள்ள நிகழ்கால சிக்கல்களை மக்கள் கவனிக்க தவறி விட்டனர் என்றே சொல்ல வேண்டும். 2022 -ல் அறிமுகப்படுத்தப்பட்ட chat Gpt -ல் நாம் கொடுக்கும் -5 லிருந்து 50 பிராம்ப்ட்டுகளுக்கு 500 மில்லி லிட்டர் தண்ணீரை உபயோகிக்கப்படுகிறது. இதனால் எவ்வளவு நிலத்தடி நீர் செலவாகும், காலநிலையில் எத்தகு மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது குறித்தெல்லாம் நமக்கு அக்கறை இல்லை. coco cola நிறுவனம் நிலத்தடியில் இருந்து உறிஞ்சும் நீருக்காக போராட்டம் நடத்தும் நாம் இதற்கு பின் உள்ள அவலத்தையும் கவனிக்க தவறுகிறோம்.
இது மியாசாக்கி என்ற தனிப்பட்ட மனிதரின் உழைப்பு சுரண்டப்படுவது மட்டுமல்ல… ஒரு கலை வடிவத்தின் சாரத்தை, பல ஆண்டு கால உழைப்பை, கூட்டு முயற்சியை, கற்பனையின் உயிரோட்டத்தை அடியோடு சிதைக்கும் செயல் ஆகும்.
ஜிப்லி கலாச்சாரத்தை எதிர்ப்பவர்களை பழமைவாதிகள், தொழில்நுட்பத்தோடு ஒத்துப்போக இயலாதவர்கள் என மிக எளிமையாக விமர்சனத்துக்குள் உள்ளாக்கப்படுகிறார்கள்.
ஆனால் ‘Technology is the Extension of Man’ மனித குல மேம்பாட்டுக்கும் வளர்ச்சிக்கும் உதவுவதே தொழில்நுட்பத்தின் நோக்கம், மனித சாரத்தை அழிப்பதல்ல.. ஆனால் உண்மையில் AI என்ன செய்கிறது? நமது நேரத்தை மிச்சப்படுத்தி அடுத்து வளர்ச்சிமிக்க ஆக்கபூர்வமான செயலுக்கு முற்றிலுமாக நம்மை நகர்த்துகிறதா? என்றால் நிச்சயம் இல்லை.
எதை எதிர்த்தாரோ..அதற்கே பலியானாரா?
போரை மிகத்தீவிரமாக எதிர்த்த மியாசகியின் ai Ghibli தொழில்நுட்பத்தை இஸ்ரேலி ராணுவம் பயன்படுத்தி ஒரு போட்டவை வெளியிட்டது.
பல்லாயிரக்கணக்கான குழந்தைகளை கொன்று குவித்த இஸ்ரேல் ராணுவம் தன் தளவாடங்களின் ராணுவத்தின் வலிமையை மியாசாக்கியின் கலை வடிவத்தை பயன்படுத்தியே பிரச்சாரம் செய்து வந்ததை என்னவென்று சொல்வது.. கணவனை இழந்து தவிக்கும் பெண்ணுக்கு தர வேண்டியது ஒரு கண்ணியமான ஆதரவும், ஆறுதலும்தான்.. மற்றவரின் உணர்வுகளில் நமது கலைத்திறமையை காட்ட வேண்டிய அவசியமும் இல்லை.
இது இதோடு நின்று விடுவதில்லை.. AI -இது போன்று நிறைய விஷயங்களை வெளியிடலாம்..ஏன் முழு நீள படத்தை எடுத்து ஆஸ்கார் விருது கூட பெறலாம்.. ஆனால் மியாசாக்கி கூறியது போல..”AI -ஆல் ஒருபோதும் மனித உணர்வுகளை புரிந்துகொள்ள முடியாது, அது வெறும் Pattern களை மட்டுமே உருவாக்கும். எனவே உலக மக்கள் தொகையில் 1% மட்டுமே உள்ள கலைஞர்களுக்கு எதிராக , அவர்களின் உழைப்பையும், அர்ப்பணிப்பையும் நீர்த்துபோகச்செய்யும் எந்த தொழில்நுட்பமும் மனித குலத்தின் எழுச்சி அல்ல .. வீழ்ச்சியே ..!
உள்ளூர் முதல் உலகம் வரை பரபரப்பான ஹாட் செய்திகளை உடனுக்குடன் அறிய மாலைமுரசு யூடியூப் சேனலை காண இங்கே கிளிக் செய்யவும்